Revised Common Lectionary (Complementary)
ஒரு துதிப்பாடல்.
98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
எங்கள் ராஜாவாகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும், பூமியும்
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது
21 தாவீது ராஜாவாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், “சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்” என்றார். 2 (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.)
ராஜாவாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான். 3 தாவீது கிபியோனியரிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்” என்றான்.
4 கிபியோனியர் தாவீதிடம், “தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது” என்றனர்.
தாவீது, “அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
5 அதற்கு கிபியோனியர் ராஜா தாவீதிடம், “எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான். 6 சவுலின் ஏழு குமாரர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் குமாரர்களைத் தூக்கில் இடுவோம்” என்றார்கள்.
ராஜாவாகிய தாவீது, “நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்” என்றான். 7 ஆனால் ராஜா யோனத்தானின் குமாரனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் குமாரன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான்.[a] ஆகையால் ராஜா மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான். 8 சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும்[b] ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் குமாரத்தி இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் குமாரன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து குமாரர்களைத் தாவீது அழைத்தான். 9 இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.
தாவீதும் ரிஸ்பாவும்
10 ஆயாவின் குமாரத்தியான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.
11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள். 12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)
13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர். 14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். ராஜா சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.
3 உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும், மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது. 4 தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்.
தேவனுடைய தீர்ப்பு
5 தேவன் தன் தீர்ப்பில் சரியாக உள்ளார் என்பதற்கு அதுவே நிரூபணமாக இருக்கிறது. தேவன் தன் இராஜ்யத்துக்கு ஏற்றவர்களாக நீங்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார். உங்கள் துன்பங்கள் கூட அந்த இராஜ்யத்துக்காகத்தான். 6 எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார். 7 துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார். 8 பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார். 9 என்றென்றும் நித்திய அழிவுகள் நேரும் வகையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரோடு இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவருடைய பெரும் வல்லமையிடம் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். 10 தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள்.
11 அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும், மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம். 12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
2008 by World Bible Translation Center