Revised Common Lectionary (Semicontinuous)
“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.
69 தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
2 நான் நிற்பதற்கு இடமில்லை.
சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன்.
அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன.
நான் அமிழும் நிலையில் உள்ளேன்.
3 உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.
என் தொண்டை புண்ணாகிவிட்டது.
நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை
உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
13 ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.
நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன்.
நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
14 என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.
நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும்.
என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
15 அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.
ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும்.
கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.
16 கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.
உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
30 நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன்.
நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.
31 இது தேவனை சந்தோஷப்படுத்தும்!
ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.
32 ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள்.
நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள்.
33 கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார்.
சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.
34 பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக்கட்டும்.
கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.
35 கர்த்தர் சீயோனை மீட்பார்.
கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார்.
நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
36 அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள்.
அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.
முதல் குடும்பம்
4 ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு மகனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள்.
2 அதன் பிறகு ஏவாள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர்.
முதல் கொலை
3-4 அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான்.
கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். 5 ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். 6 கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. 7 நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்” [a] என்றார்.
8 காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான்.
9 பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.
10-11 அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார்.
13 பிறகு காயீன், “என்னால் தாங்கிக்கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது. 14 எனது பூமியை விட்டுப் போகுமாறு நீர் என்னை வற்புறுத்துகின்றீர். நான் உமது பார்வையிலிருந்து மறைவேன். எனக்கென்று ஒரு வீடு இருக்காது. பூமியில் ஒவ்வொரு இடமாக அலையும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
15 பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார்.
காயீன் குடும்பம்
16 காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
யூதர்களும் பாவிகளே
2 மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். 2 இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். 3 அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? 4 தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.
5 நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். 6 ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். 7 சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். 8 மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். 9 முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10 முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11 தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.
2008 by World Bible Translation Center