Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 6

செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
    என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
    என்னைக் குணமாக்கும்!
    என் எலும்புகள் நடுங்குகின்றன.
என் முழு உடம்பும் நடுங்குகிறது.
    கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
    நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
    மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
    எனவே என்னை நீர் குணமாக்கும்!

கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
    என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
    உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
    வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
    தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.

தீயோரே அகன்று போங்கள்!
    ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
    கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.

10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
    ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.

2 இராஜாக்கள் 7:3-10

ஆராமிய முகாம் காலியானதைக் கண்டுபிடித்த தொழுநோயாளிகள்

நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர்பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர்.

எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்! ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், “ஏத்திய மற்றும் எகிப்திய அரசர்களின் துணையுடன் இஸ்ரவேல் அரசன் நம்மோடு போர் செய்யவருகிறான்!” என்று பேசிக் கொண்டனர்.

அதனால் அவர்கள் (பயந்து) அன்று மாலையே ஓடிவிட்டனர். அப்போது கூடாரங்கள், குதிரைகள், கழுதைகள் முகாமில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் தம் உயிருக்காக ஓடிவிட்டனர்.

பகை முகாம்களில் தொழுநோயாளிகள்

முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர். பிறகு அவர்கள் தங்களுக்குள், “நாம் தவறு செய்கிறோம்! இன்று நம்மிடம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் அமைதியாக இருக்கிறோம். விடியும்வரை இவ்வாறு இருந்தால் தண்டிக்கப்படுவோம். எனவே இப்போது அரசனுடைய வீட்டில் இருக்கிற ஜனங்களிடம் சொல்வோம்” என்று சொல்லிக்கொண்டனர்.

தொழுநோயாளிகள் சொன்ன நற்செய்தி

10 எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர்.

1 கொரி 10:14-11:1

14 என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள். 15 நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 16 நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும். 17 ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம்.

18 இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா. 19 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு முக்கியத்துவம் உடையது என்று சொல்ல நான் முன் வரவில்லை. விக்கிரகம் ஒரு குறிப்பிடத்தக்க பொருள் எனவும் நான் கூறவில்லை. 20 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பொருள்கள் பிசாசுகளுக்கே கொடுக்கப்படுகின்றன, தேவனுக்கல்ல. நீங்கள் பிசாசுகளோடு எந்தப் பொருளையும் பகிர்ந்துகொள்வதை நான் விரும்பமாட்டேன். 21 கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும் பிசாசுகளின் பாத்திரத்திலும் நீங்கள் பருக முடியாது. கர்த்தரின் மேசையிலும் பிசாசுகளின் மேசையிலும் உங்களால் உண்ண முடியாது. 22 கர்த்தரை எரிச்சல் கொள்ளச் செய்யலாமா? நாம் அவரைவிட பலசாலிகளா? இல்லை.

உங்கள் சுதந்திரம் எதற்கு?

23 “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை. 24 தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.

25 சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுங்கள். சரி அல்லது தவறு என்பது பற்றி (அதைச் சாப்பிடுவது தொடர்பாக) எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள். 26 “இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.” [a] ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.

27 அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள். 28 ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது. 29 நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன். 30 நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.

31 எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள். 32 யூதர்கள், கிரேக்கர்கள் அல்லது தேவனுடைய சபையார் தவறிழைக்கும்படிச் செய்யவைக்கிற எந்தச் செயலையும் செய்யாதீர்கள். 33 நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.

11 நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center