Revised Common Lectionary (Semicontinuous)
7 ஒரு தூதுவன் நற்செய்தியோடு மலைக்கு மேல் வருவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று. தூதுவன், “அங்கே சமாதானம் உள்ளது. நாம் காப்பாற்றப்பட்டிருக்கிறோம். சீயோனே, உங்கள் தேவனே ராஜா” என்று கூறுவதைக் கேட்பது அற்புதமான ஒன்று.
8 நகரக் காவலர்கள் சத்தமிடத் தொடங்கினார்கள்.
அவர்கள் கூடிக் களித்தனர்.
ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் கர்த்தர் சீயோனுக்குத் திரும்புவதைப் பார்க்கின்றனர்.
9 எருசலேமே, உனது அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் மகிழும்.
நீங்கள் கூடிக் களிப்பீர்கள்.
ஏனென்றால், கர்த்தர் எருசலேமிடம் தயவோடு உள்ளார்.
கர்த்தர் அவரது ஜனங்களை மீட்பார்.
10 அனைத்து நாடுகளிலும் கர்த்தர் தமது பரிசுத்தமான பலத்தைக் காட்டுவார்.
கர்த்தர் அவரது ஜனங்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதைத் தொலைதூர நாடுகள் எல்லாம் பார்க்கும்.
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
தேவன் தன் குமாரன் மூலமாகப் பேசியிருக்கிறார்
1 கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார். 2 இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 3 அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார். அவர் தனது வலிமைமிக்க கட்டளைகளினால் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். குமாரனானவர் மக்களைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தினார். பிறகு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் பரலோகத்தில் அமர்ந்தார். 4 அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார்.
5 கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை,
“நீர் எனது குமாரன்,
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.”(A)
அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை,
“நான் அவரது பிதாவாக இருப்பேன்.
அவர் எனது குமாரனாக இருப்பார்.”(B)
6 மேலும் தனது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்புகிறபோது,
“தேவதூதர்கள் எல்லோரும் அந்தக் குமாரனைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்”[a]
என்று கூறினார்.
7 தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது,
“தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு
ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்”(C)
எனக் குறிப்பிடுகிறார்.
8 ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது,
“தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது.
சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர்.
9 நீர் நீதியை விரும்புகிறீர். அநீதியை வெறுக்கின்றீர்.
ஆகையால் தேவனே, உமது தேவன் உம்மோடு இருப்பவர்களுக்குக்
கொடுத்ததைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை உமக்குத் தந்திருக்கிறார்.”(D)
10 மேலும் தேவன்,
“கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர்.
மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன.
11 இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர்.
ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும்.
12 நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர்.
அவை ஓர் ஆடையைப் போன்று மாறும்.
ஆனால் நீரோ மாறவேமாட்டீர்.
உமது ஜீவன் ஒருபோதும் அழியாது”(E)
என்றும் கூறுகிறார்.
கிறிஸ்து உலகத்துக்கு வருதல்
1 உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை[a] இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. 2 அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். 3 அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. 5 அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.
6 யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். 7 அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. 8 யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். 9 அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
10 அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. 11 அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர்.
14 வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று.
2008 by World Bible Translation Center