Old/New Testament
வாரிசு சிக்கல்கள்
27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்து “மகனே” என்றான்.
ஏசா “இங்கே இருக்கிறேன்” என்றான்.
2 ஈசாக்கு அவனை நோக்கி, “எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம். 3 எனவே, உன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போ. நான் உண்பதற்காக ஒரு மிருகத்தைக் கொன்று வா. 4 நான் விரும்புகிற அந்த உணவைத் தயாரித்து வா. அதை நான் உண்ண வேண்டும். மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். 5 எனவே ஏசா வேட்டைக்குப் போனான்.
யாக்கோபு ஈசாக்கை ஏமாற்றியது
ஈசாக்கு ஏசாவிடம் கூறுவதை ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். 6 இதனை அவள் யாக்கோபிடம் கூறினாள். “கவனி! உன் தந்தை உன் சகோதரனிடம் கூறுவதைக் கேட்டேன். 7 அவர் ‘நான் உண்பதற்கு ஒரு மிருகத்தைக் கொன்று, எனக்கு உணவை சமைத்து வா, நான் உண்பேன். பிறகு நான் மரிப்பதற்கு முன் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்றார். 8 எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய். 9 நீ நமது ஆட்டு மந்தைக்குப் போ இரண்டு இளம் ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. உன் தந்தை விரும்புவதுபோல நான் சமைத்து தருவேன். 10 பிறகு அதனை உன் தந்தைக்குக் கொடு. அவர் உன்னைத் தான் மரிப்பதற்கு முன்னர் ஆசீர்வதிப்பார்” என்றாள்.
11 ஆனால் அவன் தாயிடம், “என் சகோதரனோ உடல் முழுவதும் முடி உள்ளவன். நான் அவ்வாறில்லை. 12 என் தந்தை என்னைத் தொட்டுப் பார்த்தால் நான் ஏசா இல்லை என்பதைத் தெரிந்துகொள்வார். பின் அவர் என்னை ஆசீர்வதிக்கமாட்டார்; சபித்துவிடுவார். நான் ஏமாற்றியதை அறிந்துகொள்வாரே” என்றான்.
13 அதனால் ரெபெக்காள் அவனிடம், “ஏதாவது தவறு ஏற்பட்டால் அதற்கான சாபம் என்மேல் விழட்டும், நீ போய் எனக்காக இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா” என்றாள்.
14 அதனால் யாக்கோபு வெளியே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வந்தான். அவள் அதனை ஈசாக்கு விரும்பும் வகையில் சிறப்பான முறையில் சமைத்தாள். 15 பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். 16 ஆட்டுத் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் கட்டினாள். 17 பிறகு அவள் மகன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
18 யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான்.
அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.
19 யாக்கோபு தன் தந்தையிடம், “நான் ஏசா, உங்கள் மூத்த மகன். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன். இப்போது உட்கார்ந்து நான் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சியை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.
20 ஆனால் ஈசாக்கு தன் மகனிடம், “இவ்வளவு வேகமாக நீ எவ்வாறு வேட்டையாடி மிருகத்தைக் கொன்றாய்?” என்று கேட்டான்.
இதற்கு யாக்கோபு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் விரைவாக வேட்டையாடி மிருகத்தைக் கொல்ல எனக்கு உதவினார்” என்று சொன்னான்.
21 பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் மகன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான்.
22 யாக்கோபு அவனது அருகிலே போனான். ஈசாக்கு அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “உனது சத்தம் யாக்கோபினுடையதுபோல் உள்ளது. ஆனால் உனது கைகள் ஏசாவின் கைகள் போல் முடி நிறைந்ததாய் இருக்கிறது” என்றான். 23 ஈசாக்கினால் அவனை யாக்கோபு என்று கண்டுகொள்ள முடியவில்லை. எனவே, அவனை ஆசீர்வதித்தான்.
24 எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய மகன் ஏசாதானா?” என்று கேட்டான்.
யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.
