Chronological
கர்த்தரே ஒரே தேவன்
44 “யாக்கோபே, நீ எனது தாசன், என்னைக் கவனி! இஸ்ரவேலே, நான் உன்னைத் தேர்ந் தெடுக்கிறேன். நான் சொல்வதைக் கேள். 2 நானே கர்த்தர். நான் உன்னைப் படைத்தேன். நீ எப்படி இருக்க வேண்டுமென்று உன்னைப் படைத்தவர் நான் ஒருவரே. நீ உன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே, நான் உனக்கு உதவியிருக்கிறேன். எனது தாசனாகிய யாக்கோபே, அஞ்சாதே! யெஷூரனே, நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன்.
3 “தாகமுள்ள ஜனங்களுக்கு நான் தண்ணீர் ஊற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகளைப் பாயச்செய்வேன். உனது பிள்ளைகள்மீது எனது ஆவியையும் உனது சந்ததியார்மீது எனது ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். இது உங்கள் குடும்பத்தின்மீது பாய்கிற நீரோடை போன்றிருக்கும். 4 உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் அவர்கள் வளருவார்கள். தண்ணீர் கரையில் வளருகின்ற மரங்களைப்போல அவர்கள் வளருவார்கள்.
5 “ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் ‘யாக்கோபின்’ பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் ‘நான் கர்த்தருடையவன்’ என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’” என்ற பெயரைப் பயன்படுத்துவான்.
6 கர்த்தர் இஸ்ரவேலின் அரசர். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்! 7 என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். அந்த தெய்வம் வந்து என்னைப்போன்றவன் என்று நிரூபிக்கட்டும். இந்த ஜனங்களை நான் என்றென்றும் நிலைத்திருக்கும்படி செய்தேனே. இதுவரை என்ன நடந்தது என்று அந்த தெய்வம் எனக்குச் சொல்லட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவன் அறிந்திருந்தால் அந்த தெய்வம் எனக்கு அடையாளம் காட்டட்டும். 8 அஞ்சாதே! கவலைப்படாதே! என்ன நடக்கபோகிறது என்பதை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். நீங்களே எனது சாட்சிகள். வேறு தேவன் இல்லை. நான் ஒருவரே அந்த ஒருவர். வேறு ஒரு கன்மலை இல்லை. நானே அந்த ஒருவர் என்பதை நான் அறிவேன்”.
பொய்த் தெய்வங்கள் பயனற்றவைகள்
9 சில ஜனங்கள் சிலைகளைச் (பொய்த் தெய்வங்களை) செய்கிறார்கள். அவை வீணானவை. ஜனங்கள் அந்தச் சிலைகளை நேசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சிலைகள் பயனற்றவை. அந்த ஜனங்களே சிலைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவைகளால் பார்க்கமுடியாது. அவைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் தம் செய்கைக்கு வெட்கப்படும் அளவிற்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.
10 இந்தப் பொய்த் தெய்வங்களை யார் செய்தது? பயனற்ற இந்தச் சிலைகளைச் செய்தது யார்? 11 வேலைக்காரர்கள் இந்தச் தெய்வங்களைச் செய்தனர். அந்த வேலைக்காரர்கள் எல்லாம் மனிதர்கள், தெய்வங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் கூடி இதைப்பற்றி விவாதித்தால் இதற்காக அவர்கள் வெட்கமும் அச்சமும் அடைவார்கள்.
12 ஒரு வேலைக்காரன் கருவிகளைப் பயன்படுத்தி சூடான உலையிலே இரும்பைக் காய வைத்தான். அவன் தன் சுத்தியைப் பயன்படுத்தி உலோகத்தை அடித்ததால் அது சிலையானது. இந்த மனிதன் தனது வல்லமை வாய்ந்த கைகளைப் பயன்படுத்தினான். ஆனால், அவனுக்குப் பசி வரும்போது தனது வல்லமையை இழக்கிறான். அவன் தண்ணீர் குடிக்காவிட்டால் பலவீனன் ஆகிறான்.
13 இன்னொரு வேலைக்காரன் தனது நூலைப் பிடித்து மட்டப்பலகையால் மரத்தில் குறியிடுகிறான். எங்கே வெட்டவேண்டும் என்பதை இது அவனுக்குக் காட்டுகிறது. அவன், தனது உளியைப் பயன்படுத்தி அந்த மரத்திலிருந்து சிலையைச் செதுக்குகிறான். அவன் தனது அளவு கருவியால் அச்சிலையை அளக்கிறான். இவ்வழியில், வேலைக்காரன் சரியாக மனிதனைப்போன்றே தோன்றும்படிச் சிலையைச் செய்கிறான். மனிதனின் இந்தச் சிலை வீட்டில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை.
14 ஒருவன் கேதுரு, மருதமரம் அல்லது கர்வாலி மரத்தை வெட்டுகிறான். (அந்த மனிதன் மரங்களை வளரச் செய்வதில்லை. அந்த மரங்கள் காட்டில் தன் சொந்த பலத்தாலேயே வளர்கிறது. ஒருவன் அசோக மரத்தை நட்டால் மழை அதை வளரச்செய்யும்).
