Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 49-53

தேவன் தனது சிறப்புக்குரிய தாசனை அழைக்கிறார்

49 தொலை தூர இடங்களில் வாழும் ஜனங்களே, என்னைக் கவனியுங்கள்!
    பூமியில் வாழும் ஜனங்களே, கவனியுங்கள்!
நான் பிறப்பதற்கு முன்னரே கர்த்தர் தமக்குப் பணிபுரிய அழைத்தார்.
    நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கர்த்தர் என் பெயரைச் சொல்லி அழைத்தார்.
நான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார்.
அவர் என்னைக் கூர்மையான வாளைப்போன்று பயன்படுத்துகிறார்.
    அவர் என்னைக் காப்பாற்றுகிறார். தமது கையில் மறைக்கிறார்.
கர்த்தர் என்னைக் கூர்மையான அம்பைப்போன்று பயன்படுத்துகிறார்.
    கர்த்தர் என்னை அம்பு பையில் மறைத்து வைக்கிறார்.

கர்த்தர் என்னிடம் சொன்னார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
    நான் உனக்கு அற்புதங்களைச் செய்வேன்.”

நான் சொன்னேன், “நான் வீணாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன்.
    நான் முழுவதுமாய் என்னை வெளிப்படுத்துகிறேன். ஆனால் பயனற்றவற்றையே செய்தேன்.
நான் எனது வல்லமை முழுவதையும் பயன்படுத்துகிறேன்.
    ஆனால் உண்மையில் நான் எதையும் செய்யவில்லை.
எனவே, என்னுடன் எதைச் செய்வது என கர்த்தர் முடிவு செய்ய வேண்டும்.
    தேவன் எனது விருதினை முடிவுசெய்ய வேண்டும்.
என்னை கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார்.
    எனவே, நான் அவரது தாசனாக இருக்க முடியும்.
    நான் யாக்கோபையும் இஸ்ரவேலையும் அவரிடம் திரும்ப அழைத்துச் செல்லமுடியும்.
கர்த்தர் என்னைக் கௌரவிப்பார்.
    நான் எனது தேவனிடமிருந்து எனது பலத்தைப் பெறுவேன்,” கர்த்தர் என்னிடம் சொன்னார்,

“நீ எனக்கு மிக முக்கியமான தாசன்.
    யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய்.
ஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது.
    அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன்.
    பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.”

கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்.
    இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன்.
அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள்.
    ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள்.
அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள்.
    பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்”

இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.

இரட்சிப்பின் நாள்

கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது.
    அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன்.
நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும்.
    அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
நான் உன்னைப் பாதுகாப்பேன்.
    எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள்.
இப்போது நாடு அழிக்கப்படுகிறது.
    ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்.
நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள்,
    ‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’
இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள்,
    ‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’
ஜனங்கள் பயணம்செய்யும்போது சாப்பிடுவார்கள்.
    காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள்.
10 ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள்.
    வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது.
ஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார்.
    அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார்.
11 நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன்.
    மலைகள் தரைமட்டமாக்கப்படும்.
    தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும்.

12 “பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.”

13 வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.
    மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும்.
ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார்.
    கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.

14 ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார்.
    எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.”

15 ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது!
    ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா?இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது!
ஆனால் அவள் மறந்தாலும்
    நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது.
16 பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன்.
    நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
17 உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள்.
    ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்!
18 மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்!
    உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.”
“என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர்.
    உங்கள் பிள்ளைகள் நகைகளைப்போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள்.
    உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள்.

19 “இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள்,
    உங்கள் தேசம் பயனற்றது.
ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள்.
    உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள்.
20 நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள்.
    ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது.
    நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள்.
21 பிறகு நீ உனக்குள்ளேயே,
    ‘இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது.
நான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன்.
    நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன்.
எனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது?
    பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன்.
    இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?’”

என்று சொல்லிக்கொள்வாய்.

22 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்.
“பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன்.
    எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன்.
பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள்.
    அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள்.
23 அரசர் உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள்.
    அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள்.
அந்த அரசர்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள்.
    அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள்.
பிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள்.
    என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

24 ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது.
    ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது.
25 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான்.
    இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன்.
26 அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள்.
    ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன்.
    அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும்.
பிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
    அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.”

