Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 2

யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
    ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
    கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
    அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.

ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா,
    அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
    “நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
    சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.

இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
    கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
    நீ எனக்கு குமாரன்.
நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
    பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
    நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.

10 எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
    அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
    கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
    கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.

எரேமியா 20

எரேமியா மற்றும் பஸ்கூர்

20 பஸ்கூர் என்ற பெயருள்ள ஒருவன் ஆசாரியனாக இருந்தான். கர்த்தருடைய ஆலயத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்தான். பஸ்கூர், இம்மேர் என்ற பெயருடையவனின் குமாரனாக இருந்தான். பஸ்கூர் எரேமியாவின் பிரசங்கத்தை ஆலயப் பிரகாரத்தில் வைத்துக் கேட்டான். எனவே அவன் எரேமியா தீர்க்கதரிசியை அடித்தான். ஆலயத்தில் பென்யமீனின் மேல் வாசலருகே அவனது கைகளிலும் கால்களிலும் பெரிய மரத்தடிகளால் விலங்கிட்டான். மறுநாள் பஸ்கூர் எரேமியாவை மரக் காவலில் இருந்து வெளியேற்றினான். பிறகு எரேமியா பஸ்கூரிடம் சொன்னான், “கர்த்தருக்கு உன் பெயர் பஸ்கூர் அல்ல. இப்போது கர்த்தர் உனக்கு, ஒவ்வொரு பக்கத்திலும் பயங்கரம் என்ற பெயரை வைத்துள்ளார். அதுதான் உனது பெயர். ஏனென்றால் கர்த்தர்: ‘உனக்கு உன்னையே பயங்கரமானவனாக விரைவில் செய்வேன்! நான் உன்னை உனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பயங்கரமாகச் செய்வேன். உனது நண்பர்களை சத்துருக்கள் வாளால் கொல்லுகிறதை நீ பார்ப்பாய். நான் யூதாவின் அனைத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவிடம் கொடுப்பேன். அவன் யூதாவின் ஜனங்களை பாபிலோன் நாட்டுக்குக் கொண்டுச் செல்வான். யூதாவின் ஜனங்களை அவனது படை வாள்களால் கொல்வார்கள். எருசலேம் ஜனங்கள் கடினமாக உழைத்து செல்வம் சேர்த்தனர். ஆனால், நான் அவற்றையெல்லாம் அவர்களது பகைவர்களுக்குக் கொடுப்பேன். எருசலேமில் ராஜாவுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால் நான் அந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பகைவர்களுக்குக் கொடுப்பேன். பகைவர்கள் அவற்றை எடுத்து பாபிலோன் நாட்டிற்குக் கொண்டுசெல்வார்கள். பஸ்கூர், நீயும் உன்னோடு வீட்டில் உள்ள அனைவரும் கொண்டுசெல்லப்படுவீர்கள். நீங்கள் பலவந்தமாகப் பாபிலோன் நாட்டில் வாழ வைக்கப்படுவீர்கள். நீ பாபிலோனில் மரிப்பாய். அந்த அயல்நாட்டில் நீ புதைக்கப்படுவாய். நீ உனது நண்பர்களுக்குப் பொய்யைப் பிரச்சாரம் செய்தாய். நீ இவை நிகழாது என்று சொன்னாய். ஆனால், உனது அனைத்து நண்பர்களும் மரித்து பாபிலோனில் புதைக்கப்படுவார்கள்.’”

