Revised Common Lectionary (Semicontinuous)
தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்புதல்
7 தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். 2 தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி, “பாரும், நான் தேவதாரு மரங்களால் அமைந்த அழகிய வீட்டில் வாழ்கிறேன். ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோ ஒரு கூடாரத்திலேயே இன்னும் வைக்கப்பட்டுள்ளது! பரிசுத்தப் பெட்டிக்கு அழகான நல்ல கட்டிடம் நாம் கட்ட வேண்டும்” என்றான்.
3 நாத்தான் தாவீது ராஜாவை நோக்கி, “நீர் செய்ய விரும்புகிறதைச் செய்யும். கர்த்தர் உம்மோடிருக்கிறார்” என்றான்.
4 ஆனால் அன்றிரவு, நாத்தானுக்கு கர்த்தருடைய செய்திக் கிடைத்தது. கர்த்தர் நாத்தானிடம்,
5 “நீ என் தாசனாகிய தாவீதிடம் போய், ‘இதுவே கர்த்தர் சொல்வதாகும், நான் வாழவேண்டிய வீட்டைக் கட்டும் ஆள் நீ அல்ல. 6 இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வந்தபோது நான் ஒரு வீட்டிலும் தங்கி வாழவில்லை. நான் ஒரு கூடாரத்திலேயே எல்லா இடங்களுக்கும் பயணமானேன். எனது வீடாக கூடாரத்தையே பயன்படுத்தினேன். 7 தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை.’
8 “நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது இதுவே: நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். 9 நீ சென்ற எல்லா இடங்களிலும் நான் உன்னோடு இருந்தேன். உனக்காக உன் பகைவர்களை நான் முறியடித்தேன். உலகிலுள்ள மேன்மையான ஜனங்களைப்போல் உன்னையும் புகழ்பெறச் செய்வேன். 10-11 இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு, நான் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் இஸ்ரவேலரை நிலை நிறுத்தினேன். அவர்கள் வாழ்வதற்குரிய சொந்த இடத்தைக் கொடுத்தேன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு அவர்கள் அலைந்து கொண்டிராதபடிக்கு நான் இதைச் செய்தேன். முன்பு இஸ்ரவேலரை வழிநடத்த நியாயாதிபதிகளை அனுப்பினேன். ஆனால் தீயோர் அவர்களுக்குத் தொல்லைகள் விளைவித்தனர். அத்தொல்லைகள் இப்போது வராது. உனது எல்லாப் பகைவர்களிடமிருந்தும் உனக்கு அமைதியளிக்கிறேன். உனது குடும்பத்தாரை ராஜாக்களாக்குவேன் என உனக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.
16 உனது குடும்பத்தினர் ராஜாக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.
மரியாள் தேவனைப் போற்றுதல்
46 அப்போது மரியாள்,
47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.
தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
48 நான் முக்கியமற்றவள்,
ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.
இப்போது தொடங்கி,
எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.
அவர் பெயர் மிகத் தூய்மையானது.
50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
51 தேவனின் கைகள் பலமானவை.
செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
52 சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.
தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
53 நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.
செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.
அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”
என்று சொன்னாள்.
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
25 தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது. 26 ஆனால் இப்போது அந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீர்க்கதரிசிகளும் எழுதினர். இது தேவனுடைய கட்டளை. இது அனைவருக்கும் வெளிப்பட்டால்தான் அவர்கள் தேவனை நம்பி அவருக்குப் பணிவார்கள். தேவன் என்றென்றும் இருக்கிறார். 27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
கன்னி மரியாள்
26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.
29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.
30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.
34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.
35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு குமாரனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.
38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.
2008 by World Bible Translation Center