தங்கள் பாவத்திற்காக இஸ்ரவேல் தண்டிக்கப்படுகிறது

50 கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேல் ஜனங்களே!
    உனது தாயான எருசலேமை விவாகரத்து செய்தேன் என்று நீ சொல்கிறாய்.
ஆனால், அவளை நான் விவாகரத்து செய்தேன் என்பதை நிரூபிக்கும் பத்திரம் எங்கே உள்ளது?
    எனது பிள்ளைகளே, யாருக்காவது பணம் கடன்பட்டேனா?
எனது கடனுக்காக உங்களை விற்றேனா? இல்லை.
    நீங்கள் விற்கப்பட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செயல்களைச் செய்தீர்கள்.
    நான் உங்கள் தாயை (எருசலேம்) அனுப்பினேன். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செய்களைச் செய்தீர்கள்.
நான் வீட்டிற்கு வந்தேன்.
    அங்கே யாருமில்லை. நான் அழைத்து அழைத்துப் பார்த்தேன்.
எவரும் பதில் சொல்லவில்லை.
    நான் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று நினைத்தாயா?
நான் உனது துன்பங்களிலிருந்து உன்னைக் காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறேன்.
    பார், நான் கடலை வற்றிப்போகும்படி கட்டளையிட்டால் பிறகு அது வற்றிப்போகும்.
மீன், தண்ணீரில்லாமல் மரிக்கும்.
    அவற்றின் உடல் அழுகும்.
என்னால் வானத்தை இருளாக்க முடியும்.
    நான் துக்கத்தின் ஆடையைப்போன்று வானத்தை இருளால் இருளடையச் செய்வேன்.”

தேவனுடைய தாசன் உண்மையில் தேவனைச் சார்ந்திருப்பான்

எனது கர்த்தராகிய ஆண்டவர் போதிக்கும் திறமையை எனக்குத் தந்தார். எனவே, இப்பொழுது நான் இந்தச் சோகமான ஜனங்களுக்குப்போதிக்கிறேன். ஒவ்வொரு காலையிலும் என்னை அவர் எழுப்பி ஒரு மாணவனுக்கு போதிப்பதைப்போன்று போதிக்கிறார். எனது கர்த்தராகிய ஆண்டவர் நான் கற்றுக்கொள்ள உதவினார். நான் அவருக்கு எதிராகத் திரும்பவில்லை. நான் அவரைப் பின்பற்றுவதை விடவில்லை.. அந்த ஜனங்கள் என்னை அடிக்கும்படிவிடுவேன். எனது தாடியில் உள்ள மயிரைப் பிடித்து அவர்கள் இழுக்கும்படிவிடுவேன். அவர்கள் என்னைப்பற்றி கெட்டதாகப் பேசி என் மீது துப்பும்போது நான் எனது முகத்தை மறைக்கமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுவார். அவர்கள் சொல்லும் கெட்டவை என்னைப் பாதிக்காது. நான் பலமுள்ளவனாக இருப்பேன். நான் ஏமாறமாட்டேன் என்று எனக்குத் தெரியும்.

கர்த்தர் என்னோடு இருக்கிறார். நான் கபடமற்றவன் என்று அவர் காட்டுகிறார். எனவே, எவராலும் என்னைக் குற்றவாளி எனக் காட்ட முடியாது. நான் தவறானவன் என்று எவராவது காட்ட விரும்பினால் அவன் என்னிடம் வரட்டும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சோதித்துக்கொள்ளாலம். ஆனால் பார்! எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுகிறார். எனவே, எவரும் நான் கெட்டவன் என்று காட்டமுடியாது. அவர்கள் அனைவரும் பயனற்ற பழைய ஆடைகளைப்போன்று ஆவார்கள். பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

10 கர்த்தருக்கு மரியாதை செய்கின்ற ஜனங்கள் அவரது தாசனையும் கவனிப்பார்கள். அந்த தாசன் முழுவதும் தேவனை நம்பி என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழ்கிறான். அவன் உண்மையில் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைக்கிறான். அந்த தாசன் அவனது தேவனைச் சார்ந்துள்ளான்.

