Revised Common Lectionary (Semicontinuous)
ஆசாபின் பாடல்களில் ஒன்று.
50 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.
சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார்.
2 சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.
3 நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.
அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.
4 தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு
நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
5 தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,
என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள்.
என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”
6 தேவனே நியாயாதிபதி,
வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
யெரொபெயாம் குமாரனின் மரணம்
14 அப்போது, யெரொபெயாமின் குமாரன் அபியா என்பவன் நோய்வாய்ப்பட்டான். 2 ராஜா தன் மனைவியிடம், “சீலோவிற்குப் போ. அகியா தீர்க்கதரிசியைப் பார். அவர்தான் நான் இஸ்ரவேலின் ராஜா ஆவேன் என்று கூறினார். ஜனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு ஆடை அணிந்துக்கொள். 3 தீர்க்கதரிசிக்கு 10 துண்டு அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு ஜாடி தேனையும் கொடு. நம் குமாரனுக்கு என்ன ஏற்படும் என்றும் கேள். அகியா தீர்க்கதரிசி உனக்கு சரியாகச்சொல்லுவார்” என்றான்.
4 ராஜா சொன்னதுபோலவே அவனது மனைவியும் செய்தாள். அவள் தீர்க்கதரிசியான அகியாவின் வீட்டிற்குப் போனாள். அவன் முதுமையடைந்து பார்வையற்றுப் போய் இருந்தான். 5 ஆனால் கர்த்தர் அவனிடம், “யெரொபெயாமின் மனைவி தன் குமாரனைப்பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். ஏனென்றால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்றார். அவன் என்ன சொல்லவேண்டும் என்பதையும் கர்த்தர் அவனுக்கு சொல்லியிருந்தார்.
ராஜாவின் மனைவி அகியாவின் வீட்டிற்கு வந்தாள். தன்னை யாரென்று ஜனங்கள் அறிந்துக்கொள்ளாதபடி நடந்துக்கொண்டாள். 6 அவள் கதவருகே வந்ததை அறிந்ததும் அவன், “யெரொபெயாமின் மனைவியே வருக, உன்னைப்பற்றி மற்றவர்கள் வேறுயாராகவோ நினைக்கும்படி ஏன் நீ நடந்துக்கொள்கிறாய்? உனக்கு ஒரு கெட்டச்செய்தியை வைத்திருக்கிறேன். 7 யெரொபெயாமிடம் போய் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்ன சொன்னார் என்பதைப் போய் சொல். கர்த்தர், ‘யெரொபெயாம், நான் உன்னை அனைத்து இஸ்ரவேலர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தேன். எனது ஜனங்களை ஆளும்படிச் செய்தேன். 8 தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான். 9 ஆனால் நீ பெரும் பாவங்களை செய்துவிட்டாய். உனது பாவங்கள் உனக்கு முன்னால் ஆண்டவர்களின் (ஆட்சி செய்தவர்களின்) பாவங்களைவிட மிக மோசமானது. என்னைப் பின்பற்றுவதைவிட்டு, நீயே விக்கிரகங்களையும் அந்நிய தெய்வங்களையும் செய்தாய். இது எனக்கு கோபமூட்டியது. 10 எனவே உனது குடும்பத்திற்குத் துன்பங்களைத் தருவேன். உன் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களையும் கொல்வேன். நெருப்பு, சாணத்தை அழிப்பது போன்று நான் உன் குடும்பம் முழுவதையும் அழித்துப்போடுவேன். 11 இந்நகரில் மரித்துப்போகும் உன் குடும்பத்தானின் பிணத்தை நாய்கள் உண்ணும். வயலில் மரிப்பவர்களை பறவைகள் உண்ணும். இவற்றைக் கர்த்தர் சொன்னார்’” என்றான்.