15 பிறகு, அந்த மனிதன் எரிப்பதற்காக அந்த மரங்களை வெட்டுகிறான். அவன் அந்த மரத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறான். அவன் அதனைச் சமைக்கவும், வெப்பப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் சில மரத் துண்டுகளை எரித்து தனக்காக அப்பத்தைச் சுடுகிறான். ஆனால், அவன் சில துண்டுகளில் தெய்வத்தின் சிலை செய்து அதனைத் தொழுதுகொள்கிறான். அந்த தெய்வம் மனிதனால் செய்யப்பட்ட ஒரு சிலையாகும். ஆனால், அந்த சிலைகளுக்கு முன்னால் பணிந்து வணங்குகிறான். 16 மனிதன் பாதி மரத்துண்டுகளை நெருப்பில் எரித்தான். மனிதன் அந்த நெருப்பை இறைச்சியை சமைக்கப் பயன்படுத்தினான். அதனை வயிறு நிரம்பும்வரை சாப்பிடுகிறான். மனிதன் தன்னை வெப்பப்படுத்திக்கொள்ள மரத்துண்டுகளை எரிக்கிறான். மனிதன் கூறுகிறான், “நல்லது நான் இப்போது வெப்பமாக இருக்கிறேன். என்னால் பார்க்கமுடியும் ஏனென்றால், நெருப்பிலிருந்து ஒளி வருகிறது”. 17 ஆனால், சிறு மரத்துண்டு மீதியுள்ளது எனவே மனிதன் அந்த மரத்திலிருந்து சிலை செய்து அதனை தெய்வம் என்று அழைக்கிறான். அந்த தெய்வத்திற்கு முன்பு அவன் அடிபணிந்து வணங்குகிறான். அவன் அந்த தெய்வத்தினிடம் ஜெபம் செய்து சொல்கிறான், “நீயே எனது தெய்வம். என்னைக் காப்பாற்று”.
18 அந்த ஜனங்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. காணமுடியாதபடி அவர்களது கண்கள் கட்டப்பட்டதுபோல அது இருக்கிறது. அவர்களின் இதயங்கள் புரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. 19 அந்த ஜனங்கள் இவற்றைப்பற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் தமக்குள், “நான் பாதி மரத்தை எரித்தேன். நான் நெருப்புத் துண்டுகளை எனது அப்பங்களைச் சுடவும், எனது இறைச்சியைச் சமைக்கவும் பயன்படுத்தினேன். பிறகு அந்த இறைச்சியை நான் தின்றேன். மீதியுள்ள மரத்தைப் பயன்படுத்தி இந்த அருவருப்பை செய்தேன். ஒரு மரத்துண்டை நான் தொழுதுகொண்டிருக்கிறேன்!” என்று எண்ணுவதில்லை.
20 அந்த மனிதன், தான் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை. அவன் குழம்பியிருக்கிறான். எனவே, அவனது இதயம் அவனை தவறான வழியில் செலுத்துகின்றது. அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது. அவனுக்குத் தான் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று அறிய முடியாது. அவன், “நான் பிடித்துக்கொண்டிருக்கின்ற இந்தச் சிலை பொய்த் தெய்வம்” என்று சொல்லமாட்டான்.
உண்மையான தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலுக்கு உதவுகிறார்
21 யாக்கோபே இவற்றை நினைத்துப் பார்!
இஸ்ரவேலே, நீ எனது தாசன் என்பது நினைவிருக்கட்டும்.
நான் உன்னைச் செய்தேன்.
நீ எனது தாசன். எனவே இஸ்ரவேலே என்னை மறக்காதே.
22 உனது பாவங்கள் பெரிய மேகத்தைப்போன்றிருந்தது.
ஆனால், நான் அந்தப் பாவங்களை துடைத்துவிட்டேன்.
உங்களது பாவங்கள் காற்றில் கலந்துவிடும் மேகங்களைப்போன்று மறைந்துவிட்டன.
நான் உன்னை மீட்டுக் காப்பாற்றினேன், எனவே என்னிடம் திரும்பி வா.
23 வானங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றன ஏனென்றால், கர்த்தர் பெரிய செயலைக் செய்திருக்கிறார்.
பூமி மகிழ்ச்சியோடு உள்ளது. பூமியின் தாழ்விடங்களும் மகிழ்கிறது.
மலைகள் தேவனுக்கு நன்றிசொல்லிப் பாடுகின்றன.
காட்டிலுள்ள மரங்களெல்லாம் மகிழ்ச்சியோடு உள்ளன.
ஏனென்றால், கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார்.
கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்.
24 நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கர்த்தர் படைத்தார்.
நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கர்த்தர் இதனைச் செய்தார்.
கர்த்தர் கூறுகிறார், “கர்த்தராகிய நான், எல்லாவற்றையும் செய்தேன்.
