Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்.
124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
6 கர்த்தரைத் துதியுங்கள்!
நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
வஸ்தி ராணி ராஜாவுக்கு கீழ்ப்படிய மறுக்கிறாள்
1 அகாஸ்வேரு ராஜாவாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். 2 ராஜா அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.
3 அகாஸ்வேருவின், மூன்றாவது ஆட்சியாண்டில், அவன் தனது அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். படை அதிகாரிகளும், பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள முக்கிய தலைவர்களும் அங்கே இருந்தனர். 4 விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு ராஜா தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான். 5 அந்த 180 நாட்களும் முடிந்தபோது, அகாஸ்வேரு ராஜா இன்னொரு விருந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த விருந்து அரண்மனை தோட்டத்திற்குள்ளே நடைபெற்றது. சூசான் தலைநகரத்தில் உள்ள அனைத்து முக்கியமானவர்களும், முக்கியமற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனார். 6 அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. 7 பொற்கிண்ணங்களில் திராட்சைரசம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் வித்தியாசமாக இருந்தது! அங்கே முதல் தரமான திராட்சைரசம் ராஜாக்களுக்கு ஏற்ற வகையில் தாராளமாகக் கொடுக்கப்பட்டது. 8 ராஜா தனது வேலைக்காரர்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தான். ஒவ்வொரு விருந்தாளியும் அவரது விருப்பம்போல் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும் என்று சொல்லியிருந்தான். திராட்சைரசம் பரிமாறுபவன் ராஜாவுக்குக் கீழ்ப்படிந்தான்.
9 ராஜாவின் அரண்மனையில் இராணி வஸ்தியும் பெண்களுக்கு ஒரு விருந்து கொடுத்தாள்.
10-11 விருந்தின் ஏழாவது நாளில், அகாஸ்வேரு ராஜா திராட்சைரசத்தால் உச்சப் போதையில் இருந்தான். அவன் ஏழு பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். அந்த பிரதானிகள், மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகியோர். அவன் இந்த ஏழு பேரிடம் இராணி வஸ்தியை இராஜகிரீடம் அணிவித்து அழைத்துவருமாறு கட்டளையிட்டான். அவள் அழகை முக்கியமான ஜனங்களுக்கும், தலைவர்களுக்கும் காட்டவேண்டும் என்று ராஜா விரும்பினான். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
12 ஆனால், அந்த வேலைக்காரர்கள் போய் இராணி வஸ்தியிடம் ராஜாவின் கட்டளையைச் சொன்னதும் அவள் வரமறுத்தாள். அதனால் ராஜா மிகவும் கோபம்கொண்டான். 13-14 சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, ராஜா அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் ராஜாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு ராஜாவைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர். 15 ராஜா அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? ராஜா அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான்.
16 பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் ராஜாவுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு ராஜாவின் அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள். 17 மற்ற எல்லாப் பெண்களும் இராணி வஸ்தி செய்ததை கேள்விப்படுவார்கள். பிறகு அவர்கள் தம் கணவர்களுக்கு அடிபணிவதை நிறுத்துவார்கள். அவர்கள் தம் கணவர்களிடம், ‘ராஜா அகாஸ்வேரு இராணி வஸ்தியை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள்’ என்பார்கள்.
18 “இன்றைக்கு பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள தலைவர்களின் மனைவிகளும் இராணி செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்பெண்களும் இராணியின் செயலால் தூண்டப்படுவார்கள். அப்பெண்களும் ராஜாவின் முக்கிய தலைவர்களுக்கு அவ்வாறே செய்வார்கள். அதனால் மிகுதியான மதிப்பின்மையும் கோபமும் பிறக்கும்.
19 “எனவே ராஜாவுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். ராஜா ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் ராஜா அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு ராஜா அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும். 20 பிறகு ராஜாவின் கட்டளை அவனது பெரிய நாடு முழுவதும் அறிவிக்கப்படும்போது, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள எல்லாப் பெண்களும் தம் கணவர்களை மதிப்பார்கள்” என்று பதில் சொன்னான்.
21 ராஜாவும் அவனுடைய முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனையால் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே அகாஸ்வேரு ராஜா மெமுகானின் ஆலோசனையின்படிச் செய்தான்.
13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.
15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.
18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.
21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.
விசுவாசிகளின் பிரார்த்தனை
23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.
“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
அவர்கள் செய்வது வீணானது.
26 “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர்.
தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’(A)
27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.
31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.
2008 by World Bible Translation Center