Old/New Testament
ஏசாவின் குடும்பம்
36 இது ஏசாவின் குடும்ப வரலாறு. 2 ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான். 3 இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். 4 ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற குமாரன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற குமாரன் பிறந்தான். 5 அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோரா என்ற மூன்று குமாரர்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர்.
6-8 யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)
9 ஏசா ஏதோம் ஜனங்களுக்குத் தந்தையானான். சேயீர் எனும் மலைப் பகுதியில் வாழ்ந்த ஏசா குடும்பத்தினரின் பெயர்கள் பின்வருமாறு:
10 ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்த குமாரன் எலிப்பாஸ். ஏசாவுக்கும் பஸ்மாத்துக்கும் பிறந்த குமாரன் ரெகுவேல்.
11 எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து குமாரர்கள்.
12 எலிப்பாசுக்கு திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற குமாரன் பிறந்தான்.
13 ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு குமாரர்கள்.
இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள்.
14 ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் குமாரத்தி ஆனாகினின் குமாரத்தியான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் குமாரர்களைப் பெற்றாள்.
15 ஏசாவின் குமாரர்களில் கீழ்க்கண்ட கோத்திரங்கள் தோன்றினர்.
ஏசாவின் மூத்த குமாரன் எலீப்பாஸ். எலீப்பாசிலிருந்து தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், 16 கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள்.
இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள்.
17 ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் குமாரர்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள்.
இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள்.
18 ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள்.
19 இவர்கள் எல்லோரும் ஏசாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
20 அந்த நாட்டில் ஏசாவுக்கு முன் வாழ்ந்த சேயீருக்கு
லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 21 திஷோன், ஏதசேர், திஷான் என்னும் குமாரர்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் குமாரர்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
22 லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் குமாரர்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
23 சோபாலினுக்கு அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் எனும் குமாரர்கள் இருந்தனர்.
24 சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் குமாரர்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான்.
25 ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
26 திஷோனுக்கு எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் எனும் குமாரர்கள் இருந்தனர்.
27 ஏத்சேனுக்கு பில்கான், சகவான், அக்கான் என்னும் குமாரர்கள் இருந்தனர்.
28 திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் குமாரர்கள் இருந்தனர்.
29 ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 30 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள்.
31 அப்பொழுது ஏதோமிலே ராஜாக்கள் இருந்தார்கள். இஸ்ரவேலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏதோமில் பல மன்னர்கள் இருந்தனர்.
32 பேயோர் எனும் ராஜாவின் குமாரனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான்.
33 பேலா மரித்ததும் யோபாப் ராஜா ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் குமாரன்.
34 யோபாப் மரித்ததும் ஊசாம் அரசாண்டான். இவன் தேமானிய நாட்டினன்.
35 ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் குமாரன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன்.
36 ஆதாத் மரித்தபின் சம்லா அரசாண்டான். இவன் மஸ்ரேக்கா ஊரைச் சார்ந்தவன்.
37 சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன்.
38 சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய குமாரன்.
39 பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் குமாரத்தி.
40-43 ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான்.
ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
கனவு காணும் யோசேப்பு
37 கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான். 2 இது யாக்கோபின் குடும்ப வரலாறு:
யோசேப்பு ஓர் 17 வயது இளைஞன். தன் சகோதரர்களோடு சேர்ந்து ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்வது அவனது வேலை. பில்காள், சில்பாள், ஆகியோரின் குமாரர்களும் அவனோடு இருந்தனர் (பில்காளும, சில்பாளும் அவனது தந்தையின் மனைவிகள்.) யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த கெட்ட செயல்களைத் தந்தையிடம் சொன்னான். 3 யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற குமாரர்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. 4 யோசேப்பின் சகோதரர்கள், தங்கள் தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். இதனால் அவர்கள் அவனை வெறுத்தனர். எனவே அவர்கள் அவனோடு அன்பாகப் பேசுவதில்லை.