நானாகவே வானங்களை வைத்தேன்.
எனக்கு முன்னால் பூமியைப் பரப்பி வைத்தேன்”.
25 பொய்த் தீர்க்கதரிசிகள் பொய் சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் அவர்களின் தீர்க்கதரிசனங்கள் போலியானவை என்று காட்டுகிறார். கர்த்தர் மந்திரவேலை செய்பவர்களை முட்டாளாக்குகிறார். கர்த்தர் ஞானிகளைக் குழப்புகிறார். அவர்கள் தமக்கு மிகுதியாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கர்த்தர் அவர்களை முட்டாளாக்குகின்றார். 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார்.
தேவன் கோரேசை யூதாவைத் திரும்பக் கட்டத் தேர்ந்தெடுத்தார்
கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், “ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!” யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:
“நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!”
அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:
“நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்”.
27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப்போங்கள்!
நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன்.
நான் விரும்புவதை நீ செய்வாய்.
நீ எருசலேமிடம் சொல்வாய், ‘நீ மீண்டும் கட்டப்படுவாய்’
நீ தேவாலயத்திடம் கூறுவாய், ‘உனது அஸ்திபாரம் மீண்டும் கட்டப்படும்!’”
இஸ்ரவேலை விடுதலை செய்ய தேவன் கோரேசை தேர்ந்தெடுக்கிறார்
45 கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப்பற்றி இவற்றைக் கூறுகிறார்:
“நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன்.
அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன்.
நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது.
நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.”
2 கோரேசே, உனது படைகள் புறப்படட்டும். நான் உனக்கு முன்னால் செல்வேன்.
நான் மலைகளைச் சமமாக்குவேன்.
நான் நகரத்தின் வெண்கலக் கதவுகளை உடைப்பேன்.
நான் கதவுகளில் உள் இரும்புச் சட்டங்களை வெட்டுவேன்.
3 நான் உனக்கு இருளில் பாதுகாக்கப்படுகிற செல்வத்தைத் தருவேன்.
மறைக்கப்பட்டச் செல்வங்களை நான் உனக்குத் தருவேன்.
நான் இதனைச் செய்வேன்.
அதனால் நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய்!
நான் இஸ்ரவேலரின் தேவன்!
நான் பெயர் சொல்லி உன்னை அழைப்பேன்.
4 எனது தாசன் யாக்கோபுக்காக நான் இவற்றைச் செய்கிறேன்.
இஸ்ரவேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காக நான் இவற்றைச் செய்வேன்.
கோரேசே, நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
நீ என்னை அறியமாட்டாய். ஆனால் நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
5 நான் கர்த்தர்! நான் ஒருவரே தேவன்.
வேறு தேவன் இல்லை!
நான் உனது ஆடைகளை உன் மேல் போட்டேன்.
ஆனால் இன்னும் என்னை நீ அறிந்துகொள்ளவில்லை.
6 நான் இவற்றைச் செய்கிறேன்.
எனவே நான்தான் தேவன் என்பதை அனைத்து ஜனங்களும் அறிந்துகொள்வார்கள்.
கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.
வேறு தேவனில்லை!
7 நான் ஒளியையும் இருளையும் படைத்தேன்.
நான் சமாதானத்தையும் தொல்லையையும் படைத்தேன்.
நானே கர்த்தர்! நானே இவை அனைத்தையும் செய்கிறேன்.
8 “வானத்திலுள்ள மேகங்கள்,
மழையைப்போல நன்மையைப் பொழியட்டும்.
பூமி திறக்கட்டும், இரட்சிப்பு வளரட்டும்,
அதனோடு நன்மையும் வளரட்டும். கர்த்தராகிய நான் அவனைப் படைத்தேன்.”
தேவன் அவரது படைப்புகளைக் கட்டுப்படுத்துகிறார்
9 “இந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம்மைப் படைத்தவரோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மண்பானையின் உடைந்துபோன துண்டுகளைப்போன்றுள்ளார்கள். ஒருவன் மென்மையும் ஈரமுமான களிமண்ணைப் பானை செய்யப் பயன்படுத்துகிறான். அந்தக் களிமண் அவனிடம், ‘மனிதனே! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்’ என்று கேட்பதில்லை. செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் செய்தவனிடம் கேள்வி கேட்கும் உரிமை இல்லை. ஜனங்களும் இந்த களிமண்ணைப்போன்றவர்களே. 10 ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு வாழ்வு தருகிறார். அந்தப் பிள்ளைகள் அவரிடம், ‘எனக்கு ஏன் வாழ்க்கைக் கொடுத்தாய்’ என்று கேட்க முடியாது. அந்தப் பிள்ளைகள் தம் தாயிடம், ‘எங்களை ஏன் பெற்றீர்கள்’” என்று கேட்க முடியாது.
