Revised Common Lectionary (Semicontinuous)
உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்
17 ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. 2 நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.
3 தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். 4 தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். 5 நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். 6 நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல ராஜாக்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். 7 நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன்.
ஈசாக்கு சத்தியத்திற்குரிய குமாரன்
15 தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16 அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு குமாரனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல ராஜாக்கள் வருவார்கள்” என்றார்.
23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.
25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28 ஏனெனில் கர்த்தரே ராஜா.
அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
29 பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள்.
எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம்.
30 வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள்.
என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள்.
31 பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள்.
தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.
விசுவாசத்தின் மூலம் நீதி
13 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததியினருக்கும் முழு உலகமும் கிட்டும் என்ற தேவனுடைய வாக்குறுதி கிடைத்தது. ஆபிரகாம் சட்டவிதிகளைக் கடைப்பிடித்ததால் அவனுக்கு அவ்வாக்குறுதி கிடைக்கவில்லை. அவன் தனது விசுவாசத்தால் தேவனுக்கு முன் நீதிமானாக இருந்தபடியால் இது கிடைத்தது. 14 சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே தேவனுடைய வாக்குறுதியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பிறகு விசுவாசத்தால், பயனில்லாமல் போகும். ஆபிரகாமுக்கு தேவனுடைய வாக்குறுதியும் பயனில்லாமல் போகும். 15 ஏனென்றால் சட்டவிதியானது, அதைக் கடைப்பிடிக்காதவர்களிடம் தேவனுடைய கோபத்தையே உருவாக்கும். எனவே சட்டவிதி இல்லாவிட்டால் பின்னர் கீழ்ப்படியாமையும் இல்லாமல் போகும்.
16 எனவே மக்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசத்தின் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு நிகழ்வதால் இதுகொடையாகிறது. இது இலவசமான கொடையானால் இதனை ஆபிரகாமின் பிள்ளைகளாய் விளங்கும் அத்தனை பேரும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாக்குறுதி மோசேயின் சட்டவிதிகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கிறது. ஆபிரகாமைப் போன்று விசுவாசம் கொள்ளும் அனைவரும் அதனைப் பெறலாம். அதனால்தான் ஆபிரகாம் அனைவருக்கும் தந்தையாகிறான். 17 “அநேக தேசத்து மக்களுக்கு நான் உன்னைத் தகப்பனாக உருவாக்கினேன்”(A) என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. இது தேவனுக்கு முன் உண்மையாகின்றது. தேவனால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்யமுடியும். இதுவரை இல்லாதவற்றை இருப்பதாகக் கொண்டுவர இயலும் என்பதை ஆபிரகாம் நம்பினான்.
18 ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்”(B) என்று சொன்னபடி ஆயிற்று. 19 அவன் ஏறக்குறைய 100 வயதுள்ளவனாய் இருந்தான். அவ்வயதில் பிள்ளைகள் உருவாக உயிர் சக்தியில்லை. அதே சமயத்தில் சாராளாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆபிரகாம் இதைப்பற்றியும் நினைத்துப் பார்த்தான். ஆனால் தேவன் மேல் வைத்த விசுவாசம் மட்டும் குறையவே இல்லை. 20 வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும், மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான். 21 தேவன் வாக்குரைத்தபடி செய்ய வல்லவர் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருந்தான். 22 எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.” 23 இது ஆபிரகாமுக்காக மட்டும் எழுதப்படவில்லை. நமக்காகவும் எழுதப்பட்டது. 24 நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு தேவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அத்தேவனை நம்புகிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 நமது பாவங்களுக்காக இயேசு மரணத்திற்கு ஒப்படைக்கப்பட்டார். நம்மை நீதிமான்களாக்க அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்
(மத்தேயு 16:21-28; லூக்கா 9:22-27)
31 பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். 32 இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை.
பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். 33 ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார்.
34 இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும். 35 எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. 36 ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்? 37 ஒருவன் தன் ஆன்மாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க முடியாது. 38 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கேடுகளிலும், பாவங்களிலும் வாழ்கிறார்கள். எவனாவது என்னைக் குறித்தும், என் போதனையைக் குறித்தும் வெட்கப்படுவானேயானால், நானும் அவனைக் குறித்து வெட்கப்படுவேன். நான் என் பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களோடும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.
மோசே, எலியாவுடன் இயேசு
(மத்தேயு 17:1-13; லூக்கா 9:28-36)
2 ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார். 3 இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது. 4 அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே.
5 பேதுரு இயேசுவிடம், “போதகரே நாம் இங்கே இருப்பது நல்லதாயிற்று. நாங்கள் கூடாரங்கள் அமைக்கப் போகிறோம். ஒன்று உமக்கு, மற்றொன்று மோசேக்கு, இன்னொன்று எலியாவுக்கு” என்றான். 6 பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர்.
7 பிறகு ஒரு மேகம் வந்து அவர்களை மறைத்தது. அந்த மேகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அது, “இவர் என் குமாரன். நான் இவரிடம் அன்பாய் இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்டியுங்கள்” என்று சொன்னது.
8 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை.
9 இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார்.
2008 by World Bible Translation Center