Revised Common Lectionary (Semicontinuous)
33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
17 பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த அரசர்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் அரசன் புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு அரசனின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)
மெல்கிசேதேக்
18 சாலேமின் அரசனாகிய மெல்கிசேதேக்கும் ஆபிராமைச் சந்திக்கப் போனான். இவன் உன்னதமான தேவனின் ஆசாரியன். இவன் அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்தான். 19 மெல்கிசேதேக் ஆபிராமை ஆசீர்வாதம் செய்து,
“ஆபிராமே, வானத்தையும் பூமியையும் படைத்த
உன்னதமான தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
20 நாம் உன்னதமான தேவனைப் போற்றுவோம்.
உன் பகைவர்களை வெல்ல உனக்கு தேவன் உதவினார்” என்றான்.
போரில் கைப்பற்றியவற்றில் பத்தில் ஒரு பங்கை ஆபிராம் மெல்கிசேதேக்கிற்குக் கொடுத்தான். 21 பிறகு சோதோமின் அரசன் ஆபிராமிடம், “இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக்கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்” என்றான்.
22 ஆனால் ஆபிராமோ சோதோம் அரசனிடம், “நான் உன்னதமான தேவனாகிய கர்த்தரிடம் வாக்குப் பண்ணியிருக்கிறேன். வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான தேவனுக்கு முன்பாக என் கைகள் சுத்தமாயிருக்கிறது. 23 உனக்குரிய எதையும் நான் வைத்திருக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறேன். நான் உனக்குரிய ஒரு நூல் அல்லது பாதரட்டையின் சிறு வாரையாகிலும் கூட ஏற்கமாட்டேன். ‘நான் ஆபிராமைப் பணக்காரன் ஆக்கினேன்’ என்று நீ சொல்வதை நான் விரும்ப மாட்டேன். 24 என்னுடைய இளைஞர்கள் உண்பதற்கான உணவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் பங்கினைக் கொடுத்துவிடு. நாம் போரில் வென்ற பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள். சிலவற்றை ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகியவர்களுக்குக் கொடு. இவர்கள் எனக்குப் போரில் உதவினார்கள்” என்றான்.
மெலித்தா தீவில் பவுல்
28 நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். 2 மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் மிகுதியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்காகத் தீ மூட்டி எங்களையெல்லாம் வரவேற்றனர். 3 நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. 4 தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை” என்றனர்.
5 ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. 6 பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.
7 அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். 8 புபிலியுவின் தந்தை மிகவும் நோயுற்றுப் படுக்கையிலிருந்தார். அவருக்கு காய்ச்சலும் வயிற்றிளைச்சலும் இருந்தது. ஆனால் பவுல் அவனிடம் சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தான். பவுல் தனது கைகளை அம்மனிதன் மீது வைத்து அவனைக் குணமாக்கினான். 9 இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான்.
10-11 தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள்.
பவுல் ரோமுக்குப் போகிறான்
அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம் [a] என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது.
2008 by World Bible Translation Center