Revised Common Lectionary (Semicontinuous)
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
தேவனே, பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
என் ஆயுள் குறைந்தது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்!
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும்.
ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர்.
அவையெல்லாம் மாறிப்போகும்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
நீர் என்றென்றும் வாழ்வீர்!
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.
நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள்.
அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.
யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்
6 அப்போது யோபு,
2 “என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால்,
நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
3 கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது.
அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன.
4 சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன.
அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது!
தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன.
5 எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது).
காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது.
பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது.
6 உப்பற்ற உணவு சுவைக்காது.
முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.
7 நான் அதைத் தொட மறுக்கிறேன்;
அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது!
உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.
8 “நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.
நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.
9 தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன்.
அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம்.
10 அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன்.
நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்.
இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.
11 “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
எனக்கு என்ன நேருமென அறியேன்.
எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை.
12 நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா?
என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?
13 எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை.
ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
இயேசுவின் பின் திரளான கூட்டம்
7 தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர். 8 பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள்.
9 இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார். 10 இயேசு ஏற்கெனவே பலரைக் குணமாக்கி இருந்தார். ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டு வந்து அவரைத் தொட முயன்றார்கள். 11 சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர். ஆவிகள் இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன் குனிந்து, “நீர் தான் தேவனுடைய குமாரன்” என்று உரக்கச் சத்தமிட்டன. 12 ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
2008 by World Bible Translation Center