11 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அவர் இஸ்ரவேலைப் படைத்தார். கர்த்தர் சொல்கிறார்,
“நான் படைத்த என் பிள்ளைகளைக் குறித்து என்னை கேள்வி கேட்க முடியுமா?
நான் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவாயோ?
12 எனவே, பாருங்கள். நான் பூமியைப் படைத்தேன்.
இதில் வாழும் அனைத்து ஜனங்களையும் படைத்தேன்.
நான் எனது சொந்த கைகளைப் பயன்படுத்தி வானங்களைச் செய்தேன்.
வானத்தின் சகல சேனைகளுக்கும் ஆணையிட்டேன்.
13 நான் கோரேசுக்கு வல்லமையைக் கொடுத்தேன்.
எனவே, அவன் நன்மைகளைச் செய்ய வேண்டும்.
நான் அவனது வேலையை எளிமையாக்குவேன்.
கோரேசு எனது நகரத்தை மீண்டும் கட்டுவான்.
அவன் எனது ஜனங்களை விடுதலை செய்வான்.
கோரேசு எனது ஜனங்களை எனக்கு விற்கமாட்டான்.
இவற்றைச் செய்வதற்கு அவனுக்கு எதுவும் கொடுக்கமாட்டேன்.
ஜனங்கள் விடுதலைச் செய்யப்படுவார்கள். அதற்கான விலை எதுவும் இருக்காது.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
14 கர்த்தர் கூறுகிறார், “எகிப்தும் எத்தியோப்பியாவும் வளமாக உள்ளன.
ஆனால் இஸ்ரவேலே, அந்தச் செல்வத்தை நீ பெறுவாய்.
சேபாவிலுள்ள வளர்ந்த ஜனங்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள்.
அவர்கள் உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றிச் சங்கிலிகள் கிடக்கும்.
அவர்கள் உனக்கு முன்பு பணிவார்கள்.
ஜெபம் செய்வார்கள், இஸ்ரவேலே, ‘தேவன் உன்னோடு இருக்கிறார்.
வேறு தேவனில்லை.’”
15 தேவனே! நீர்தான் ஜனங்களால் பார்க்க முடியாத தேவன்,
நீர்தான் இஸ்ரவேலை மீட்கிறவர்.
16 பல ஜனங்கள் பொய்த் தெய்வங்களைச் செய்கின்றனர்.
ஆனால், அவர்கள் ஏமாந்து போவார்கள்.
அந்த ஜனங்கள் அனைவரும் அவமானப்படுவார்கள்.
17 ஆனால், கர்த்தரால் இஸ்ரவேல் காப்பாற்றப்படும்.
அந்த இரட்சிப்பு என்றென்றும் இருக்கும்!
மீண்டும் இஸ்ரவேல் அவமானப்படாது!
18 கர்த்தரே தேவன்! அவர் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
கர்த்தர் பூமியை அதனுடைய இடத்தில் வைத்தார்.
கர்த்தர் பூமியைப் படைத்ததும் அது காலியாக இருப்பதை விரும்பவில்லை.
அவர் அதனை வாழ்வதற்குரியதாகப் படைத்தார்.
“நானே கர்த்தர். வேறு தேவன் இல்லை.
19 நான் இரகசியமாக எதுவும் பேசவில்லை.
நான் சுதந்திரமாகப் பேசியிருக்கிறேன். உலகத்திலுள்ள இருளில் என் வார்த்தைகளை ஒளிக்கமாட்டேன்.
காலியான இடங்களில் என்னைத் தேடுமாறு, யாக்கோபின் ஜனங்களிடம் சொல்லவில்லை.
நானே கர்த்தர்.
நான் உண்மையைப் பேசுகிறேன்.
நான் உண்மையாக இருப்பதை மட்டும் பேசுகிறேன்.”
கர்த்தர் தாம் ஒருவரே தேவன் என்று நிரூபிக்கிறார்
20 “மற்ற நாடுகளில் இருந்து நீங்கள் தப்பித்திருக்கிறீர்கள். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து என் முன்பு வாருங்கள். (இந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கி வந்தனர். இந்த ஜனங்கள் அந்தப் பயனற்ற தெய்வங்களிடம் ஜெபம் செய்கின்றனர். ஆனால் அந்த ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியவில்லை. 21 என்னிடம் வருமாறு அந்த ஜனங்களிடம் கூறுங்கள். அவர்கள் இதைப்பற்றி கூடிப்பேசட்டும்).
“நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த இவற்றைப்பற்றி உன்னிடம் யார் கூறியது? மிக நீண்ட காலத்திற்கு முன்னரே நான் இவற்றைத் தொடர்ந்து கூறிவருகிறேன். கர்த்தராகிய நானே, இவற்றையெல்லாம் சொன்னவர். நான் ஒருவரே தேவன். என்னைப்போன்று வேறே தேவன் உண்டா? என்னைப்போன்று வேறே மீட்பரும், நீதியுள்ள தேவனும் உண்டோ? இல்லை! வேறு தேவன் இல்லை. 22 வெகு தொலைவில் வாழுகின்ற ஜனங்களே, நீங்கள் பொய்த் தெய்வங்களைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். என்னைப் பின்பற்றுவீர்களானால் காப்பாற்றப்படுவீர்கள். நானே தேவன்! நான் ஒருவரே தேவன்.
