Revised Common Lectionary (Semicontinuous)
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
கர்த்தருக்கு ஒரு ஜெபம்
5 கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும்.
எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
2 எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று.
எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
3 நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம்.
எங்களுக்குத் தந்தை இல்லை.
எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
4 நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது.
நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
5 எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம்.
நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
6 நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
7 எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர்.
இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள்.
இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
8 அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
9 நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
10 எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது.
எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
11 பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர்.
யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
12 பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர்.
எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
13 பகைவர்கள் எங்கள் இளைஞர்களை
எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர்.
எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால்
கீழே இடறி விழுந்தார்கள்.
14 மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை.
இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
15 எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை.
எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது.
எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
17 இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது.
எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
18 சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது.
சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
19 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர்,
உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
20 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர்.
எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
21 கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும்.
நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம்.
எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
22 நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே.
எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?
தேவ அதிகாரம் பெற்ற இயேசு
19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.
22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.
24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். 25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.
28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.
2008 by World Bible Translation Center