யாக்கோபிற்கு ஆசீர்வாதம்
25 பிறகு ஈசாக்கு, “அந்த உணவைக் கொண்டு வா. அதனை உண்டு விட்டு உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். எனவே யாக்கோபு உணவைக் கொடுத்தான். அவனும் அதை உண்டான். பின் யாக்கோபு கொஞ்சம் திராட்சை ரசத்தைக் கொடுத்தான். அதையும் அவன் குடித்தான்.
26 பிறகு ஈசாக்கு அவனிடம், “மகனே அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். 27 எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான்.
“என் மகன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான்.
28 கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய்.
29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும்.
நாடுகள் உனக்கு அடிபணியட்டும்.
உன் சகோதரர்களையும் நீ ஆள்வாய்.
உன் தாயின் மகன்கள் உனக்கு அடிபணிந்து கீழ்ப்படிவார்கள்.
“உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்.
உன்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று கூறினான்.
ஏசாவின் ஆசீர்வாதம்
30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடித்தான். யாக்கோபு தந்தையிடமிருந்து போன உடனேயே ஏசா வேட்டையை முடித்துவிட்டு உள்ளே வந்தான். 31 தந்தைக்கென வேட்டையாடிய மிருகத்தைச் சிறப்பாக சமைத்தான். அதனை எடுத்துக்கொண்டு தந்தையிடம் போனான். “தந்தையே நான் உங்களின் மகன் எழுந்திருங்கள். உங்களுக்காக வேட்டையாடி சமைத்துக்கொண்டு வந்த உணவை உண்ணுங்கள். பிறகு என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.
32 ஆனால் ஈசாக்கோ “நீ யார்” என்று கேட்டான்.
“நான்தான் உங்கள் மூத்தமகன் ஏசா” என்றான்.
33 அதனால் ஈசாக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான். “நீ வருவதற்கு முன்னால் இறைச்சி உணவு சமைத்துக் கொடுத்துவிட்டுப் போனானே அவன் யார்? நான் அதனை உண்டு அவனை ஆசீர்வாதம் செய்தேனே. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.
34 ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டான். பிறகு கோபமும் ஆத்திரமும் அடைந்து அழுதான். தந்தையிடம் “என்னையும் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றான்.
35 ஈசாக்கு அவனிடம், “உன் தம்பி என்னை ஏமாற்றிவிட்டான். அவன் வந்து உனது ஆசீர்வாதத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்” என்றான்.
36 “அவன் பெயரே யாக்கோபு, (தந்திரசாலி என்றும் பொருள்.) அவனுக்குப் பொருத்தமான பெயர்தான். அவன் இருமுறை என்னை ஏமாற்றி இருக்கிறான். முன்பு முதல் மகன் என்ற உரிமைப் பங்கையும் அவன் பெற்றுக்கொண்டான். இப்போதோ எனது ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொண்டானே” என்று புலம்பினான். பிறகு, “எனக்கென்று ஏதாவது ஆசீர்வாதம் மீதி இருக்கிறதா” என்று கேட்டான்.
37 அதற்கு ஈசாக்கு, “இல்லை. இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நான் அவனுக்கு உன்மீது ஆளுகை செலுத்தும்படி ஆசீர்வதித்துவிட்டேன். அவனது சகோதரர்கள் அனைவரும் அவனுக்கு வேலை செய்வார்கள் என்றும் கூறிவிட்டேன். ஏராளமான உணவும் திராட்சைரசமும் பெறுவான் என்றும் ஆசீர்வதித்து விட்டேன். உனக்கென்று தர எதுவும் இல்லையே” என்றான்.
38 ஆனால் தொடர்ந்து ஏசா தந்தையை கெஞ்சிக்கொண்டிருந்தான். “அப்பா உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்தான் உள்ளதா, என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று அழுதான்.
39 பிறகு ஈசாக்கு
“நல்ல நிலத்தில் நீ வாழமாட்டாய்.
அதிக மழை இருக்காது.
40 நீ உன் பட்டயத்தால்தான் வாழ்வாய்.