11 பார், நீங்கள் உங்களது சொந்த வழியில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் நெருப்பையும் விளக்கையும் நீங்கள் பொருத்துகிறீர்கள். எனவே, உன் சொந்த வழியில் வாழ்வாயாக. ஆனால் நீ தண்டிக்கப்படுவாய். நீங்கள் உங்கள் நெருப்பில் விழுவீர்கள், நீங்கள் எரிக்கப்படுவீர்கள். நான் அது நடக்கும்படிச் செய்வேன்.

ஆபிரகாமைப்போன்று இஸ்ரவேலர் இருக்க வேண்டும்

51 “உங்களில் சிலர் நல்வாழ்வு வாழக் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள். உதவிக்காக நீங்கள் கர்த்தரிடம் போகிறீர்கள். என்னைக் கவனியுங்கள்! உங்கள் தந்தையான ஆபிரகாமை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கன்மலையாகிய அவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்கள். ஆபிரகாம் உங்களுடைய தந்தை. நீங்கள் அவனைப் பாருங்கள்! நீங்கள் சாராளைப் பாருங்கள்! உங்களைப் பெற்றவள் அவள். நான் அழைக்கும்போது ஆபிரகாம் தனியாக இருந்தான். பிறகு நான் அவனை ஆசீர்வதித்தேன். அவன் பெரிய குடும்பமாக ஆனான். அவனிடமிருந்து ஏராளமான ஜனங்கள் வந்தனர்”.

அதே வழியில், கர்த்தர் சீயோனையும் அவளது எல்லா பாழான இடங்களையும் தேற்றுவார். அவளுக்காகவும், அவளது ஜனங்களுக்காகவும் கர்த்தர் வருத்தப்படுவார். அவளுக்காக அவர் பெரிய செயல்களைச் செய்வார். கர்த்தர் வனாந்திரத்தை மாற்றுவார். வனாந்திரம் ஏதேன் தோட்டத்தைப்போன்ற தோட்டமாகும். அந்தத் தேசம் காலியாய் இருந்தது. ஆனால் இது கர்த்தருடைய தோட்டம் போலாகும். அங்குள்ள ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் வெற்றியைக் குறித்தும், நன்றிகூறியும் பாடுவார்கள்.

“எனது ஜனங்களே! என்னைக் கவனியுங்கள்!
    எனது முடிவுகள் ஜனங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் காட்டும் வெளிச்சங்களாக இருக்கும்.
நான் நியாயமாக இருப்பதை விரைவில் காட்டுவேன். நான் விரைவில் உன்னைக் காப்பாற்றுவேன்.
    நான் எனது வல்லமையைப் பயன்படுத்தி நாடுகளை எல்லாம் நியாயம்தீர்ப்பேன்.
துரமான இடங்கள் எல்லாம் எனக்காகக் காத்திருக்கின்றன.
    அவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள என் வல்லமைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வானத்தைப் பாருங்கள்!
    கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள்
வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப்போன்றும்,
    பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப்போன்றும் ஆகும்.
பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள்.
    ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும்.
    எனது நன்மைக்கு முடிவு இராது.
நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும்.
    என் போதனைகளைப் பின்பற்றுகிற ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.
தீயவர்களுக்காக அஞ்சவேண்டாம்!
    அவர்கள் உன்னைப்பற்றிச் சொல்லும் தீயவற்றுக்கு அஞ்ச வேண்டாம்!
ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப்போன்றவர்கள்.
    அவற்றைப் பொட்டுப்பூச்சிகள் உண்ணும் அவர்கள் மரக் கட்டையைப்போலாவார்கள்.
கரையான் அவற்றை உண்ணும்.
    ஆனால், எனது நன்மை என்றென்றும் தொடரும்.
    எனது இரட்சிப்பு என்றென்றும் தொடரும்!”

