Revised Common Lectionary (Semicontinuous)
மரியாள் தேவனைப் போற்றுதல்
46 அப்போது மரியாள்,
47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.
தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
48 நான் முக்கியமற்றவள்,
ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.
இப்போது தொடங்கி,
எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.
அவர் பெயர் மிகத் தூய்மையானது.
50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
51 தேவனின் கைகள் பலமானவை.
செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
52 சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.
தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
53 நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.
செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.
அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”
என்று சொன்னாள்.
எல்க்கானாவும் அவனது குடும்பமும் சீலோவில் ஆராதித்தனர்
1 எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் உள்ள ராமா என்னும் நகரில் எல்க்கானா என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். அவன் சூப் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவன். எல்க்கானா எரோகாமின் குமாரன், எரோகாம் எலிகூவின் குமாரன், எலிகூ தோகுவின் குமாரன், தோகு சூப்பின் குமாரன், எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவன்.
2 எல்க்கானாவிற்கு இரண்டு மனைவிமார்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தியின் பெயர் அன்னாள், மற்றொருவள் பெயர் பெனின்னாள், பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.
3 ஒவ்வொரு ஆண்டும் எல்க்கானா தனது நகரமான ராமாவை விட்டு சீலோவுக்குப் போவான். அங்கு அவன் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொண்டான், அங்கு கர்த்தருக்குப் பலிகளும் செலுத்தினான். சீலோவில் ஓப்னியும் பினெகாசும் கர்த்தருடைய ஆசாரியர்களாக சேவை செய்து வந்தனர். இவர்கள் ஏலியின் குமாரர்கள். 4 ஒவ்வொரு முறையும் எல்க்கானா பலிகளை செலுத்தும் போது அதில் ஒரு பங்கினை பெனின்னாளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் கொடுத்து வந்தான். 5 எல்க்கானா அன்னாளுக்கும் இரட்டிப்பான பங்கினை எப்போதும் கொடுத்து வந்தான். ஏனென்றால் அவளில் அவன் அன்பு செலுத்தினான். கர்த்தர் அவளது கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
பெனின்னாள் அன்னாளை துன்புறுத்தல்
6 பெனின்னாள் எப்பொழுதும் அன்னாளைத் துக்கப்படுத்தி அவள் துயருறுமாறு செய்வாள், ஏனென்றால் அன்னாள் குழந்தைப்பேறு இல்லாதவளாக இருந்தாள். 7 இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பம் சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதும், பெனின்னாள் அன்னாளை வேதனைப்படுத்துவாள். ஒரு நாள் எல்க்கானா பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். அன்னாள் துக்கம் மீறி அழ ஆரம்பித்தாள். அவள் அன்று எதையும் உண்ணவில்லை. 8 அவளது கணவனான எல்க்கானா அவளிடம், “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து குமாரர்களை விட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்க கூடாதா” என்றான்.
அன்னாளின் ஜெபம்
9 உணவை உண்டு குடித்த பின் அன்னாள் அமைதியாக எழுந்து கர்த்தரிடம் ஜெபம் செய்யச் சென்றாள். கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் கதவருகில் ஏலி எனும் ஆசாரியன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். 10 அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள், 11 அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு குமாரனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்”[a] என்று வேண்டிக்கொண்டாள்.
12 இவ்வாறு அன்னாள் நீண்ட நேரம் கர்த்தரிடம் ஜெபிக்கும்பொழுது அவளது வாயையே ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் அசைந்தன, ஆனால் அவள் உரக்க எதையும் சொல்லவில்லை. எனவே ஏலி, அன்னாளைக் குடித்திருப்பவளாக எண்ணினான். 14 ஏலி அன்னாளிடம், “நீ அதிகப்படியாகக் குடித்திருக்கின்றாய்! இது குடியை விடவேண்டிய நேரம்” என்றான்.
15 அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். 16 மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள்.
17 ஏலி அவளிடம், “சமாதானத்துடனே போ. இஸ்ரவேலரின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்றான்.
18 அன்னாள், “உம்முடைய அடியாளுக்கு உம் கண்களில் இரக்கத்தைக் காணட்டும்” என்றாள். பிறகு அவள் அங்கிருந்து போய் உணவருந்தினாள். அதற்குப்பின் அவள் துக்கமாயிருக்கவில்லை.
பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு
9 முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. 2 இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. 3 இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. 4 அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும்[a] இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5 அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)
6 இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். 7 ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
8 முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். 9 எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. 10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.
புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு
11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.
13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். 14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.
2008 by World Bible Translation Center