Revised Common Lectionary (Complementary)
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
தேவன் மற்ற நாடுகளைத் தண்டிப்பார்
11 வீபனோனே, உன் வாசலைத் திற.
அதனால் நெருப்பு அதன் வழியாக வந்து உன் கேதுரு மரங்களை எரிக்கும்.
2 சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும்.
அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும்.
பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.
3 அழுதுகொண்டிருக்கும் மேய்ப்பர்களைக் கவனி.
அவர்களின் ஆற்றல்மிக்க தலைவர்கள் கொண்டுப்போகப்பட்டனர்.
கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் இளஞ் சிங்கங்களைக் கவனி.
அவற்றின் அடர்ந்த புதர்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்தன. அவை அழிந்துப்போயின.
4 எனது தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “கொலைச் செய்யப்படுவதற்குரிய ஆடுகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளுங்கள். 5 அவர்களின் தலைவர்கள் சொந்தக்காரர்களையும், வியாபாரிகளையும்போல உள்ளனர். சொந்தக்காரர்கள் தமது ஆடுகளைக் கொல்கிறார்கள், ஆனால் தண்டிக்கப்படுவதில்லை. வியாபாரிகள் ஆட்டினை விற்று, ‘கர்த்தரைத் துதியுங்கள். நான் செல்வந்தன் ஆனேன்!’ என்பார்கள். மேய்ப்பர்கள் தம் ஆடுகளுக்காக வருத்தப்படுவதில்லை. 6 நான் இந்நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்காக வருத்தப்படுவதில்லை.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “பார், நான் ஒவ்வொருவரையும் அவர்களது அயலகத்தாரும், ராஜாவும் அடக்கியாண்டு அவர்களது நாட்டினை அழிக்கும்படி விடுவேன். அப்போது நான் அவர்களைத் தடுப்பதில்லை!”
7 எனவே, நான் கொல்லப்படுவதற்குரிய அந்தப் பரிதாபத்துக்குரிய ஆடுகளை மேய்ப்பேன். நான் இரண்டு கோல்களை கண்டெடுப்பேன். ஒன்றிற்கு அனுக்கிரகம் என்றும் இன்னொன்றிற்கு ஒற்றுமை என்றும் பேரிடுவேன். பின்னர், நான் ஆடுகளை மேய்க்கத் தொடங்குவேன். 8 நான் ஒரே மாதத்தில் மூன்று மேய்ப்பர்களைக் கொன்றுப்போட்டேன். நான் ஆடுகளின் மேல் கோபமுற்றேன். அவை என்னை வெறுக்க தொடங்கின. 9 பின்னர், “நான் உங்களை கவனியாமல் நிறுத்திவிடுவேன். நான் உங்களை இனிமேல் மேய்ப்பதில்லை. நான் அவற்றில் மரிக்க விரும்புகிறவர்களை மரிக்கட்டும் என்று விடுவேன். நான் அவற்றில் அழிய விரும்புகிறவர்கள் அழியட்டும் என்று விடுவேன். மீதியானவை ஒன்றை ஒன்று அழிக்கும்.” 10 பிறகு நான் அனுக்கிரகம் என்ற கோலை எடுத்தேன். நான் அதனை உடைத்தேன். தேவன் அனைத்து ஜனங்களோடும் செய்த உடன்படிக்கை உடைந்துபோனது என்பதைச் காட்டவே இதனைச் செய்தேன். 11 அந்நாளில் உடன்படிக்கை முடிந்தது. எனக்காகக் காத்திருந்த பரிதாபத்திற்குரிய ஆடுகள், இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது என்பதை அறிந்தன.
12 பிறகு நான் சொன்னேன், “நீங்கள் எனக்குக் கூலி கொடுக்க விரும்பினால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.” எனவே அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார்கள். 13 பிறகு கர்த்தர் என்னிடம், “நான் இவ்வளவே மதிப்புள்ளவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அத்தொகையை ஆலயக் கருவூலத்தில் எறி” என்றார். எனவே நான் முப்பது வெள்ளிகாசுகளை எடுத்து கர்த்தருடைய ஆலயக் கருவூலத்தில் எறிந்தேன். 14 பின்னர் நான் ஒற்றுமை என்ற கோலை, இரண்டு துண்டுகளாக உடைத்தேன். யூதாவும், இஸ்ரவேலும் கொண்ட ஒற்றுமை உடைந்தது என்று காட்டவே இவ்வாறு செய்தேன்.
15 பிறகு கர்த்தர் என்னிடம், “மதியற்ற மேய்ப்பனொருவன் பயன்படுத்தும் பொருட்களை இப்பொழுது நீ எடுத்துக்கொள். 16 இது நான் இந்த நாட்டுக்குப் புதிய மேய்ப்பனை ஏற்படுத்துவேன் என்பதைக் காட்டும். ஆனால் இந்த இளைஞனால் இழந்துப்போன ஆடுகளைப் பேணிக்காக்க இயலாது. அவனால் காயப்பட்ட ஆடுகளைக் குணப்படுத்தவும் முடியாது. அவனால் மெலிந்தவற்றுக்கு ஊட்ட முடியாது. அவன் கொழுத்தவற்றை முழுமையாக உண்பான். அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்” என்றார்.
17 ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே,
நீ என் மந்தையைக் கைவிட்டாய்.
அவனைத் தண்டித்துவிடு.
அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு.
அவனது வலது கை பயனற்றுப்போகும்.
அவனது வலது கண் குருடாகும்.
வாழும் நம்பிக்கை
3 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார். 4 இப்பொழுது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது.
5 இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியவை. இறுதி நேரத்தில் தம் வல்லமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். 6 இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம். 7 ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன? உங்கள் விசுவாசம் பரிசுத்தமானது என்று நிரூபிப்பதற்கேயாகும். இந்த விசுவாசத்தின் பரிசுத்தம் பொன்னைக் காட்டிலும் சிறந்தது. பொன்னின் சுத்தத் தன்மை நெருப்பால் சோதித்தறியப்படுகிறது. ஆனால் பொன் அழிவுறும். இயேசு கிறிஸ்து வரும்போது, உங்கள் விசுவாசத்தின் பரிசுத்தமானது உங்களுக்கு கனத்தையும், மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
8 நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது. 9 உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.
2008 by World Bible Translation Center