எரேமியாவின் ஐந்தாவது முறையீடு

கர்த்தாவே, நீர் என்னிடம் தந்திரம் செய்தீர்.
    நான் ஒரு முட்டாளாக இருந்தேன்.
நீர் என்னைவிட பலமுள்ளவர்.
    எனவே நீர் வென்றீர்.
நான் வேடிக்கைக்குரிய பொருளானேன்.
    ஜனங்கள் என்னைப் பார்த்து சிரித்தனர்.
    நாள் முழுவதும் என்னை வேடிக்கை செய்தனர்.
ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது கதறுகிறேன்.
    நான் எப்பொழுதும் வன்முறை மற்றும் பேரழிவு பற்றி சத்தமிடுகிறேன்.
    நான் கர்த்தரிடமிருந்து பெற்ற வார்த்தையைப்பற்றி ஜனங்களிடம் சொல்கிறேன்.
ஆனால், ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்;
    என்னை வேடிக்கை செய்கிறார்கள்.
சில நேரங்களில் நான் எனக்குள் சொல்கிறேன்.
“நான் கர்த்தரைப்பற்றி மறப்பேன்.
    நான் மேலும் கர்த்தருடைய நாமத்தால் பேசமாட்டேன்!”
ஆனால் நான் இதனைச் சொன்னால், பிறகு கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது,
    எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது!
எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக்கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்!
    இறுதியாக அதனை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் ஆகிறது.
10 ஜனங்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதை நான் கேட்கிறேன்.
    எங்கெங்கும் என்னைப் பயப்படுத்தும் செய்தியைக் கேட்கிறேன்.
    என் நண்பர்களும் கூட, “அவனைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நான் தவறு செய்வேன் என்று காத்திருக்கிறார்கள்.
    அவர்கள், “எங்களைப் பொய் சொல்லவிடுங்கள்.
அவன் தீயவற்றைச் செய்தான் என்று சொல்லவிடுங்கள்.
    நாங்கள் எரேமியாவிடம் தந்திரம்செய்ய முடியும்.
    பிறகு அவனைப் பெறுவோம்.
    இறுதியாக நாங்கள் அவனைத் தொலைத்து ஒழிப்போம்.
    பிறகு அவனை இறுகப்பிடிப்போம்.
    அவன் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக்கொள்வோம்” என்றார்கள்.
11 ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்;
    கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார்.
எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள்.
    அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள்.
அவர்கள் ஏமாந்துப் போவார்கள்.
    அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.
ஜனங்கள் அந்த அவமானத்தை
    என்றென்றும் மறக்கமாட்டார்கள்.

12 சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நீர் நல்ல ஜனங்களை சோதிக்கிறீர்.
    ஒருவனின் மனதை நீர் பார்க்கிறீர்.
அந்த ஜனங்களுக்கு எதிரான எனது வாதங்களை நான் உம்மிடம் சொன்னேன்.
    எனவே அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நீர் அளிப்பதை என்னைப் பார்க்கப்பண்ணும்.
13 கர்த்தரிடம் பாடுங்கள்! கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் ஏழைகளின் வாழ்வைக் காப்பாற்றுவார்!
    அவர் அவர்களைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவார்!

எரேமியாவின் ஆறாவது முறையீடு

14 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக!
    என் தாய் என்னைப் பெற்ற நாளை ஆசீர்வதிக்க வேண்டாம்.
15 நான் பிறந்துவிட்ட செய்தியை என் தந்தையிடம் சொன்னவன் சபிக்கப்படட்டும்.
    “உனக்கொரு குமாரன் பிறந்திருக்கிறான்,
    அவன் ஒரு ஆண்பிள்ளை” என்று அவன் சொன்னான்.
அவன் அந்தச் செய்தியைச் சொல்லி
    என் தந்தையை மிகவும் மகிழச் செய்தான்.
16 கர்த்தர் அழித்துப்போட்ட பட்டணங்களைப் போன்று அந்த மனிதன் ஆவானாக.
    கர்த்தர் அந்தப் பட்டணங்கள் மீது எவ்வித இரக்கமும் கெள்ளவில்லை.
காலையில் அம்மனிதன் போரின் ஒலிகளைக் கேட்கட்டும்.
    மதிய வேளையில் அவன் போர்க்கதறல்களைக் கேட்கட்டும்.
17 ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது
    அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை.
அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால்
    என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும்.
    நான் பிறந்திருக்கவேமாட்டேன்.
18 நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்?
    நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான்.
    என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.

லூக்கா 18:18-30

செல்வந்தனும் இயேசுவும்

(மத்தேயு 19:16-30; மாற்கு 10:17-31)

18 ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

19 இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 20 ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’”(A) என்றார்.

21 ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.

22 இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். 23 ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான்.

24 அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! 25 ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.

மீட்கப்படக்கூடியவர் யார்?

26 மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.

27 பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.

28 பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான்.

29 இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். 30 இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center