உன் தம்பிக்கு நீ அடிமையாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் விடுதலைக்காகச் சண்டையிட்டு
அவனது கட்டுகளை உடைத்துவிடுவாய்” என்றார்.
யாக்கோபு நாட்டைவிட்டு செல்கிறான்
41 அதற்குப் பின் ஏசா யாக்கோபுக்கு எதிராக வஞ்கசம் கொண்டான். ஏனென்றால் தந்தையின் ஆசீர்வாதத்தை அவன் பெற்றுள்ளான். “என் தந்தை விரைவில் மரித்துபோவார். அதனால் நான் சோகமடைவேன். அதற்குப் பின் நான் யாக்கோபை கொன்றுவிடுவேன்” என்று தனக்குள் ஏசா கூறிக்கொண்டான்.
42 யாக்கோபை கொல்ல வேண்டும் என்ற ஏசாவின் திட்டத்தை ரெபெக்காள் அறிந்துகொண்டாள். அவள் யாக்கோபை அழைத்து அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லத் திட்டமிடுகிறான். 43 எனவே நான் சொல்கிறபடி நீ செய். ஆரானில் இருக்கிற என் சகோதரன் லாபானிடம் ஓடிச் சென்று அவனோடு இரு. 44 உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு. 45 கொஞ்சக் காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள்.
46 பிறகு ரெபெக்காள் ஈசாக்கிடம், “உமது மகன் ஏசா ஏத்தியர் பெண்களை மணந்துகொண்டான். நான் அந்தப் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் நம் இனத்தவர்களல்ல. யாக்கோபும் இதுபோல் மணம் செய்தால் நான் மரித்துப்போவேன்” என்றாள்.
யாக்கோபு மனைவியைத் தேடுதல்
28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. 2 எனவே நீ இந்த இடத்தைவிட்டுப் பதான் ஆராமுக்குப் போ. உன் தாயின் தந்தையான பெத்துவேல் வீட்டிற்குப் போ. உன் தாயின் சகோதரனான லாபான் அங்கு வாழ்கிறான். அவனது மகள்களில் ஒருத்தியை மணந்துகொள். 3 சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். உனக்கு நிறைய குழந்தைகள் பிறப்பார்கள். ஒரு பெரிய தேசத்தின் தந்தையாவாய். 4 தேவன் உன்னையும் உன் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பார். ஆபிரகாமையும் அப்படித்தான் ஆசீர்வதித்தார். நீ வாழ்கிற நாடு உனக்குச் சொந்தமாகும். தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த நாடு இது” என்றான்.
5 ஆகவே ஈசாக்கு யாக்கோபை பதான் ஆராமுக்கு அனுப்பி வைத்தான். யாக்கோபும் லாபானிடம் போனான். பெத்துவேல் லாபானுக்கும் ரெபெக்காளுக்கும் தந்தை. ரெபெக்காள் ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் தாய்.
6 தன் தந்தை யாக்கோபை ஆசீர்வதித்ததையும் ஒரு மனைவியைத் தேட யாக்கோபை பதான் ஆராமுக்கு தன் தந்தை அனுப்பியதையும், கானானியப் பெண்களை மணந்துகொள்ளக் கூடாது என்று ஆணை இட்டதையும் ஏசா அறிந்துகொண்டான். 7 யாக்கோபு தன் தாயும், தந்தையும் சொன்னதைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்குப் போனதையும் அறிந்தான். 8 இதனால் ஈசாக்கு தம் பிள்ளைகள் கானானியப் பெண்களை மணந்துகொள்வதை விரும்பவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 9 அவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனாலும் அவன் இஸ்மவேலிடம் போய் அவன் மகளாகிய மகலாத்தை மணந்துக்கொண்டான். இஸ்மவேல் ஆபிரகாமின் மகன். மகலாத் நெபாயோத்தின் சகோதரி.