23 “எனது சொந்த வல்லமையால் நான் ஒரு வாக்குறுதி செய்கிறேன். நான் எதையாவது செய்வதாக வாக்களித்தால், அது உண்மையாக இருக்கும். நான் ஏதாவது நடக்கக் கட்டளையிட்டால், அது நடக்கும். ஒவ்வொருவரும் எனக்கு (தேவன்) முன்பு அடிபணிவதாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரும் என்னைப் பின்பற்றுவதாக வாக்களிக்க வேண்டும். 24 ‘நன்மையும் வல்லமையும் கர்த்தரிடமிருந்து மட்டும்தான் வரும்’ என்று ஜனங்கள் கூறுவார்கள்.”
சில ஜனங்கள் கர்த்தர்மேல் கோபமாயிருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய சாட்சிகள் வந்து அவருடைய செயல்களைப்பற்றிக் கூறுவார்கள். அப்போது கோபமாயிருந்த ஜனங்கள் அவமானமடைவார்கள். 25 நன்மையானதைச் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் உதவிசெய்வார், அவர்கள் தங்கள் தேவனைப்பற்றி பெரும்மிதம்கொள்வார்கள்.
பொய் தெய்வங்கள் பயனற்றவை
46 பேலும் நேபோவும் எனக்கு முன்னால் அடிபணியும். அந்தப் பொய்த் தெய்வங்கள் வெறும் சிலைகளே. மனிதர்கள் அந்தச் சிலைகளை மிருகங்களின் முதுகில் வைத்தனர். அவை சுமக்கத் தக்க சுமைகளே. அப்பொய்த் தெய்வங்கள் ஜனங்களைக் களைப்புறச் செய்வதைத்தவிர வேறெதுவும் செய்வதில்லை. 2 அந்தப் பொய்த் தெய்வங்கள் குனிந்து கீழே விழுவார்கள். அப்பொய்த் தெய்வங்கள் தப்பிக்க இயலாது. அவைகள் கைதிகளைப்போல எடுத்துச் செல்லப்படுவார்கள்.
3 “யாக்கோபின் குடும்பத்தினரே! நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலர்களில் இன்னும் உயிரோடு இருப்பவர்களே, கவனியுங்கள்! நான் உங்களைத் தாங்கியிருக்கிறேன். நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்தது முதல் நான் உங்களைத் தாங்கியிருக்கிறேன். 4 நீங்கள் பிறந்ததும், உங்களைச் சுமந்தேன். நீங்கள் முதுமை அடையும்வரை உங்களைத் தாங்குவேன். உங்கள் தலைமுடி நரைக்கும்வரை உங்களைத் தாங்குவேன். ஏனென்றால், நான் உங்களைப் படைத்தேன். நான் உங்களைத் தொடர்ந்து தாங்குவேன், உங்களைப் பாதுகாப்பேன்.
5 “என்னை வேறு எவருடனும் ஒப்பிட முடியுமா? இல்லை! எவரும் எனக்கு இணையில்லை. என்னைப் பற்றிய அனைத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. என்னைப்போன்று எதுவுமில்லை. 6 சில ஜனங்கள் பொன்னும் வெள்ளியும் கொண்டு வளத்துடன் இருக்கிறார்கள். தங்கம் அவர்களின் பைகளிலிருந்து விழுகிறது. அவர்கள் தங்கள் வெள்ளியை எடைபோடுகிறார்கள். அந்த ஜனங்கள் ஒரு கலைஞனுக்குப் பணம் கொடுத்து மரத்திலிருந்து ஒரு சிலையைச் செதுக்கி, பிறகு அந்த ஜனங்கள் அதற்கு முன்பு விழுந்து அதனைத் தொழுதுகொள்கிறார்கள். 7 அந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தோளில் வைத்து சுமக்கின்றனர். அந்தப் பொய்த் தெய்வம் பயனற்றது. ஜனங்கள் அதைச் சுமக்க வேண்டும். ஜனங்கள் தரையில் அந்தச் சிலையை வைப்பார்கள். அந்த தெய்வங்களால் நகர முடியாது. அந்தப் பொய்த் தெய்வங்களால் இடத்தை விட்டு எழுந்து நடக்க முடியாது. ஜனங்கள் அதைக் கூப்பிட்டாலும். அது பதில் சொல்லாது. அப்பொய்த் தெய்வம் ஒரு சிலை மட்டும்தான். அது ஜனங்களை அவர்களின் துன்பத்திலிருந்து காப்பாற்ற முடியாது.
