Old/New Testament
பிற சட்டங்களும், கட்டளைகளும்
21 அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும்.
2 “நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு ஆண்டுகள் மட்டுமே உங்களுக்காக உழைப்பான். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவன் விடுதலை பெறுவான். கட்டணமாக எதையும் அவன் செலுத்தத் தேவையில்லை. 3 ஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம். 4 அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.
5 “ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும். 6 இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.
7 “ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை. 8 எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான். 9 அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.
10 “எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும். 11 அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.
12 “ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். 13 ஆனால் ஒருவன் மற்றொருவனைத் திட்டமிடாமல் கொன்றால், தேவன் அந்த விபத்தை அனுமதித்தார் என்று எண்ணலாம். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பிற்காக ஓடி உயிர்தப்பும்படி நியமிப்பேன். அதனால் இத்தகைய ஒருவன் அங்கே ஓடலாம். 14 ஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.
15 “தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்படவேண்டும்.
16 “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.
17 “தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.
18 “இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்கவில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது. 19 தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்.
20 “சில வேளைகளில் ஜனங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் அடிமைகளை அடிப்பார்கள். அடிபட்டு அடிமை மரிக்க நேர்ந்தால், அவனைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும். 21 அடிமை மரிக்காமல் சில நாட்களுக்குப் பின் குணமடைந்தால், அம்மனிதனைத் தண்டிக்க வேண்டாம். ஏனெனில் எஜமானன் அடிமையைப் பணம் கொடுத்து வாங்கியிருந்ததால் அந்த அடிமை அவனுக்குரியவன்.
22 “இரு மனிதர் சண்டையிடும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிவிடக் கூடும். அதனால் உரிய காலத்திற்கு முன்னாலேயே அவள் குழந்தையை பெறலாம். அப்பெண் அதிகமான காயமடையவில்லையென்றால், அவளைக் காயப்படுத்திய மனிதன் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத் தொகை எவ்வளவு என்பதை அப்பெண்ணின் கணவன் தீர்மானிப்பான். அபராதத் தொகையின் அளவைத் தீர்மானிக்க நீதிபதிகள் அவனுக்கு உதவுவார்கள். 23 ஆனால் அப்பெண் மிகுதியாகக் காயமுற்றால் அவளைக் காயப்படுத்திய மனிதன் தண்டனை பெற வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும். 24 கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும், 25 சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும்.
26 “ஒரு மனிதன் அடிமையைக் கண்ணில் அடித்ததால் அவன் குருடனாக நேர்ந்தால், அடிமை விடுதலைபெற வேண்டும். விடுதலைக்குரிய விலை அவன் இழந்த கண்ணேயாகும். இது ஆண் அடிமைக்கும், பெண்ணடிமைக்கும் பொதுவாகும். 27 ஒரு எஜமானன் தன் அடிமையை வாயில் அடித்து, அடிமை பல்லை இழக்க நேர்ந்தால் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அவன் விடுதலைக்கு அவன் பல்லே விலையாக அமையும். இது ஆண் அல்லது பெண் அடிமைக்கும் பொருந்தும்.
28 “ஒரு மனிதனின் மாடு ஒரு ஆணையோ, பெண்ணையோ கொன்றால், அந்த மாட்டைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அதை உணவாக உட்கொள்ளக் கூடாது. அதன் உரிமையாளன் குற்றவாளி அல்ல. 29 அது முன்பு பலரைத் தாக்கியபோது உரிமையாளன் எச்சரிக்கப்பட்டும், அவன் ஓரிடத்தில் அதைக் கட்டியோ, அடைத்தோ வைக்காமலிருந்ததால் அவன் குற்றவாளியாவான். ஏன்? அது வெளியே தனித்துச் சென்று, யாரையேனும் கொன்றால் அப்போது அதன் எஜமானன் குற்றவாளியாகக் கருதப்படுவான். மாட்டையும் அதன் உரிமையாளனையும் நீ கல்லெறிந்து கொல்ல வேண்டும். 30 மரித்த மனிதனின் குடும்பத்தினர் ஈடாகப் பணத்தைப் பெறலாம், அவர்கள் பணத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மாட்டின் உரிமையாளனைக் கொல்லத் தேவையில்லை. ஆனால் நீதிபதி கூறும் ஈடுப் பணத்தை அவன் செலுத்தவேண்டும்.
