Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 35-36

தேவன் தம் ஜனங்களை ஆறுதல்படுத்துவார்

35 வறண்ட வனாந்திரம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் சந்தோஷம் அடைந்து பூவைப்போல வளரும்.

வனாந்திரம் முழுவதும் பூக்களால் நிறைந்து அதன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கும். அது பார்ப்பதற்கு வனாந்திரம் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அந்த வனாந்திரமானது, லீபனோன் காடுகளைப்போலவும், கர்மேல் மலையைப்போலவும், சாரோன் பள்ளத்தாக்குபோலவும் அழகாக மாறும். இது நிகழும் ஏனென்றால், ஜனங்களனைவரும் கர்த்தருடைய மகிமையைக் காண்பார்கள். நம் தேவனுடைய மேன்மையை ஜனங்கள் காண்பார்கள்.

பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள். ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார். குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும்.

அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.

அந்தச் சாலையின் எவ்வித ஆபத்தும் இருக்காது. ஜனங்களைக் கொல்லுகின்ற சிங்கங்கள் அந்தச் சாலையில் இருக்காது. அந்தச் சாலையில் ஆபத்தைத் தரும் மிருகங்கள் எதுவும் இராது. அந்தச் சாலை தேவனால் காப்பாற்றப்பட்டவர்களுக்கே உரியது.

10 தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.

அசீரியர்கள் யூதாவைக் கைப்பற்றுதல்

36 எசேக்கியா யூதாவின் அரசனாக இருந்தான். அசீரியாவின் அரசனாக சனகெரிப் இருந்தான். எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டில், யூதாவின் அரணாக சூழ்ந்திருந்த நகரங்களுக்கு எதிராக சனகெரிப்போரிட்டான். சனகெரிப் அந்நகரங்களைத் தோற்கடித்தான். சனகெரிப் எருசலேமிற்கு எதிராகப்போரிட அவனது தளபதியை அனுப்பினான். தளபதி லாகீசை விட்டு எருசலேமில் இருந்த எசேக்கியா அரசனிடம் சென்றான். அந்தத் தளபதி தன்னோடு வல்லமையான படையை அழைத்துச் சென்றான். தளபதியும் அவனது படையும் வண்ணார்துறையின் அருகிலுள்ள சாலைக்குச் சென்றனர். அந்தச் சாலை, மேல் குளத்திலிருந்து வரும் தண்ணீர்க் குழாயின் அருகில் இருந்தது.

எருசலேமிலிருந்து மூன்று ஆண்கள் தளபதியோடு பேச வெளியே வந்தனர். அந்த ஆண்கள், இலக்கியாவின் மகனான எலியாக்கீம், ஆசாப்பின் மகனாகிய யோவாக்கும், செப்னாவும் ஆவார்கள். எலியாக்கீம் அரண்மனை மேலாளராக இருந்தான். யோவாக் பொருளாளராக இருந்தான். செப்னா செயலாளராக இருந்தான்.

தளபதி அவர்களிடம், “பின்வருவதை நீங்கள் எசேக்கியா அரசனிடம் கூறுங்கள்:

“மகாராஜாவான, அசீரியாவின் அரசன் கூறுகிறார், நீ நம்பி இருக்கிற இந்த நம்பிக்கை என்ன? நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் வல்லமையிலும் யுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனையிலும் நம்பிக்கை வைத்தால், அது பயனற்றதாக இருக்கும். அவை வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை. எனவே, எனக்கு எதிராக நீ ஏன் போரிடுகிறாய்? இப்பொழுது நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கு உதவ யார்மேல் நீ நம்பிக்கை வைத்திருக்கிறாய்? உனது உதவிக்கு எகிப்தைச் சார்ந்து இருக்கின்றாயா? எகிப்து ஒரு உடைந்த கம்புபோலுள்ளது. உன்னைத் தாங்குவதற்கு அதனை நீ ஊன்றினால் அது உன்னைப் பாதிக்கும். உன் கையில் ஓட்டையிடும். எகிப்தின் அரசனான பார்வோன், உதவிபெறுவதற்கு எவராலும் நம்பத்தகாதவன்.

“ஆனால் நீ, ‘நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தர் மீது எங்களுக்கு உதவுமாறு நம்பிக்கை வைத்தோம்’ என்று கூறலாம். ஆனால் நான் கூறுகிறேன், எசேக்கியா கர்த்தருடைய பலிபீடங்களையும் தொழுதுகொள்வதற்குரிய உயர் இடங்களையும் அழித்துவிட்டான். எசேக்கியா யூதா மற்றும் எருசலேமிடம் இவற்றைச் சொன்னான்: ‘எருசலேமில் உள்ள இந்த ஒரே ஒரு பலிபீடத்தை மட்டும் நீங்கள் தொழுது கொள்ளவேண்டும்’.

“நீங்கள் இன்னும் போர் செய்ய விரும்பினால், எனது எஜமானரான, அசீரியாவின் அரசர் உன்னோடு இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார். அரசர் சொல்கிறார், ‘உங்களால் போருக்குக் குதிரைகளின் மீது சவாரி செய்யப்போதுமான ஆட்களைக் கண்டுகொள்ள முடியுமானால் நான் உங்களுக்கு 2,000 குதிரைகளைத் தருவேன். ஆனால் அதற்குப் பிறகும்கூட உன்னால் எனது எஜமானரின் அடிமைகளில் ஒருவனைத் தோற்கடிக்க முடியாது. எனவே, நீங்கள் ஏன் தொடர்ந்து எகிப்தின் குதிரைகளையும் இரதங்களையும் நம்பி இருக்கிறீர்கள்?

