Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 41

இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்

41 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான்.
    தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார்.
    பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான்.
    அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார்.
    அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.

நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
    நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன்.
    ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள்.
    அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.
    ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை.
அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள்.
    அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள்.
    அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான்.
    அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான்.
    நான் அவனை நம்பினேன்.
    ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
    நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும்.
    அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர்.
    என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.

13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள்.
    இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர்.

ஆமென்! ஆமென்!

சங்கீதம் 52

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.

52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
    நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
    உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
    நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
    உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.

நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
    அவர் உன்னை உனது வீட்டிலிருந்து [a] இழுத்து எறிவார்.
    அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
நல்லோர் இதனைக் காண்பார்கள்.
    தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
    “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
    அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.

ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
    தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
    நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
    ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

சங்கீதம் 44

கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல்

44 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
    எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
    கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
    பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
    இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
    அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
    தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.
என் தேவனே, நீர் என் அரசர்.
    நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
    உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
    என் வாள் என்னைக் காப்பாற்றாது.
தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
    எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
    உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!

ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
    நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
    யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
    எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
    தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
    நீர் எங்களை விலை பேசவுமில்லை.
13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
    அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
    தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
15 நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
    நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
    என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
    ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
    உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
    உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
    மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.
20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
    பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
    எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
    கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.
23 என் ஆண்டவரே, எழுந்திரும்!
    ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
    எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
    எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?
25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
    தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
    உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.

ஏசாயா 8:16-9:1

16 ஏசாயா, “ஒரு ஒப்பந்தத்தைச்செய்து முத்திரை இடுவோம். எதிர்காலத்திற்காக என் போதனைகளைப் பத்திரப்படுத்துங்கள். என்னைப் பின்பற்றுகிறவர்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இதனைச் செய்யுங்கள்.”

17 இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன்.

யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார்.
    அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார்.
    ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.

18 இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் நானும் எனது பிள்ளைகளும் இருக்கிறோம். சீயோன் மலையில் குடியிருக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான்.

19 சிலர், “என்ன செய்யலாம் என்பதையும் எதிர்காலம் பற்றி சொல்பவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் கேளுங்கள்” என்றனர். குறி சொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் பறவைகளைப்போன்று பேசுவார்கள். மறை பொருள் அறிந்தவர்கள் என்று கேட்பவர்கள் எண்ணும்படியாக கிசு கிசுத்து அவர்கள் பேசுவார்கள். ஆனால், நான் சொல்கிறேன் ஜனங்கள் உதவிக்காக தம் தேவனைக் கேட்க வேண்டும்! குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் என்ன செய்யலாம் என்று மரித்துபோனவர்களைக் கேட்கிறார்கள். உயிரோடு இருக்கிறவர்கள் மரித்துப்போனவர்களிடம் ஏன் இதுபோல் கேட்க வேண்டும்?

20 நீங்கள் போதனைகளையும், ஒப்பந்தத்தையும் பின்பற்ற வேண்டும். அந்தக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றாவிட்டால், பின்னர் நீங்கள் தவறான கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். (தவறான கட்டளைகள் என்பது குறிகாரர்களும் அஞ்சனக்காரர்களும் கூறுவதாகும். அக்கட்டளைகள் பயனற்றவை. அக்கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த பயனையும் பெற முடியாது).

21 நீங்கள் அந்தத் தவறான கட்டளைகளைப் பின்பற்றினால், நாட்டில் துன்பமும், பசியும் ஏற்படும். ஜனங்களுக்குப் பசி ஏற்படும். எனவே, அவர்கள் கோபங்கொண்டு தம் அரசனுக்கும் அவனது தெய்வங்களுக்கும் எதிராகப் பேசுவார்கள். பிறகு அவர்கள் தம் உதவிக்கு தேவனிடம் வேண்டுவார்கள்.

22 அவர்கள் அந்த நாட்டில் தம்மைச் சுற்றிலும் பார்த்தால், துன்பத்தையும் கடும் இருளையும் காண்பார்கள். அத்துன்பமாகிய இருள் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும். அந்த இருள் வலைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது.

ஒரு புதிய நாள் வருகிறது

கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டை தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும்.

2 பேதுரு 1:1-11

இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவிடமிருந்து, எங்களைப் போலவே மதிப்புமிக்க விசுவாசத்தைப் பெற்ற மக்களாகிய உங்களுக்கு: நம்முடைய தேவனுடைய நீதியாலும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றீர்கள். சரியானதையே அவர் செய்கிறார்.

தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக!

நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் கொடுத்திருக்கிறார்

தேவனுடைய வல்லமை இயேசுவிடம் உள்ளது. நாம் வாழ்வதற்கும், தேவனுக்கு சேவை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவரது வல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. நாம் அவரை அறிவதால் நமக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன. இயேசு தன் மகிமையாலும், கருணையினாலும் நம்மை அழைத்தார். அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். அறிவால் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கவும், சுயக்கட்டுப்பாட்டால் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், சகிப்புத்தன்மையால் தேவனுக்கான அர்ப்பணிப்பை உருவாக்கவும் முயல வேண்டும். தேவ பக்தியின் மூலம் சகோதர சகோதரிகளின் மேல் நேசமும், உங்கள் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள இந்த நேசத்தின் மூலம் அன்பை உருவாக்கவும் முயற்சி செய்யுங்கள். இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.

10 எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. 11 நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள்.

லூக்கா 22:39-53

இயேசுவின் பிரார்த்தனை(A)

39-40 இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

41 பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: 42 “பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார். 43 அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். 44 வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. 45 இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) 46 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

இயேசு கைது செய்யப்படுதல்(B)

47 இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான்.

48 ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். 49 இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். 50 சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான்.

51 இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.

52 இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 53 ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை.? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center