31 “ஒருவனின் மகன் அல்லது மகளை மாடு கொன்றாலும் அதே விதி பின்பற்றப்பட வேண்டும். 32 ஆனால் ஒரு அடிமையை மாடு கொன்றால், அந்த அடிமையின் எஜமானனுக்கு மாட்டின் எஜமானன் 30 வெள்ளிப்பணம் கொடுக்கவேண்டும். மாட்டைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆண் அல்லது பெண் அடிமைக்கும் சட்டம் பொதுவானதே.
33 “ஒரு மனிதன் கிணற்றின் மூடியை அகற்றினதாலோ அல்லது ஒரு குழியைத்தோண்டி மூடாமல் விட்டதாலோ, இன்னொருவனின் மிருகம் அக்குழியில் விழுந்தால், அக்குழியைத் தோண்டியவன் குற்றவாளியாவான். 34 அவன் மிருகத்தின் விலையைக் கொடுத்து அம்மிருகத்தின் உடலைப் பெற்றுக்கொள்ளலாம்.
35 “ஒருவனின் மாடு மற்றொருவனின் மிருகத்தைக் கொன்றால் உயிருள்ள மாட்டை விற்றுவிட வேண்டும். அப்பணத்தை இருவரும் சரிபாதியாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட மாட்டையும் அவர்கள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். 36 அம்மனிதனின் மாடு அதற்கும் முன்னர் பிற மிருகங்களைத் தாக்கி காயப்படுத்தியிருந்தால் அதன் உரிமையாளனே மாட்டின் பொறுப்பேற்க வேண்டும். அவன் மாடு மற்ற மாட்டைக் கொன்றிருந்தால் அந்த மாட்டை அவிழ்த்து விட்டபடியால் அதன் உரிமையாளன் குற்றவாளியாவான். அவன் செத்துப்போன மாட்டுக்கு ஈடாக இன்னொரு மாட்டைக் கொடுக்க வேண்டும். அவனது செத்துப்போன மாட்டின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”
22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே, அவன் திருடிய மாட்டுக்குப் பதிலாக ஐந்து மாடுகளைக் கொடுக்க வேண்டும். அல்லது திருடிய ஒரு ஆட்டிற்காக நான்கு ஆடுகளைக் கொடுக்க வேண்டும். திருட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும். 2-4 அவனுக்கு கொடுக்க எதுவும் சொந்தமில்லையென்றால், அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். ஆனால் அந்த மனிதன் தான் திருடிய மிருகத்தை வைத்திருந்தானாகில், தான் திருடிய ஒவ்வொரு மிருகத்திற்காகவும் இரண்டு மிருகங்களைக் கொடுக்க வேண்டும். அது மாடா, கழுதையா, அல்லது ஆடா என்பது ஒரு பொருட்டல்ல.
“இரவில் திருடும்படி ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது திருடன் கொல்லப்பட்டால், அவன் கொலைக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்.
5 “ஒருவன் தன் வயலில் அல்லது திராட்சைத் தோட்டத்தில் நெருப்பு மூட்டக் கூடும். அந்த நெருப்பு பரவி, அடுத்த வயலிலோ அல்லது திராட்சைத் தோட்டத்திலோ பற்றிக்கொள்ள நேர்ந்தால் அயலானின் நஷ்டத்திற்கு ஈடாக அவன் விளைச்சலின் சிறந்த பலனுக்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்.
6 “ஒருவன் வயலின் முட்புதர்களை எரிக்கும்படி நெருப்பு வைக்கக்கூடும். அது பரவி அடுத்தவனின் வயலிலுள்ள பயிர்களையோ, தானியத்தையோ அழித்தால், அழிந்து போனவற்றின் விலையை அழிவுக்குக் காரணமாக இருந்தவன் கொடுக்க வேண்டும்.
7 “ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும். 8 ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்றவாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார்.
