Revised Common Lectionary (Semicontinuous)
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
41 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான்.
தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
2 கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார்.
பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான்.
அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
3 அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார்.
அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
4 நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன்.
ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
5 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள்.
அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
6 சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.
ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை.
அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள்.
அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
7 என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள்.
அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
8 அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான்.
அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
9 என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான்.
நான் அவனை நம்பினேன்.
ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும்.
அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர்.
என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள்.
இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர்.
ஆமென்! ஆமென்!
பாபிலோனிலிருந்து தூதுவர்கள்
39 அந்த நேரத்தில், பலாதானின் குமாரனான மெரோதாக் பலாதான் பாபிலோனின் ராஜாவாக இருந்தான். எசேக்கியாவிற்கு மெரோதாக் கடிதங்களையும், அன்பளிப்புகளையும் அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருந்து குணம் பெற்றதை மெரோதாக் கேள்விப்பட்டே அன்பளிப்புகளை அனுப்பினான். 2 இந்த அன்பளிப்புகள் எசேக்கியாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. எனவே, எசேக்கியா தனது பொக்கிஷ சாலையிலுள்ள விலையுயர்ந்தவற்றை மெரோதாக்கின் ஆட்கள் பார்வையிட அனுமதித்தான். அந்த ஆட்களிடம் எசேக்கியா தனது செல்வங்களான வெள்ளி, தங்கம், எண்ணெய்வளம், விலைமதிப்புள்ள வாசனைப் பொருட்கள் என அனைத்தையும் காட்டினான். பிறகு அவன் போருக்குப் பயன்படுத்தும் வாள்கள் மற்றும் கேடயங்களையும் காட்டினான். தான் பாதுகாத்து வைத்திருந்த அனைத்தையும் அவன் அவர்களுக்குக் காட்டினான். அவன் தனது வீட்டிலும், தனது நாட்டிலும் உள்ள எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான்.
3 தீர்க்கதரிசியான ஏசாயா, ராஜாவாகிய எசேக்கியாவிடம் சென்று, “இந்த ஆட்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “வெகு தொலைவிலுள்ள நாட்டிலிருந்து இவர்கள் வந்தார்கள். இவர்கள் பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று கூறினான்.
4 எனவே ஏசாயா அவனிடம் கேட்டான், “உனது வீட்டில் இவர்கள் என்ன பார்த்தார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “இவர்கள் எனது அரண்மனையில் உள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் எனது செல்வம் முழுவதையும் காட்டினேன்” என்று கூறினான்.
5 ஏசாயா எசேக்கியாவிடம், “சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனி. 6 எதிர்காலத்தில், உன் அரண்மனையிலுள்ள அனைத்தும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்த உன்னிடமுள்ள அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லா செல்வமும் வெளியே எடுக்கப்படும். எதுவும் விடுபடாது! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதனைக் கூறினார். 7 பாபிலோனின் ராஜா உனது சொந்த குமாரர்களை எடுத்துச் செல்வான்! பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் உனது குமாரர்கள் வேலைக்காரர்களாக இருப்பார்கள்” என்றான்.
8 எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தி நன்றாக உள்ளது” என்று கூறினான். (எசேக்கியா இதனைச் சொன்னான். ஏனென்றால், அவன், “நான் ராஜாவாக இருக்கும்போது தொல்லைகள் இல்லாமல் சமாதானம் இருக்கும்” என்று எண்ணினான்).
சீமோனின் மாமி குணமடைதல்
(மத்தேயு 8:14-17; மாற்கு 1:29-34)
38 இயேசு ஜெப ஆலயத்தில் இருந்து சென்றார். அவர் சீமோனின்[a] வீட்டிற்குச் சென்றார். சீமோனின் மாமியார் மிகவும் உடல் நலமின்றி இருந்தாள். அவளுக்கு கடும் காய்ச்சலாய் இருந்தது. அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு எதையேனும் செய்யும்படியாக மக்கள் இயேசுவை வேண்டினர். 39 இயேசு அவளருகே சென்று நின்று, அவள் நோயைக் குணமாகும்படியாய் கட்டளையிட்டார். நோய் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆரம்பித்தாள்.
பலரையும் குணமாக்குதல்
40 கதிரவன் மறையும் சமயத்தில் மக்கள் தம் நோயுற்ற நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு வகை நோய்களால் துன்புற்றனர். ஒவ்வொரு நோயுற்ற மனிதனையும் அவரது கைகளால் தொட்டு இயேசு குணமாக்கினார். 41 பிசாசின் அசுத்த ஆவிகள் பலரிடமிருந்து வெளியேறின. அவை “நீர் தேவனுடைய குமாரன்” எனக் கூக்குரலிட்டன. ஆனால் அவை பேசாமல் இருக்கும்படியாக அந்த ஆவிகளை இயேசு வன்மையாகக் கண்டித்தார். இயேசுவே கிறிஸ்து என்று அவை அறிந்திருந்தன.
2008 by World Bible Translation Center