Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 46

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்

46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
    தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
எனவே பூமி நடுங்கினாலும்,
    மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
    பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
    மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
    சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
    கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
    அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
    வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
    இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.

10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
    நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.

11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

ஆதியாகமம் 3

பாவத்தின் தொடக்கம்

தேவனாகிய கர்த்தரால் படைக்கப்பட்ட விலங்குகளிலேயே பாம்பானது மிகவும் தந்திர குணமுள்ளதாயிருந்தது. அது அவளிடம், “பெண்ணே! தேவன் உங்களிடம் இத்தோட்டத்தில் உள்ள மரத்தின் பழங்களை உண்ணக்கூடாது என்று உண்மையில் கூறினாரா?” என்று கேட்டது.

அந்தப் பெண்ணும் பாம்புக்கு, “இல்லை! தேவன் அவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் இத்தோட்டத்தில் எல்லா மரங்களின் கனிகளையும் உண்ணலாம். ஆனால் ‘இத்தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை உண்ணக் கூடாது. அம்மரத்தைத் தொடவும் கூடாது. இதை மீறினால் மரணமடைவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” எனப் பதில் சொன்னாள்.

ஆனால் பாம்போ அவளிடம், “நீங்கள் மரிக்கமாட்டீர்கள். தேவனுக்குத் தெரியும், நீங்கள் அதன் கனியை உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை பற்றிய அறிவைப் பெறுவீர்கள். நீங்களும் தேவனைப்போன்று ஆவீர்கள்” என்றது.

அந்தப் பெண் அந்த மரம் அழகாக இருப்பதைக் கண்டாள். அதன் கனியும் உண்பதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்தாள். அப்பழம் தன்னை அறிவாளியாக்கும் என்பதை எண்ணி அவள் பரவசமடைந்தாள். எனவே அவள் அம்மரத்தின் கனியை எடுத்து உண்டதுடன், அவள் தன் கணவனுக்கும் அதைக் கொடுத்தாள். அவனும் அதை உண்டான்.

இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்துகொண்டனர்.

பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.

10 அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான்.

11 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.

12 அதற்கு அவன், “எனக்காக உம்மால் படைக்கப்பட்ட இந்தப் பெண் அந்த மரத்தின் கனியைக் கொடுத்தாள். நான் உண்டுவிட்டேன்” என்றான்.

13 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள்.

14 எனவே தேவனாகிய கர்த்தர் பாம்பிடம்:

“நீ இந்தத் தீய செயலைச் செய்தபடியால்,
மற்ற எந்த மிருகத்தை விடவும்
    நீ மிகவும் துன்பப்படுவாய்.
நீ உன் வயிற்றாலேயே ஊர்ந்து திரிவாய்.
    வாழ்நாள் முழுவதும் மண்ணைத் தின்று உயிர்வாழ்வாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்.
    அதோடு உன் பிள்ளைகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் பகை உண்டாக்குவேன்.
அவள் பிள்ளையின் காலை நீ கடிப்பாய்,
    அவர் உன் தலையை நசுக்குவார்” என்று சொன்னார்.

16 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம்:

“நீ கருவுற்றிருக்கும்போது
    உனது வேதனையை அதிகப்படுத்துவேன்.
அதுபோல் நீ பிரசவிக்கும்போதும்
    அதிக வேதனைப்படுவாய்.
உனது ஆசை உன் கணவன் மேலிருக்கும்.
    அவன் உன்னை ஆளுகை செய்வான்” என்றார்.

17 பின்பு தேவனாகிய கர்த்தர் ஆணிடம்:

“அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது என்று உனக்கு ஆணையிட்டிருந்தேன்.
    ஆனால் நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு அந்த கனியை உண்டுவிட்டாய்.
ஆகையால் உன்னிமித்தம் இந்தப் பூமி சபிக்கப்பட்டிருக்கும்.
    எனவே நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மிகுந்த கஷ்டத்துடன் பூமியின் பலனைப் பெறுவாய்.
18 இந்தப் பூமி உனக்கு முள்ளையும் களையையும் தரும்.
    விளையும் பயிர்களை நீ உண்பாய்.
19 உனது முகம் வேர்வையால் நிறையும்படி
    கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய்.
மரிக்கும்வரை நீ கஷ்டப்பட்டு உழைப்பாய்.
உன்னை மண்ணால் உருவாக்கினேன்.
    நீ மரிக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.

20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.

21 தேவனாகிய கர்த்தர் மிருகங்களின் தோலை ஆடையாக்கி அவனுக்கும் அவளுக்கும் அணிந்துகொள்ளக் கொடுத்தார்.

22 பின்பு தேவனாகிய கர்த்தர், “இதோ, நன்மை தீமை அறிந்தவனாக மனிதன் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுது மனிதன் ஜீவமரத்தின் பழத்தை எடுத்து உண்டால் என்றென்றும் உயிருடன் இருப்பான்” என்றார்.

23 ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். 24 தேவனாகிய கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்திவிட்டு அதனைப் பாதுகாக்க தோட்டத்தின் நுழை வாசலில் கேருபீன்களை வைத்தார். அதோடு தேவனாகிய கர்த்தர் நெருப்பு வாளையும் வைத்தார். அது மின்னிக்கொண்டு, ஜீவமரத்துக்குச் செல்லும் வழியைச் சுற்றிக் காவல் செய்தது.

மத்தேயு 7:1-6

நியாயம் தீர்ப்பதைப்பற்றி போதனை(A)

,“மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.

,“உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.

,“புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center