9 “காணாமற்போன மாடு, கழுதை, ஆடு அல்லது துணிகளைக் குறித்து இருவர் முரண்பட்டால் நீ என்ன செய்ய வேண்டும்? ஒருவன், ‘இது என்னுடையது’ என்றும் இன்னொருவன், ‘இல்லை, அது எனக்குரியது’ என்றும் கூறுகிறான். இருவரும் தேவனுக்கு முன்னே போக வேண்டும். யார் குற்றவாளி என்பதை தேவன் தீர்மானிப்பார். குற்றவாளியான மனிதன் அப்பொருளின் இருமடங்கு விலையை மற்றவனுக்குக் கொடுக்கவேண்டும்.
10 “ஒருவன் அடுத்தவனிடம் தனது மிருகத்தைச் சில காலம் கவனித்துக்கொள்ளும்படியாக விடலாம். அது கழுதை அல்லது மாடு அல்லது ஆடாக இருக்கலாம். யாரும் பார்க்காதபோது ஒருவன் அதனைக் காயப்படுத்தவோ, கொல்லவோ, திருடவோ செய்தால் நீ என்ன செய்ய வேண்டும்? 11 அதைப் பெற்றுகொண்டவன் அம்மிருகத்தைத் தான் திருடவில்லை என்பதை விளக்க வேண்டும். அது உண்மையானால் கர்த்தரின் சந்நிதியில் சென்று நான் திருடவில்லை என்று ஆணையிட வேண்டும். மிருகத்தின் உரிமையாளனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் அந்த மிருகத்திற்காக எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை. 12 ஆனால் அண்டை வீட்டுக்காரன் மிருகத்தைத் திருடியிருந்தால், அவன் அதற்கான விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். 13 காட்டு மிருகங்கள் அதனைக் கொன்றிருந்தால் அதன் உடலைச் சாட்சியாக அண்டை வீட்டுக்காரன் எடுத்துவர வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்துக்காக அவன் விலை கொடுக்க வேண்டாம்.
14 “அண்டை வீட்டுக்காரனிடமிருந்து ஒருவன் எதையேனும் இரவல் பெற்றுக்கொண்டால், அவனே அப்பொருளுக்குப் பொறுப்பாளியாவான். ஒரு மிருகம் காயமுற்றாலோ அல்லது மரித்தாலோ அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தின் விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொருளின் உரிமையாளன் அங்கு இல்லாதிருந்தால், அண்டை வீட்டுக்காரன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். 15 ஆனால் உரிமையாளனே அங்கிருந்தால் அயலான் அதற்கு பொறுப்பேற்க அவசியமில்லை. அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தை வேலைக்குப் பயன்படுத்தும்போது அதற்குக் குத்தகை செலுத்தும் பட்சத்தில் அம்மிருகம் மரித்தாலோ அல்லது காயப்பட்டாலோ அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிருகத்தைப் பயன்படுத்தியதற்காக அவன் ஏற்கெனவே கொடுத்த பணமே போதுமானது.
16 “மணமாகாத கன்னியிடம் ஒரு மனிதன் பாலின உறவு கொண்டால், அவன் அவளை மணந்துகொள்ள வேண்டும். அப்பெண்ணின் தந்தைக்குப் பரிசுப் பொருளை அவன் கொடுக்க வேண்டும். 17 பெண்ணின் தந்தை அவனைத் தன் மகள் மணக்கச் சம்மதிக்காவிட்டாலும் கூட, அவன் அப்பணத்தைக் கொடுத்துத் தீர வேண்டும். அவளுக்குரிய முழு ஈட்டுப் பொருளையும் அவன் செலுத்தியே ஆகவேண்டும்.
18 “எந்தப் பெண்ணையும் மந்திரம் செய்ய நீ அனுமதிக்கக் கூடாது. அவள் மந்திரம் செய்தால் அவள் வாழ அனுமதிக்காதே.
19 “மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.
20 “பொய்த் தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்.
21 “முன்பு எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். எனவே, உங்கள் நாட்டில் வாழும் எந்த அந்நியனையும் ஏமாற்றவோ, காயப்படுத்தவோ கூடாது.