பெத்தேல்-தேவனுடைய வீடு
10 யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்குப் போனான். 11 அவன் பயணத்தின்போது சூரியன் மறைந்தது. அன்றைய இரவு தங்கும்பொருட்டு ஒரு இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு கல்லை எடுத்து அதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 12 யாக்கோபு ஒரு கனவு கண்டான். கனவில் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரமாய் இருந்த ஒரு ஏணியைக் கண்டான். தேவதூதர்கள் அதில் ஏறி மேலும் கீழும் வந்து போய்க்கொண்டிருந்தனர். 13 கர்த்தர் ஏணியின் அருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டான். கர்த்தர், “நானே தேவன். உன் தாத்தாவான ஆபிரகாமுக்கும் நானே தேவன். நான் ஈசாக்குக்கும் தேவன். இப்போது நீ படுத்திருக்கிற பூமியையே உனக்குக் கொடுப்பேன். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் உரியதாகும். 14 உனக்கு எண்ணிறந்த சந்ததிகள் உருவாகுவார்கள். பூமியில் உள்ள தூளைப்போன்று அவர்கள் எண்ணிக்கையில் நிறைந்திருப்பார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமாக வடக்கிலும் தெற்கிலுமாகப் பரவுவார்கள். உன்னாலும் உன் சந்ததிகளாலும் உலகிலுள்ள குடும்பங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
15 “நான் உன்னோடு இருக்கிறேன். நீ போகிற ஒவ்வொரு இடத்திலும் உன்னைக் காப்பாற்றுவேன். நான் மீண்டும் உன்னை இங்கே கொண்டுவருவேன். எனது வாக்குறுதியை முடிக்கும்வரை உன்னை விட்டு விலகமாட்டேன்” என்றார்.
16 உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான்.
17 அவனுக்கு பயம் வந்தது, “இது மிகச் சிறந்த இடம். இது தேவனுடைய வீடு, பரலோகத்தின் வாசல்” என்றான்.
18 யாக்கோபு அதிகாலையில் எழுந்ததும் தலைக்கு வைத்துப்படுத்த கல்லை நிமிர்த்தி வைத்து, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். இவ்வாறு அவன் அந்தக் கல்லை நினைவுச் சின்னமாக ஆக்கினான். 19 இந்த நகரத்தின் பெயர் லூஸ். ஆனால் யாக்கோபு அதற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்.
20 பின் யாக்கோபு: “தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், 21 என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார். 22 இந்த இடத்தில் இக்கல்லை ஞாபகார்த்தக் கல்லாக நிறுத்துவேன். தேவனுக்கான பரிசுத்த இடம் இது என்று அடையாளம் காட்டும். தேவன் எனக்குக் கொடுக்கும் அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்தான்.
இயேசுவைப் பின்தொடர்தல்(A)
18 அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். 19 பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து,, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான்.
20 அதற்கு இயேசு,, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார்.
21 இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.
22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.
இயேசு ஒரு புயலை நிறுத்துதல்(B)
23 இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 24 படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். 25 அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள்,, “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள்.
26 இயேசு அவர்களிடம்,, “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.
27 படகிலிருந்தவர்கள் வியப்புற்று,, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர்.
இருவரிடமிருந்து பிசாசுகளை விரட்டுதல்(C)
28 இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை. 29 இயேசுவிடம் வந்த அவ்விருவரும்,, “தேவகுமாரனே, எங்களிடமிருந்து என்ன வேண்டும்? தக்க சமயத்திற்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்த வந்தீரோ?” என்று சத்தமிட்டனர்.
30 அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன. 31 அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம்,, “இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்” என்று கெஞ்சின.
32 இயேசு பிசாசுகளிடம்,, “செல்லுங்கள்” என்றார். உடனே, அப்பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கி பன்றி கூட்டத்திற்குள் சென்றன. பிறகு, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் குன்றிலிருந்து கீழிறங்கி ஏரிக்குள் ஓடின. எல்லாப் பன்றிகளும் நீரில் மூழ்கின. 33 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள். 34 பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.
2008 by World Bible Translation Center