தேவனுடையச் சொந்த வல்லமை அவரது ஜனங்களைக் காப்பாற்றும்

கர்த்தருடைய கையே!
    (வல்லமை) எழும்பு, எழும்பு, பலமாகு!
உனது பலத்தைப் பயன்படுத்து, நீண்ட காலத்துக்கு முன்பு நீ செய்தது போன்றும் பழங்காலத்தில் நீ செய்ததுபோன்றும் நீரே ராகாப்பைத் தோற்கடிக்க வல்லமையாக இருந்தீர்.
    நீர் அந்த பயங்கர பிராணியைத் தோற்கடித்தீர்.
10 கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்!
    கடலின் ஆழமான இடங்களில் சாலைகளை அமைத்தீர்.
    சாலையைக் கடந்த உமது ஜனங்கள் காப்பாற்றப்பட்டனர்.
11 கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்.
    அவர்கள் சீயோனுக்கு மகிழ்ச்சியோடு திரும்புவார்கள்.
அவர்கள மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
    அவர்களது மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் என்றென்றும் இருக்கிற கிரீடம்போல் இருக்கும்.
அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவார்கள்.
    அனைத்து துக்கங்களும் வெளியே போகும்.
12 கர்த்தர் கூறுகிறார், “உனக்கு ஆறுதல் தருகிற ஒருவர் நான் மட்டுமே.
    எனவே, நீங்கள் ஜனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும்.
அவர்கள் வாழவும் மரிக்கவும் கூடிய ஜனங்கள் தான்.
    அவர்கள் மானிடர்கள் மட்டுமே. புழுக்களைப்போலவே மரிக்கிறார்கள்”.

13 கர்த்தர் உன்னைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார்.
ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய்.
    எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய்.
அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.

14 சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
    அந்த ஜனங்கள் சிறைக்குள் மரித்து அழுகமாட்டார்கள்.
    அந்த ஜனங்கள் போதிய உணவைப் பெறுவார்கள்.

15 “நானே உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் கடலைக் கலக்கி அலைகளைச் செய்தேன்” (சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்).

16 “எனது தாசனே! நீ சொல்லுவதற்குரிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன். நான் எனது கைகளால் உன்னை மூடி பாதுகாப்பேன். நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உன்னைப் பயன்படுத்தி இஸ்ரவேலரிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்று சொல்லுவேன்”.

தேவன் இஸ்ரவேலைத் தண்டித்தார்

17 எழும்பு! எழும்பு!
    எருசலேமே எழும்பு!
கர்த்தர் உன் மீது மிகவும் கோபமாய் இருந்தார்.
    எனவே, நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள்.
உங்களுக்கான இந்தத் தண்டனையானது ஒரு கிண்ணம் விஷத்தை குடிக்க வேண்டியதுபோல இருந்தது.
    நீங்கள் அதைக் குடித்தீர்கள்.

18 எருசலேமில் பல ஜனங்கள் இருந்தனர். ஆனால், எவரும் அவளுக்காகத் தலைவர்கள் ஆகவில்லை. அவள் வளர்த்த அந்தப் பிள்ளைகளும் அவளை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டிகளாக வரமாட்டார்கள். 19 துன்பங்கள் எருசலேமிற்கு இரு குழுக்களாக, அதாவது, திருடுதலும் உடைத்தலும் மற்றும் பெரும் பசியும் சண்டையும் என்று வந்தது.

நீ துன்பப்படும்போது எவரும் உதவி செய்யவில்லை. எவரும் உன்மீது இரக்கம்கொள்ளவில்லை. 20 உனது ஜனங்கள் பலவீனர் ஆனார்கள். அவர்கள் தரையில் விழுந்து அங்கேயே கிடந்தார்கள். அந்த ஜனங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் மிருகங்களைப்போன்று வலைக்குட்பட்டிருந்தனர். அவர்கள் கர்த்தருடைய கோபத்திலிருந்து, மேலும் தண்டனையைப் பெற முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டனர். தேவன் மேலும் தண்டனை கொடுக்கப்போவதாய் சொன்னபோது, அவர்கள் மிகவும் பலவீனம் உடையவர்களாய் இருந்தனர்.

21 ஏழை எருசலேமே, எனக்குச் செவிகொடு! குடிகாரனைப்போன்று நீ பலவீனமாய் இருக்கிறாய். ஆனால், நீ திராட்சைரசத்தை குடிக்கவில்லை. நீ, “விஷக் கோப்பையால்” பலவீனமாக இருக்கிறாய்.