22 “கணவனை இழந்த பெண்களுக்கும், பெற்றோரற்ற குழந்தைகளுக்கும் எந்தத் தீமையும் செய்யாதீர்கள். 23 விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் ஏதேனும் தீங்கு செய்தீர்களானால் நான் அதை அறிவேன். அவர்கள் பட்ட துன்பத்தைப்பற்றிக் கூறும்போது, நான் கேட்பேன். 24 எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள்.
25 “என் ஜனங்களில் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் கடனாகப் பணம் கொடுத்தால், அதற்கு வட்டி கேட்காதீர்கள். உடனே அப்பணத்தைத் திருப்பும்படியாக வற்புறுத்தக் கூடாது. 26 நீ கொடுக்கவிருக்கும் பணத்திற்கு அடமானமாக தன் மேற்சட்டையை ஒருவன் கொடுத்தால் சூரியன் மறையும் முன்னர் அந்த மேற்சட்டையைத் திரும்பக் கொடுத்து விடவேண்டும். 27 அம்மனிதனுக்கு மேற்சட்டை இல்லாமலிருந்தால் உடலைப் போர்த்திக்கொள்ள எதுவுமிராது. அவன் தூங்கும்போது சளிபிடிக்கும். அவன் என்னைக் கூப்பிட்டால் நான் அவனைக் கேட்பேன். நான் இரக்கம் பொருந்தியவராக இருப்பதால் நான் அவனுக்கு செவிகொடுப்பேன்.
28 “நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.
29 “அறுவடையின்போது நீங்கள் முதல் தானியத்தையும், முதல் பழங்களின் ஈற்றையும் எனக்குக் கொடுக்க வேண்டும். வருடத்தின் இறுதிவரைக்கும் காத்திராதீர்கள்.
“உங்கள் முதற்பேறான மகன்களை எனக்குக் கொடுங்கள். 30 முதலில் பிறந்த ஆடுகளையும், மாடுகளையும் எனக்குக் கொடுங்கள். முதற்பேறான குட்டியானது தாயுடன், ஏழுநாட்கள் இருக்கட்டும், எட்டாவது நாள் அதை எனக்குக் கொடுங்கள்.
31 “நீங்கள் என் விசேஷ ஜனங்கள். எனவே கொடிய மிருகங்களால் கொல்லப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை உண்ணாதீர்கள். அந்த மரித்த மிருகத்தை நாய்கள் தின்னட்டும்.
விவாகரத்தைப்பற்றி போதனை(A)
19 இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார். 2 மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.
3 இயேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி,, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர்.
4 அவர்களுக்கு இயேசு,, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் [a] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். 5 தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’ [b] 6 எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.
7 அதற்குப் பரிசேயர்கள்,, “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள்.
8 அதற்கு இயேசு,, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. 9 நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.
11 அதற்கு இயேசு,, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார். 12 சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
இயேசுவும் குழந்தைகளும்(B)
13 பிறகு, இயேசு தம் குழந்தைகளைத் தொடுவார் என்பதற்காகவும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார் என்பதற்காகவும் மக்கள் தம் குழந்தைகளை அவரிடம் அழைத்து வந்தனர். இதைக் கண்ட சீஷர்கள் இயேசுவிடம் குழந்தைகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு மக்களிடம் கூறினார்கள். 14 ஆனால் இயேசு,, “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம், ஏனென்றால் பரலோக இராஜ்யம் இக்குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே உரியது” என்று கூறினார். 15 அதன் பின் குழந்தைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
பணக்காரனும் இயேசுவும்(C)
16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி,, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
17 இயேசு அவனிடம்,, “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.
18 ,“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன்.
அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. 19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். [c] ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” [d] என்று பதில் சொன்னார்.
20 அதற்கு அந்த இளைஞன்,, “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.
21 இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.
22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.
23 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம். 24 ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.
25 இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள்,, “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.
26 இயேசு தம் சீஷர்களைப் பார்த்து,, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.
27 பேதுரு இயேசுவிடம்,, “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.
28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் [e] பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 29 மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 30 உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center