5 ஒரு நாள் யோசேப்புக்கு விசேஷமான கனவு வந்தது. அவன் அதனைச் சகோதரர்களிடம் சொன்னான். அதனால் அவர்கள் அவனை மேலும் வெறுத்தனர்.
6 யோசேப்பு, “நான் ஒரு கனவு கண்டேன். 7 நாம் எல்லோரும் வயலில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். கோதுமை அரிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது என்னுடைய கட்டு நிமிர்ந்திருந்தது. உங்கள் கட்டுகள் என் கட்டுகளைச் சுற்றி வந்து வணங்கின” என்றான்.
8 அவனுடைய சகோதரர்கள், “இதனால் நீ ராஜாவாகி எங்களையெல்லாம் ஆளலாம் என்று நினைக்கிறாயா?” எனக் கேட்டனர். அவன் சகோதரர்கள் இக்கனவைப்பற்றி அறிந்தபிறகு அதிகமாக அவனை வெறுத்தனர்.
9 பிறகு யோசேப்புக்கு இன்னொரு கனவு வந்தது. அதையும் அவன் அவர்களிடம் சொன்னான். “நான் இன்னொரு கனவு கண்டேன். அதில் சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கின” என்றான்.
10 அவன் அக்கனவைத் தந்தையிடமும் சொன்னான். ஆனால் அவனது தந்தை அவனை விமர்சனம் செய்து, “என்ன மாதிரியான கனவு இது? நானும் உனது தாயும் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என நினைக்கிறாயா?” என்று கேட்டான். 11 யோசேப்பின் சகோதரர்கள் தொடர்ந்து அவன்மீது பொறாமைகொண்டிருந்தனர், அவன் தந்தையோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டு, அது என்னவாக இருக்கும் என்று யோசனை செய்தான்.
12 ஒரு நாள் யோசேப்பின் சகோதரர்கள் சீகேமிற்குத் தங்கள் தந்தையின் ஆடுகளை மேய்க்கப் போனார்கள். 13 சில நாட்களான பின்பு யாக்கோபு யோசேப்பிடம், “சீகேமிற்குப் போ. அங்கு உன் சகோதரர்கள் ஆடு மேய்க்கிறார்கள்” என்றான்.
யோசேப்பும், “நான் போகிறேன்” என்று கூறினான்.
14 யாக்கோபு அவனிடம், “போய் உன் சகோதரர்களும், ஆடுகளும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்து வா” என்றான். அவனை எபிரோன் சமவெளியிலிருந்து சீகேமிற்கு அனுப்பினான்.
15 சீகேமிற்குப் போகும்போது யோசேப்பு வழிதப்பிவிட்டான். ஒரு மனிதன் இவன் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து, “யாரை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
16 “நான் என் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
17 அவனோ, “அவர்கள் ஏற்கெனவே தோத்தானுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். எனவே யோசேப்பும் தோத்தானுக்குப் போய் சகோதரர்களைக் கண்டுகொண்டான்.
அடிமையாக யோசேப்பு விற்கப்படுதல்
18 யோசேப்பு தூரத்தில் வரும்போதே அவனது சகோதரர்கள் அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தார்கள். 19 அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான். 20 இப்பொழுது நம்மால் அவனைக் கொல்லமுடியும். கொன்று ஏதாவது ஒரு கிணற்றில் அவன் பிணத்தை எறிந்துவிடுவோம். ஏதோ காட்டு மிருகம் அவனைக் கொன்றுவிட்டதாகத் தந்தையிடம் சொல்லுவோம். அவனது கனவுகள் பயனற்றவை என்று நீரூபிப்போம்” எனப் பேசிக்கொண்டனர்.