8 “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் இவற்றைப்பற்றி சிந்திக்க வேண்டும். இவற்றை நினைவுபடுத்தி பலமுள்ளவர்கள் ஆகுங்கள். 9 நீண்ட காலத்திற்கு முன் நடந்ததை நினைத்துப்பாருங்கள். நான் தேவன் என்பதை நினையுங்கள். வேறு தேவன் இல்லை. அப்பொய்த் தெய்வங்கள் என்னைப்போன்று இல்லை.
10 “தொடக்க காலத்தில், நான் முடிவில் நடக்கப்போவதைப்பற்றிச் சொன்னேன். நீண்ட காலத்துக்கு முன்பு, இதுவரை நடைபெறாததைப்பற்றிச் சொன்னேன். நான் ஏதாவது திட்டமிட்டால் அது நடைபெறும். நான் செய்ய விரும்புவதைச் செய்வேன். 11 நான் கிழக்கே இருந்து ஒருவனை அழைத்துக்கொண்டிருக்கிறேன். அம்மனிதன் கழுகைப்போன்று இருப்பான். அவன் தொலைதூர நாட்டிலிருந்து வருவான். நான் செய்ய திட்டமிட்டிருப்பதை அவன் செய்வான். நான் செய்வேன் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் அதனைச் செய்வேன். நான் அவனைப் படைத்தேன். நான் அவனைக் கொண்டுவருவேன்!
12 “உங்களில் சிலர் உங்களுக்குப் பெரும் வல்லமை இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நல்லவற்றைச் செய்வதில்லை. எனக்குச் செவிகொடுங்கள்! 13 நான் நல்லவற்றைச் செய்வேன். விரைவில் நான் என் ஜனங்களைக் காப்பாற்றுவேன். நான் சீயோனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவேன். எனது அற்புதமான இஸ்ரவேலுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவேன்.”
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
47 “மண்ணிலே இறங்கிவந்து அங்கே உட்காரு!
கல்தேயரின் கன்னியே தரையில் உட்காரு!
இப்போது நீ ஆள்பவள் இல்லை!
இனிமேல் நீ மென்மையானவள் என்று உன்னை ஜனங்கள் நினைக்கமாட்டார்கள்.
2 இப்போது நீ கடினமாக வேலை செய்ய வேண்டும்.
எந்திரத்தை நீ எடுக்க வேண்டும்.
தானியங்களை அரைத்து மாவாக்கு.
உனது முக்காட்டை நீக்கிவிடு. உனது ஆடம்பர ஆடைகளை நீக்கி விடு.
உனது நாட்டை விட்டுச் சென்று விடு!
ஆண்கள் பார்க்கும்படி உன் ஆடையைத் தொடைவரை தூக்கு, ஆறுகளைக் கடந்து போ,
3 ஆண்கள் உனது உடலைப் பார்க்கட்டும்.
உடல் ஆசைக்கு உன்னைப் பயன்படுத்தட்டும்.
நீ செய்கிற கெட்டவற்றுக்கு உன்னை விலை கொடுக்கும்படி செய்வேன்.
எந்த மனிதனும் உனக்கு உதவி செய்ய வரமாட்டான்.
4 “எனது ஜனங்கள் சொல்கிறார்கள், ‘தேவன் நம்மைக் காப்பார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்’”
5 “எனவே, பாபிலோனே, அங்கே உட்காரு. அமைதலாக இரு.
கல்தேயரின் மகளே, இருளுக்குள் போ! ஏனென்றால், ‘இராஜ்யங்களின் இராணியாக இனி நீ இருக்கமாட்டாய்,’
6 “நான் எனது ஜனங்களின் மீது கோபத்தோடு இருக்கிறேன்.
அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்.
ஆனால் நான் கோபமாக இருந்தேன்.
எனவே அவர்களை முக்கியமற்றவர்களாக்கினேன்.
நான் அவர்களை உனக்குக் கொடுத்தேன்.
நீ அவர்களைத் தண்டித்துவிட்டாய்.
நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை.
வயதான ஜனங்களும் கடுமையாக வேலை செய்யும்படி நீ செய்தாய்.
7 ‘நான் என்றென்றும் வாழ்கிறேன்.
நான் எப்பொழுதும் இராணியாகவே இருப்பேன்’ என்று நீ சொன்னாய்.
அந்த ஜனங்களுக்குச் செய்த கெட்டவற்றைக்கூடக் கவனிக்கவில்லை.
என்ன நிகழும் என்று நீ நினைக்கவில்லை.
8 எனவே, மெல்லிய இயல்புடைய பெண்ணே!
இப்போது என்னைக் கவனி!
நீ பாதுகாப்பை உணருகிறாய், ‘நான் மட்டுமே முக்கியமானவள். என்னைப்போன்று முக்கியமானவள் எவருமில்லை.
நான் எப்போதும் விதவை ஆவதில்லை நான் எப்போதும் பிள்ளைகளைக் கொண்டிருப்பேன்’ என்று நீ சொல்கிறாய்.
9 இந்த இரண்டும் திடீரென்று உனக்கு நிகழும். முதலில் நீ உனது பிள்ளைகளை இழப்பாய்.