10 “‘அதோடு, நான் இந்த நாட்டிற்கு வந்து போரிட்டபோது கர்த்தர் என்னோடு இருந்தார் என்பதை நினைவுகொள்ளவேண்டும். நான் இந்த நகரங்களை அழித்தபோது கர்த்தர் என்னோடு இருந்தார். கர்த்தர் என்னிடம், ‘எழுந்து நில், இந்த நாட்டிற்குப்போ. இதனை அழித்துவிடு!’ என்று கூறினார்’” என்று கூறுங்கள்” என்றான்.

11 எருசலேமிலிருந்து வந்த எலியாக்கீம், செப்னா, யோவாக் ஆகியோர் தளபதியிடம், “தயவுசெய்து எங்களோடு அரமேய மொழியில் பேசுங்கள். எங்களோடு எங்கள் யூத மொழியில் பேசாதீர்கள். நீங்கள் யூத மொழியைப் பயன்படுத்தினால், நகர சுவர்களுக்குமேல் இருக்கிற ஜனங்கள் நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்கள்.

12 ஆனால் தளபதி, “எனது எஜமானர் இவற்றை உங்களிடமும் உங்கள் எஜமானர் எசேக்கியாவிடமும் மட்டும் கூற என்னை அனுப்பவில்லை. சுவர்களுக்கு மேல் உட்கார்ந்திருக்கிற அந்த ஜனங்களுக்கும் கூறுமாறு என்னை அனுப்பியுள்ளார். அந்த ஜனங்கள் போதுமான உணவையும் தண்ணீரையும் பெறுவதில்லை. அவர்கள் உங்களைப்போன்றே தங்கள் மலத்தை உண்ணவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் செய்வார்கள்” என்றான்.

13 பிறகு, தளபதி எழுந்து நின்று மிக உரத்தக் குரலில் யூத மெழியில் பேசினான்.

14 தளபதி சொன்னான், மகாராஜாவான அசீரியா அரசனிமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: எசேக்கியா உங்களை முட்டாளாக்கவிடாதீர்கள். அவனால் உங்களை என்னுடைய வல்லமையிலிருந்து பாதுகாக்க முடியாது! 15 எசேக்கியா, “கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள். கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார். அசீரியா அரசன் இந்த நகரத்தைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் விடமாட்டார்” என்று சொல்லும்போது அதை நம்பாதீர்கள்.

16 எசேக்கியாவிடமிருந்து வரும் அந்த வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அசீரியா அரசன் சொல்வதைக் கேளுங்கள். அசீரியா அரசன் கூறுகிறான், “நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் நகரத்தைவிட்டு வெளியே என்னிடம் வர வேண்டும். பிறகு, ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளுக்குப்போக விடுதலை பெறுவீர்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்தத் திராட்சைத் தோட்டத்தில் திராட்சைப்பழம் உண்ணும் சுதந்திரம் பெறுவீர்கள். ஒவ்வொருவரும் அவர்களது சொந்த அத்திமரத்தில் அத்திப் பழம் உண்ணும் சுதந்திரத்தைப் பெறுவீர்கள். 17 இதனை, உங்கள் தேசத்தைப்போன்ற நாட்டிற்கு நான் வந்து உங்களை அழைத்துச் செல்லும்வரை நீங்கள் செய்யலாம். அந்தப் புதிய நாட்டில் உங்களுக்கு நல்ல தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும் பெறுவீர்கள். அந்த நாட்டில் உணவும் திராட்சை வயல்களும் இருக்கும்.

18 எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படிவிடாதீர்கள். அவன் சொல்கிறான், ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்’ என்று. ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன், அசீரியாவின் வல்லமையிலிருந்து அந்த ஜனங்களை அந்நிய நாட்டு தெய்வங்கள் எவராவது காப்பாற்றினார்களா? இல்லை. 19 ஆமாத் அர்பாத் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். செப்பர்வாயீமின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். எனது வல்லமையிலிருந்து சமாரியாவின் தெய்வங்கள் தம் ஜனங்களை காப்பாற்றினார்களா? இல்லை! 20 இந்த நாடுகளில் என்னுடைய வல்லமையிலிருந்து தம் ஜனங்களைக் காப்பாற்றிய ஏதாவது ஒரு தெய்வங்களுடைய பெயரைக் கூறுங்கள். அவர்கள் அனைவரையும் நான் தோற்கடித்துவிட்டேன். எனவே, எனது வல்லமையிலிருந்து கர்த்தர் எருசலேமைக் காப்பாற்றுவாரா? இல்லை! என்கிறார்” என்றான்.

21 எருசலேமிலுள்ள ஜனங்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் தளபதிக்குப் பதில் சொல்லவில்லை. (“தளபதிக்குப் பதில் சொல்லவேண்டாம்” என்று எசேக்கியா ஜனங்களுக்கு கட்டளையிட்டிருந்தான்).

22 பிறகு அரண்மனை மேலாளரான இல்க்கியாவின் மகனான எலியாக்கீம், செயலாளரான செப்னா மற்றும் பொருளாளரான ஆசாப்பின் மகனான யோவாக் ஆகியோர், தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். (அவர்கள் துக்கமாய் இருப்பதாக காட்டினார்கள்). மூன்று பேரும் எசேக்கியாவிடம் சென்று தளபதி அவர்களுக்கு சொன்ன அனைத்தையும் கூறினார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center