22 உனது தேவனும், கர்த்தருமாகிய ஆண்டவர் அவரது ஜனங்களுக்காகப்போரிடுவார். அவர் உன்னிடம், “பார், விஷக்கிண்ணத்தை (தண்டனை) உன்னிடமிருந்து எடுத்துவிடுகிறேன். உன்னிடமிருந்து எனது கோபத்தை நீக்கிக்கொள்கிறேன். இனிமேல் எனது கோபத்தால் நீ தண்டிக்கப்படமாட்டாய். 23 உன்னைப் பாதித்தவர்களைத் தண்டிக்க எனது கோபத்தைப் பயன்படுத்துவேன். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல முயன்றார்கள். அவர்கள், ‘எங்கள் முன்பு பணியுங்கள். நாங்கள் உன்னை மிதித்துச் செல்வோம்’ என்றனர். அவர்கள் முன்பு பணியுமாறு வற்புறுத்தினார்கள். பிறகு, உனது முதுகின்மேல் புழுதியைப்போன்று மிதித்துச் சென்றனர்! நீங்கள் நடந்து செல்வதற்கான சாலையைப்போன்று இருந்தீர்கள்.”

இஸ்ரவேல் காப்பாற்றப்படும்

52 எழும்பு, சீயோனே எழும்பு,
    மகிமையான ஆடைகளை அணிந்துகொள்!
பலத்தை எடுத்துக்கொள்! பரிசுத்தமான எருசலேமே எழுந்து நில்!
    தேவனைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளாத ஜனங்கள் மீண்டும் உனக்குள் நுழைய முடியாது!
    அந்த ஜனங்கள் சுத்தமும் பரிசுத்தமும் இல்லாதவர்கள்.
தூசியை உதறுங்கள்!
    உங்கள் அற்புதமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்!
எருசலேமே, சீயோனின் மகளே, நீங்கள் சிறையில் இருந்தீர்கள்.
    ஆனால் இப்பொழுது, உங்கள் கழுத்தில் சுற்றிக்கிடந்த சங்கிலிகளில் இருந்து விடுதலை அடைந்தீர்கள்!
கர்த்தர் கூறுகிறார், “நீங்கள் காசுக்காக விற்கப்படவில்லை.
    எனவே, நான் உன்னை விடுதலை செய்ய பணத்தைப் பயன்படுத்தமாட்டேன்.”

எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார் “என் ஜனங்கள் முதலில் எகிப்துக்கு வாழச் சென்றனர். பிறகு, அவர்கள் அடிமைகளானார்கள். பின்னர், அசீரியா அவர்களை அடிமைப்படுத்தினான். இப்போது என்ன நடந்தது என்று பார்! இன்னொரு நாடு எனது ஜனங்களை எடுத்துக்கொண்டது. என் ஜனங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நாடு என் ஜனங்களை ஆளுகின்றனர், அவர்களைப் பார்த்து நகைக்கின்றனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என்னையும் என் நாமத்தையும் ஏளனம் செய்கிறார்கள்”.

கர்த்தர் கூறுகிறார், “இது நடந்திருக்கிறது. எனவே, என் ஜனங்கள் என்னைப்பற்றி கற்றுக்கொள்வார்கள். நான் யாரென்று என் ஜனங்கள் அறிவார்கள். என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள். பிறகு அவர்கள் இதைச் சொல்கிறவர் நானே அவரென்று அறிவார்கள்.”

ஒரு தூதுவன் நற்செய்தியோடு மலைக்கு மேல் வருவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று. தூதுவன், “அங்கே சமாதானம் உள்ளது. நாம் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். சீயோனே, உங்கள் தேவனே அரசர்” என்று கூறுவதைக் கேட்பது அற்புதமான ஒன்று.

நகரக் காவலர்கள் சத்தமிடத் தொடங்கினார்கள்.
    அவர்கள் கூடிக் களித்தனர்.
ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் கர்த்தர் சீயோனுக்குத் திரும்புவதைப் பார்க்கின்றனர்.