பிறகு நீ உனது கணவனை இழப்பாய்.
ஆம் இவை உனக்கு உண்மையில் நிகழும்.
உனது அனைத்து மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைக் காப்பாற்றாது.
10 நீ கெட்டவற்றைச் செய்கிறாய். ஆனாலும் நீ பாதுகாப்பாயிருப்பதாக நினைக்கிறாய்.
நீ உனக்குள், ‘நான் செய்கிற தவறுகளை எவரும் பார்ப்பதில்லை’ என நினைக்கிறாய்.
உனது ஞானமும், அறிவும் உன்னைக் காப்பாற்றும் என்று எண்ணுகிறாய்.
‘நான் ஒருத்தி மட்டுமே, என்னைப்போன்று முக்கியமானவள் எவளுமில்லை’ என்று நீ உனக்குள் நினைக்கிறாய்.
11 “ஆனால், உனக்குத் துன்பங்கள் வரும்.
அவை எப்போது வரும் என்று உனக்குத் தெரியாது.
ஆனால் அழிவு வந்துகொண்டிருக்கிறது.
நீ அந்தத் துன்பங்களைத் தடுத்திட எதுவும் செய்யமுடியாது!
என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளுமுன்னரே விரைவாக நீ அழிந்துபோவாய்.
12 உன் வாழ்வு முழுவதும் கடுமையாக உழைத்து தந்திரமும் மந்திரமும் கற்றாய்.
எனவே, உனது மந்திரத்தையும் தந்திரத்தையும் பயன்படுத்தத் தொடங்கு!
ஒருவேளை அந்தத் தந்திரங்கள் உனக்கு உதவும்.
ஒரு வேளை உன்னால் வேறு எவரையாவது பயங்காட்ட முடியும்.
13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?
நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.
உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள்.
அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும்.
குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.
15 இதுவரை நீ கடினப்பட்டு வேலை செய்துள்ள அனைத்துக்கும் இது ஏற்படும்.
உனது வாழ்க்கை முழுவதும் எவருடன் வியாபாரம் செய்தாயோ அவர்கள் உன்னை விட்டு விலகிப்போவார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் வழி போவார்கள்.
உன்னைக் காப்பாற்ற எவரும் மீதியாக இருக்கமாட்டார்கள்.”
தேவன் தனது உலகை ஆளுகிறார்
48 கர்த்தர் கூறுகிறார், “யாக்கோபின் குடும்பமே! என்னைக் கவனி!
உங்களை நீங்கள் ‘இஸ்ரவேல்’ என்று அழைக்கிறீர்கள்.
யூதாவின் குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
வாக்குறுதிகள் கொடுக்க நீங்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்துகிறீர்கள்.
இஸ்ரவேலின் தேவனை நீங்கள் துதிக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யும்போது உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லாமல் இருக்கிறீர்கள்.”
2 “ஆம் பரிசுத்தமான நகரத்தின் பிரஜைகள் அவர்கள்.
அவர்கள் இஸ்ரவேலின் தேவனைச் சார்ந்து இருக்கிறார்கள்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
3 “முன்பே நான் நடக்கப்போவதை உங்களுக்குச் சொன்னேன்.
நான் உங்களுக்கு அவற்றைப்பற்றிச் சொன்னேன்.
பிறகு, திடீரென்று அவை நடக்கும்படிச் செய்தேன்.
4 நான் அதனைச் செய்தேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுடையவர்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் சொன்ன எதையும் நீங்கள் நம்ப மறுத்தீர்கள்.
நீங்கள் மிகவும் பிடிவாதம் உடையவர்கள்.
நீங்கள் வளையாத இரும்பைப்போலவும் உறுதியான வெண்கலம் போலவும் இருக்கிறீர்கள்.
5 எனவே, நீண்ட காலத்துக்கு முன்பே நான் என்ன நடக்குமென சொன்னேன்.
அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நான் அவற்றைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். நான் இதைச் செய்தேன்.
எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள் (தெய்வங்கள்) இந்த நடபடிகளை நடக்க செய்தன’ என்று சொல்ல முடியாது.
நான் இதைச் செய்தேன்.
எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள், எங்கள் சிலைகளால் இது நிகழ்ந்தது’” என்று சொல்லமுடியாது.
தேவன் இஸ்ரவேலைச் சுத்தப்படுத்த தண்டிக்கிறார்
6 “என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள்.
எனவே, நீங்கள் இந்தச் செய்தியை பிற ஜனங்களிடம் சொல்லவேண்டும்.
இப்போது, நான் இதுவரை நீங்கள் அறியாத புதிய செய்திகளைச் சொல்லுவேன்.
7 இவை நீண்டக் காலத்திற்கு முன் நடந்ததல்ல.
இவை இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கு முன்னால் நீங்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்.
எனவே, ‘நாங்கள் ஏற்கெனவே அறிவோம்’ என்று நீங்கள் சொல்லமுடியாது.
