Revised Common Lectionary (Complementary)
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.
141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
விரைவாக எனக்கு உதவும்!
2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.
3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.
5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
6 அவர்களின் ராஜாக்கள் தண்டிக்கப்படட்டும்.
அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.
8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
நான் உம்மை நம்புகிறேன்.
தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.
21 தேவன் சொன்னார்: “நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பிற நாட்டினரைப் பார்க்கச் செய்வேன். அந்த நாடுகள் என்னை மதிக்கத் தொடங்கும்! அவர்கள் எனது வல்லமையைப் பார்ப்பார்கள். இந்த வல்லமை அந்தப் பகைவனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. 22 பிறகு அந்நாளிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் நானே அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள். 23 அந்நாடுகள் இஸ்ரவேல் வம்சத்தார் ஏன் பிற நாடுகளுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்கள் என்பதை அறியும். என் ஜனங்கள் எனக்கு விரோதமாக மாறினார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து விலகினேன். நான் அவர்களை அவர்களது பகைவர்கள் தோற்கடிக்கும்படிச் செய்தேன். எனவே, என் ஜனங்கள் போரில் கொல்லப்பட்டார்கள். 24 அவர்கள் பாவம் செய்து தம்மைத்தாமே அசுத்தம் செய்துகொண்டார்கள். எனவே அவர்கள் செய்தவற்றிற்காக நான் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு உதவி செய்ய மறுத்தேன்.”
25 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இப்பொழுது நான் யாக்கோபு வம்சத்தாரை சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோர் மீதும் இரக்கம் கொள்வேன். நான் எனது பரிசுத்தமான நாமத்திற்காக பலமான உணர்ச்சியைக் காட்டுவேன். 26 ஜனங்கள் கடந்தகாலத்தில் எனக்கு விரோதமாகச் செய்தத் தீயச்செயல்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். எவரும் அவர்களை அச்சப்படுத்தமுடியாது. 27 நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும். 28 அவர்கள் நானே அவர்களது தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவார்கள். ஏனென்றால், நான் அவர்களைத் தம் சொந்த வீட்டினை விட்டு நாடு கடத்தப்பட்டு சிறை இருக்கச் செய்தேன். நான் அவர்களை ஒன்று கூட்டி அவர்களது நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்தேன். எந்த இஸ்ரவேலனும் சிறையிருப்பில் இருக்கமாட்டான். 29 நான் எனது ஆவியை இஸ்ரவேல் வம்சத்தாரிடம் ஊற்றுவேன். அதற்குப் பிறகு, நான் மீண்டும் என் ஜனங்களைவிட்டு விலகமாட்டேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
புதிய ஆலயம்
40 நாங்கள் சிறைப்பட்ட 25ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் மாதம் (அக்டோபர்) பத்தாம் நாளன்று கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமைப் பிடித்து 14 ஆண்டுகளாயிற்று, ஒரு தரிசனத்தில் கர்த்தர் என்னை அங்கே எடுத்துக்கொண்டு போனார்.
2 தரிசனத்தில், தேவன் என்னை இஸ்ரவேல் நாட்டுக்குக் கொண்டுபோனார். ஒரு உயரமான மலையில் என்னை அவர் வைத்தார். மலையின் மேல் ஒரு கட்டிடம் நகரத்தைப்போன்று காட்சியளித்தது. அந்நகரம் கிழக்கு நோக்கி இருந்தது. 3 கர்த்தர் என்னை அங்கே கொண்டுபோனார். அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தான். அவன் கையில் சணல்கயிறும, அளவு கோலும் இருந்தன. அவன் வாசலருகில் நின்றுகொண்டிருந்தான். 4 அம்மனிதன் என்னிடம் சொன்னான், “மனுபுத்திரனே, உன் கண்களையும், காதுகளையும் பயன்படுத்து. இவற்றைப் பார், என்னைக் கவனி! நான் காட்டுகிற எல்லாவற்றிலும் உன் கவனத்தைச் செலுத்து. ஏனென்றால், நீ கொண்டுவரப்பட்டாய். எனவே நான் உனக்கு இவற்றைக் காட்டுகிறேன். நீ பார்த்தவற்றையெல்லாம் பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்.”
உங்கள் சுதந்திரம் எதற்கு?
23 “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை. 24 தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.
25 சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுங்கள். சரி அல்லது தவறு என்பது பற்றி (அதைச் சாப்பிடுவது தொடர்பாக) எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள். 26 “இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.”(A) ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.
27 அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள். 28 ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது. 29 நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன். 30 நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.
31 எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள். 32 யூதர்கள், கிரேக்கர்கள் அல்லது தேவனுடைய சபையார் தவறிழைக்கும்படிச் செய்யவைக்கிற எந்தச் செயலையும் செய்யாதீர்கள். 33 நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.
11 நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள்.
2008 by World Bible Translation Center