Revised Common Lectionary (Semicontinuous)
ஆமான் தூக்கிலிடப்படுகிறான்
7 எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். 2 பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, ராஜா மீண்டும் இராணியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் இராணியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
3 பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். 4 ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.
5 பிறகு ராஜா அகாஸ்வேரு எஸ்தர் இராணியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
6 எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.
பிறகு, ராஜா மற்றும் இராணி முன்னால் ஆமான் திகில் அடைந்தான்.
9 பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.
ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.
10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.
20 மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். 21 மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். 22 யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்.
124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
6 கர்த்தரைத் துதியுங்கள்!
நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
பிரார்த்தனையின் அதிகாரம்
13 உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். 14 உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும்.
16 நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். 17 எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். 18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.
ஆன்மாவைக் காப்பாற்றுதல்
19 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். 20 இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.
இயேசுவைச் சேர்ந்தவன் யார்?
(லூக்கா 9:49-50)
38 பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான்.
39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். 40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். 41 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான்.
பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்
(மத்தேயு 18:6-9; லூக்கா 17:1-2)
42 “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். 43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். 44 [a] 45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. 46 [b] 47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. 48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.
49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.
50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center