8 ஆனாலும் வருங்காலத்தில் என்ன நடக்குமென்று இப்பொழுது, நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மறுப்பீர்கள்.
நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளமாட்டீர்கள்.
நான் சொன்ன எதையும் நீ எப்பொழுதும் கேட்பதில்லை.
நீ எப்பொழுதும் எனக்கு எதிராக இருப்பாய் என்பதை நான் தொடக்க முதலே அறிவேன்.
நீ பிறந்த நாள் முதலாகவே எனக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறாய்.
9 “ஆனால், நான் பொறுமையாக இருப்பேன்.
நான் இதனை எனக்காகச் செய்வேன்.
நான் கோபங்கொண்டு உன்னை அழிக்காததற்காக ஜனங்கள் என்னைப்போற்றுவார்கள்.
காத்திருந்ததற்காக நீ என்னைப்போற்றுவாய்.
10 “பார், நான் உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நான் உனக்குத் துன்பங்களைத் தந்து உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
11 எனக்காகவே, எனக்காகவே நான் இதனைச் செய்வேன்.
நான் முக்கியமானவன் அல்ல என்று நீ என்னை நடத்த முடியாது.
எனது துதியையும், மகிமையையும் பொய்த் தெய்வங்கள் எடுத்துக்கொள்ள விடமாட்டேன்.
12 “யாக்கோபே, என்னைக் கவனி!
இஸ்ரவேலர்களே, நான் எனது ஜனங்களாக உங்களை அழைத்தேன்.
எனவே என்னைக் கவனியுங்கள்!
நானே தொடக்கம், நானே முடிவு!
13 நான் பூமியை எனது சொந்தக் கையால் செய்தேன்!
எனது வலது கை ஆகாயத்தைச் செய்தது!
நான் அவற்றை அழைத்தால்
என் முன்னால் அவை கூடி வரும்.
14 “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள்.
என்னைக் கவனியுங்கள்.
இவை நடக்குமென்று எந்தப் பொய்த் தெய்வங்களாவது கூறினார்களா?இல்லை!
கர்த்தர் தெரிந்துகொண்ட விசேஷ மனிதன் எதை விரும்புகிறானோ அதைப் பாபிலோனுக்கும் கல்தேயருக்கும் செய்வான்.”
15 கர்த்தர் சொல்கிறார், “நான் அவனை அழைப்பேன் என்று சொன்னேன்.
நான் அவனைக் கொண்டுவருவேன். நான் அவனை வெற்றியடையச் செய்வேன்.
16 இங்கே வா, என்னைக் கவனி!
பாபிலோன் ஒரு தேசமாக ஆரம்பமாகும்போது நான் அங்கிருந்தேன்.
தொடக்கத்திலேயிருந்து நான் தெளிவாகப் பேசினேன்.
எனவே, நான் என்ன சொன்னேன் என்று ஜனங்களால் அறியமுடியும்.”
பிறகு ஏசாயா சொன்னான், “இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் அவரது ஆவியையும் இவற்றை உங்களிடம் சொல்ல அனுப்பியிருக்கிறார். 17 கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார்,
“‘நானே உனது தேவனாகிய கர்த்தர், பயனுள்ளதைச் செய்ய நான் உனக்குக் கற்பிக்கிறேன்.
நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன்.
18 நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால்,
சமாதானம் பாய்ந்து வரும் ஆற்றைப்போன்று உன்னிடம் வந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் நன்மை கடல்
அலைகள்போன்று, உன்னிடம் வந்திருக்கும்,
19 நீ எனக்குக் கீழ்ப்படிந்தால், உனக்கு நிறைய பிள்ளைகள் இருந்திருக்கும்.
அவர்கள் மணல் துகள்களைப்போன்று இருந்திருப்பார்கள்.
நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், நீ அழிக்கப்படாமல் இருந்திருப்பாய்.
என்னோடு நீ தொடர்ந்து இருந்திருப்பாய்.’
20 “எனது ஜனங்களே, பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்!
எனது ஜனங்களே, கல்தேயரை விட்டு ஓடுங்கள்!
ஜனங்களிடம் இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு கூறுங்கள்!
பூமியிலுள்ள தொலை தூர இடங்களிலும் இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.
ஜனங்களிடம் சொல்லுங்கள்.
‘கர்த்தர் அவரது தாசனாகிய யாக்கோபை மீட்டார்!’
21 கர்த்தர் அவரது ஜனங்களை வனாந்திரத்தின் வழியாக நடத்திச் செல்கிறார்.
அவர்களுக்கு எப்பொழுதும் தாகமாய் இராது! ஏனென்றால், அவரது ஜனங்களுக்காக அவர் கன்மலையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்வார்!
அவர் பாறைகளைப் பிளந்தார்! தண்ணீர் வெளியே பாய்ந்தது.”
22 ஆனால் கர்த்தர் கூறுகிறார்,
“கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!”
2008 by World Bible Translation Center