எருசலேமே, உனது அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் மகிழும்.
    நீங்கள் கூடிக் களிப்பீர்கள்.
ஏனென்றால், கர்த்தர் எருசலேமிடம் தயவோடு உள்ளார்.
    கர்த்தர் அவரது ஜனங்களை மீட்பார்.
10 அனைத்து நாடுகளிலும் கர்த்தர் தமது பரிசுத்தமான பலத்தைக் காட்டுவார்.
    கர்த்தர் அவரது ஜனங்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதைத் தொலைதூர நாடுகள் எல்லாம் பார்க்கும்.

11 நீங்கள் பாபிலோனை விட்டுப்போங்கள்.
    அந்த இடத்தை விடுங்கள்!
ஆசாரியர்களே, தொழுகைக்குரிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.
    உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
    சுத்தமற்ற எதையும் தொடாதீர்கள்.
12 நீங்கள் பாபிலோனை விடுவீர்கள்.
    ஆனால், அவர்கள் உங்களை அவசரப்படுத்தி வெளியேற்ற முடியாது.
    நீங்கள் வெளியே ஓடும்படி அவர்கள் உங்களைப் பலவந்தப்படுத்த முடியாது.
நீங்கள் வெளியேறி நடப்பீர்கள், கர்த்தர் உங்களோடு நடப்பார். கர்த்தர் உங்கள் முன்னால் இருப்பார்.
    இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்பக்கமும் இருப்பார்.

தேவனுடைய பாடுபடுகின்ற தாசன்

13 “எனது தாசனைப் பார்! அவர் மிகவும் வெற்றிகரமாவார். அவர் மிகவும் முக்கியமாவார். எதிர்காலத்தில், ஜனங்கள் அவரைப் பெருமைபடுத்தி மரியாதை செய்வார்கள். 14 ஆனால், பலர் என் தாசனைப் பார்த்தபொழுது, அதிர்ச்சி அடைந்தனர். அவர் மனிதன் என்று கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கும் வகையில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். 15 ஆனால் மிகுதியான ஜனங்கள் தெளிவடைவார்கள். அரசர்கள் அவரைப் பார்த்து எதுவும் சொல்லமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது தாசன் பற்றிய கதையைக் கேட்கவில்லை. என்ன நடந்தது என்று பார்த்தனர். இந்த ஜனங்கள் அந்தக் கதையைக் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் புரிந்துகொண்டனர்”.

53 நாங்கள் சொல்வதை யார் உண்மையில் நம்பினார்கள்? கர்த்தருடைய தண்டனையை உண்மையில் யார் ஏற்றுக்கொண்டார்கள்?

கர்த்தருக்கு முன்னால் அவர் சிறு செடியைப்போன்று வளர்ந்தார். வறண்ட பூமியில் அவர் வேர் விட்டு வளருவது போன்றிருந்தார். அவர் சிறப்பாகக் காணப்படவில்லை. அவருக்குத் தனியான விசேஷ மகிமை காணப்படவில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க சிறப்பான உருவம் அவருக்கு இல்லை. ஜனங்கள் அவரைக் கேலி செய்தனர். அவரது நண்பர்கள் விலகினார்கள். அவர் மிகுதியான வலிகொண்ட மனிதராக இருந்தார். அவர் நோயை நன்றாக அறிந்திருந்தார். ஜனங்கள் அவரைப் பார்க்காமல் அசட்டை செய்தனர். நாம் அவரைக் கவனிக்கவில்லை.

ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். (மன்னிக்கப்பட்டோம்). ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம்.

அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை. மனிதர்கள் அவரைப் பலவந்தமாகப் பிடித்தனர், அவரை அவர்கள் நேர்மையாக நியாயந்தீர்க்கவில்லை. எவரும் அவரது எதிர்காலக் குடும்பத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு வாழ்கிறவர்களின் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டார். எனது ஜனங்களின் பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன.

10 அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார்.

11 அவர் தனது ஆத்துமாவில் பல்வேறு வகையில் துன்புறுவார். ஆனால் அவர் நடக்கும் நல்லவற்றைப் பார்ப்பார். அவர் தான் கற்றுக்கொண்டவற்றின் மூலம் திருப்தி அடைவார்.

எனவே, “எனது நல்ல தாசன் பல ஜனங்களைக் குற்றத்திலிருந்து விடுவிப்பார். அவர்களது பாவங்களை அவர் எடுத்துக்கொள்வார். 12 இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center