Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 144:9-15

கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
    நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 ராஜாக்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
    பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    இப்பகைவர்கள் பொய்யர்கள்.
    அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.

12 நம் இளகுமாரர்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
    நம் இளகுமாரத்திகள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
    நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
    எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
    நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
    ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.

15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

உன்னதப்பாட்டு 3:6-11

அவனும் அவனது மணப்பெண்ணும்

பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு
    வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்?
மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும்,
    சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும்,
    வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.

பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த
    60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
    அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன.
    இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.

சாலொமோன் ராஜா தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான்.
    அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
10 அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது.
    அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது.
    எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.

11 சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள்.
    சாலொமோன் ராஜாவைப் பாருங்கள்.
திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள்.
    அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.

1 தீமோத்தேயு 4:6-16

கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு

அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.

11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.

13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center