Revised Common Lectionary (Semicontinuous)
113 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாக்குவார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
28 பிறகு ரெபெக்காள் ஓடிப்போய் தன் குடும்பத்தாரிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான். 31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.
32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். பிறகு ஆபிரகாமின் வேலைக்காரனும் அவனது ஆட்களும் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். 33 பிறகு அவனுக்கு உண்ண உணவு கொடுத்தான். ஆனால் வேலையாள் உண்ண மறுத்துவிட்டான், “நான் ஏன் வந்திருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு முன் உண்ணமாட்டேன்” என்றான்.
ஆகையால் லாபான், “பிறகு எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
ரெபெக்காளைப் பெண் கேட்டுப் பேசுதல்
34 வேலையாள், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன். 35 கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன. 36 சாராள் என் எஜமானனின் மனைவி. அவள் தனது முதிய வயதில் ஆண் குழந்தையை பெற்றாள். எனது எஜமானன் தனக்குரிய அனைத்தையும் அவனுக்கே கொடுத்திருக்கிறார். 37 என் எஜமானன் என்னை ஒரு வாக்குறுதி செய்யுமாறு வற்புறுத்தினார். என் எஜமானன் என்னிடம், ‘என் குமாரன் கானான் நாட்டுப் பெண்ணை மணந்துகொள்ள நீ அனுமதிக்கக் கூடாது. நாம் கானானியர்களுக்கிடையில் வாழ்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்ணை என் குமாரன் மணந்துகொள்ளக் கூடாது. 38 அதனால் எனது தந்தையின் நாட்டிலுள்ள எனது குடும்பத்தாரிடம் போய் என் குமாரனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்று சொன்னார். 39 அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒருவேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன். 40 உடனே அவர், ‘நான் கர்த்தருக்குச் சேவை செய்கிறேன். எனவே கர்த்தர் தன் தூதனை உனக்கு முன்பாக அனுப்பி உனக்கு உதவுவார். அங்கே எனது குடும்பத்தில் என் மகனுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடிப்பாய்’ என்று கூறினார். 41 ஆனால் அவர்கள் என் குமாரனுக்குப் பெண் கொடுக்க மறுத்தால் பிறகு நீ செய்த வாக்குறுதியிலிருந்து விடுதலை பெறுவாய்” என்றார்.
42 “இன்று அந்தக் கிணற்றருகில் வந்து ‘என் எஜமானன் ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தாவே! எனது பயணத்தை வெற்றிகரமாக்கும்.
தன் சொந்த ஊரில் இயேசு
(மத்தேயு 13:53-58; மாற்கு 6:1-6)
16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 17 ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்:
18 “தேவனுடைய ஆவி என்னிலுள்ளது.
ஏதுமற்ற மக்களுக்கு நற்செய்தியைப் போதிப்பதற்கு தேவன் என்னைத் தேர்ந்தார்.
கைதிகள் விடுதலை பெறவும்
குருடர்கள் மீண்டும் பார்வை பெறவும் அம்மக்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்.
தங்கள் துன்பத்தினின்று பலவீனர்கள் விடுதலை பெறும்பொருட்டு தேவன் என்னை அனுப்பினார்.
19 மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்”(A)
என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார்.
20 அவர் புத்தகத்தை திருப்பித் தந்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரும் இயேசுவைக் கூர்ந்து நோக்கினர். 21 அவர்களிடம் இயேசு பேச ஆரம்பித்தார். அவர், “நான் வாசித்த இச்சொற்களை இப்போது நீங்கள் கேட்கையில், அச்சொற்கள் உண்மையாயின!” என்றார்.
22 எல்லா மக்களும் இயேசுவைக் குறித்து நல்லபடியாகக் கூறினர். இயேசு பேசிய அழகான வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் வியந்தனர். மக்கள், “அவர் எவ்வாறு இப்படிப் பேச முடியும்? அவர் யோசேப்பின் குமாரன் அல்லவா?” என்றனர்.
23 அவர்களை நோக்கி, இயேசு, “‘மருத்துவரே, முதலில் உன்னை நீயே குணப்படுத்திக்கொள்’ என்னும் பழமொழியை நீங்கள் எனக்குக் கூறப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ‘நீங்கள் கப்பர்நகூமில் நிகழ்த்திய காரியங்களைக் குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறோம். உங்கள் சொந்த நகரமாகிய இவ்விடத்திலும் அதையே செய்யுங்கள்’ என்று சொல்ல விரும்புகிறீர்கள்” என்றார். 24 மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.
25 “நான் சொல்வது உண்மை. எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக இஸ்ரவேலில் மழை பொழியவில்லை. நாடு முழுவதிலும் உணவு எங்கும் கிடைக்கவில்லை. அக்காலத்தில் இஸ்ரவேலில் விதவைகள் பலர் வாழ்ந்தனர். 26 ஆனால் இஸ்ரவேலில் உள்ள எந்த விதவையிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. சீதோனில் உள்ள நகரமாகிய சாரிபாத்தில் உள்ள விதவையிடத்துக்கே அவன் அனுப்பப்பட்டான்.
27 “எலிசா என்னும் தீர்க்கதரிசியின் காலத்தில் குஷ்டரோகிகள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் குணமாக்கப்படவில்லை. நாகமான் மட்டுமே குணமடைந்தான். அவன் சீரியா தேசத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன் அல்லன்” என்றார்.
28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். 29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.
2008 by World Bible Translation Center