12 பின் அகியா தீர்க்கதரிசி மேலும் யெரொபெயாமின் மனைவிடம் பேசினான், “இப்போது வீட்டிற்குப் போ. நீ எப்பொழுது நகரத்திற்குள் நுழைகிறாயோ அப்போது உன் குமாரன் மரிப்பான். 13 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவனுக்காக அழுது அடக்கம் செய்வார்கள். உன் குடும்பத்தில் அவன் மட்டுமே அடக்கம் செய்யப்படுவான். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு அவன் ஒருவன் மட்டுமே யெரொபெயாமின் குடும்பத்தில் பிடித்தமானவன் என்பதுதான் காரணம். 14 இஸ்ரவேலருக்குப் புதிய ராஜாவை கர்த்தர் ஏற்படுத்துவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழிப்பான். இது விரைவில் நடைபெறும். 15 பிறகு கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தாக்குவார். அவர்கள் ஆற்றங்கரையிலுள்ள நாணலைப்போன்று அசைவார்கள். அவர்களை இந்த நல்ல நாட்டினின்றும் கர்த்தர் துரத்துவார். இந்த நாடு கர்த்தரால் அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர் அவர்களை ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் கோபத்தோடு இருப்பதால் இவ்வாறு செய்வார். காரணம் அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு கம்பங்கள் அமைத்து தொழுதுகொண்டனர். 16 ரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். எனவே கர்த்தர் அவர்களைத் தோற்கடிப்பார்” என்றான்.
17 ராஜாவின் மனைவி திர்சாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது குமாரன் மரித்தான். 18 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்காக அழுது அவனை அடக்கம் செய்தனர். இது கர்த்தர் சொன்னது போலவே நடந்தது, கர்த்தர் தன் ஊழியனான, தீர்க்கதரிசி அகாயாவின் மூலம் இதைச் சொன்னார்.
தேவனுடைய கிருபைக்காக நன்றி
12 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஏனெனில் என்னை விசுவாசமுள்ளவனாகக் கண்டுணர்ந்து சேவை செய்யும் பொருட்டு அவர் எனக்கு இப்பணியைக் கொடுத்திருக்கிறார். அவர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார். 13 முன்பு நான் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசி துன்பப்படுத்தி, கொடுமையான காரியங்களைச் செய்தேன். ஆனால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்தார். ஏனென்றால், செய்வதை இன்னதென்று அறியாமல் நான் செய்தேன். அவரை நம்பாதபோது தான் அவற்றைச் செய்தேன். 14 ஆனால் கர்த்தராகிய அவர் தம் முழுமையான கிருபையை எனக்குத் தந்தார். அதோடு கிறிஸ்து இயேசுவில் விசுவாசமும் அன்பும் வந்தது.
15 நான் என்ன சொல்கிறேனோ, அவை உண்மையானவை. நீங்கள் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்துவாகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவர்களுள் நான் மிக மோசமானவன். 16 ஆனால் எனக்குக் கருணை அளிக்கப்பட்டது. அதனால் என் மூலம் இயேசு கிறிஸ்து எல்லையற்ற பொறுமை உடையவர் என்று புலப்படுத்திவிட்டார். கிறிஸ்து தனது பொறுமையை எல்லா பாவிகளிலும் மோசமான என்னிடம் காட்டினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கும்படியாகக் கிறிஸ்து விரும்பினார். 17 கனமும், மகிமையும் நிரந்தரமான அரசருக்கு இருப்பதாக. அவர் அழிக்கப்படாதவர். பார்க்கப்படாதவர். அந்த ஒரே தேவனுக்கே எப்பொழுதும் கனமும், மகிமையும் உண்டாவதாக.
18 தீமோத்தேயுவே, நீ என் குமாரனைப் போன்றவன். நான் உனக்கு ஓர் ஆணையிடுகிறேன். உன்னைக் குறித்து முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியே விசுவாசத்திற்காக மாபெரும் போரில் நீ ஈடுபடு. இதுவே எனது ஆணை. 19 தொடர்ந்து விசுவாசம் கொள். உனக்கு நியாயமானது என்று தெரிந்ததைச் செய். சிலர் இதனைச் செய்யவில்லை. எனவே அவர்கள் விசுவாசத்திலிருந்து விலகி விழுந்தார்கள். 20 இமனேயும், அலெக்சாண்டரும் இத்தகு இரண்டு உதாரணங்கள். தேவனுக்கு எதிராகப் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.
2008 by World Bible Translation Center