Revised Common Lectionary (Semicontinuous)
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
2 அன்னாள் ஜெபம் பண்ணி,
“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
2 கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
3 இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
4 வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
5 கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
6 கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
7 கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
8 கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
இந்த முழு உலகமும் அவருக்குரியது!
9 கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
அவர் தமது ராஜாவுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
18 ஆனால் சாமுவேல் கர்த்தருக்கு சேவை செய்தான். அவன் இளம் உதவியாளனாக ஆசாரியர்கள் அணிகின்ற சணல் நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். 19 ஒவ்வொரு ஆண்டும் சாமுவேலின் தாய் அவனுக்காக ஒரு சின்ன சட்டையைத் தைப்பாள். அவள் தன் கணவனோடு சீலோவிற்கு பலிசெலுத்த வரும்போதெல்லாம் அதனைக் கொண்டு வந்து தருவாள்.
20 ஏலி, எல்க்கானாவையும் அவனது மனைவியையும் ஆசீர்வதித்தான். அவன், “அன்னாள் மூலமாக கர்த்தர் மேலும் பல குழந்தைகளைத் தரட்டும். கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டபடி, அவருக்கே அளிக்கப்பட்ட அன்னாளின் மகனுடைய இடத்தை இந்த பிள்ளைகள் பிறந்து நிரப்பட்டும்” என்றான்.
எல்க்கானாவும், அன்னாளும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
21 கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று குமாரர்களும், இரண்டு குமாரத்திகளும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான்.
கிறிஸ்துவில் தொடர்ந்து வாழுங்கள்
6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். 7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.
8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். 9 தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. 10 கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார்.
11 கிறிஸ்துவுக்குள் நீங்கள் வித்தியாசமான விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இதுவேறு எவரின் கையாலும் செய்யப்பட்டதன்று. உங்களுடைய பழைய பாவம் மிக்க சுபாவத்தின் சக்தியிலிருந்து கிறிஸ்துவின் விருத்தசேதனம் வழியாக விடுதலையாக்கப்பட்டீர்கள். இது கிறிஸ்துவின் விருத்தசேதனமாகும். 12 நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் பழைமை இறந்து கிறிஸ்துவோடு புதைக்கப்பட்டது. அந்த ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய சக்தியில் விசுவாசமாய் இருந்தீர்கள். கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்ததன்மூலம் தேவன் தன் வல்லமையை வெளிப்படுத்திவிட்டார்.
13 உங்களது பாவங்களாலும் பாவம் மிக்க சுயசுபாவத்தின் சக்தியிலிருந்தும் விடபட முடியாததாலும் ஆன்மீக நிலையில் இறந்திருந்தீர்கள். ஆனால், தேவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கச் செய்தார். அவர் நமது பாவங்களையும் மன்னித்துவிட்டார். 14 தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் கடன்பட்டிருந்தோம். எந்தெந்த சட்டங்களை நாம் மீறினோம் என்பதை அக்கடன் பட்டியலிட்டது. ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்துவிட்டார். தேவன் அக்கடனை அப்புறப்படுத்தி ஆணிகளால் சிலுவையில் அறைந்துவிட்டார். 15 தேவன் ஆன்மீக நிலையில் ஆள்வோர்களையும் அதிகாரங்களையும் தோற்கடித்தார். இவ்வெற்றியை அவர் சிலுவையின் மூலம் பெற்றார். அவை பலமற்றவை என்பதை தேவன் உலகுக்குக் காட்டினார்.
2008 by World Bible Translation Center