21 ஆனால் யோசேப்பைக் காப்பாற்ற ரூபன் விரும்பினான். “அவனைக் கொல்ல வேண்டாம். 22 அவனைத் தூக்கி பாலைவனத்திலுள்ள இந்தக் கிணற்றில் போட்டுவிடுங்கள்” என்றான். பிறகு அவனைக் காப்பாற்றி தந்தையிடம் அனுப்பலாம் என்று அவன் திட்டம் போட்டான். 23 யோசேப்பு சகோதரர்களிடம் வந்தான். அவர்கள் அவனை அடித்து அவனது அழகான மேல் அங்கியைக் கிழித்தனர். 24 பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர்.
25 அவன் கிணற்றில் கிடக்கும்போது அவர்கள் மேலே உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது வியாபாரிகள் கூட்டமாக கீலேயாத்திலிருந்து எகிப்து நோக்கிப் போவதைக் கண்டனர். அவர்கள் ஒட்டகங்களில் நிறைய செல்வங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றனர். 26 எனவே யூதா சகோதரர்களிடம், “யோசேப்பைக் கொன்று மறைத்து விடுவதால் நமக்கு என்ன லாபம்? 27 அதைவிட அவனை வியாபாரிகளிடம் விற்றுவிட்டால் நிறைய லாபம் கிடைக்குமே, சொந்த சகோதரனைக் கொன்றோம் என்ற பழியும் இருக்காதே” என்றான். மற்ற சகோதரர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். 28 மீதியானிய வியாபாரிகள் அருகில் வந்ததும் யோசேப்பைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை விற்றுவிட்டனர். அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
29 இச்சமயத்தில் ரூபன் அவர்களோடு இல்லை. அவனுக்கு அவர்கள் யோசேப்பை விற்றுவிட்டார்கள் என்பது தெரியாது. அவன் கிணற்றைப் பார்த்தபோது அவன் இல்லாததை அறிந்து வருத்தப்பட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 30 ரூபன் தன் சகோதரர்களிடம் போய், “அந்த இளைஞன் கிணற்றில் இல்லையே, நான் என்ன செய்வது?” என்று கேட்டான். 31 அச்சகோதரர்கள் ஒரு ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்தனர். 32 பிறகு அதைக் கொண்டுபோய் தந்தையிடம் காட்டி, “இந்த அங்கியைக் கண்டெடுத்தோம். இது யோசேப்பினுடையதா?” என்று கேட்டனர்.
33 தந்தை அந்த அங்கியைப் பார்த்துவிட்டு அது யோசேப்பினுடையது என்று அறிந்துகொண்டான். “ஆமாம் இது அவனுடையதுதான். ஒருவேளை ஏதாவது காட்டு மிருகம் அவனைக் கொன்றிருக்கும். என் குமாரன் யோசேப்பு காட்டு மிருகத்தால் உண்ணப்பட்டான்” என்று கூறினான். 34 அவனுக்கு வருத்தம் அதிகமாகித் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். பிறகு அவன் தன் சோகத்தை சாக்கினாலான ஆடையை அணிந்து வெளிப்படுத்தினான். அவன் தொடர்ந்து நீண்ட நாள் குமாரனைப் பற்றிய துக்கத்தில் இருந்தான். 35 யாக்கோபின் பிற குமாரர்களும், குமாரத்திகளும் அவனுக்கு ஆறுதல் கூற முயன்றார்கள். ஆனால் அவன் ஆறுதல் அடையவில்லை. “நான் மரிக்கும்வரை என் மகனுக்காக வருத்தப்படுவேன்” என்று கூறினான்.
36 மீதியானிய வியாபாரிகள் எகிப்தில் யோசேப்பை விற்றுவிட்டார்கள். பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்குத் தலைவனுமான போத்திப்பாருக்கு அவனை விற்றார்கள்.
யூதாவும் தாமாரும்
38 அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். 2 யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா. 3 அவளுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர். 4 அவள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள். 5 இன்னொரு குமாரன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்தபோது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.
6 யூதா தன் மூத்த குமாரனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். 7 ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார். 8 பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான்.
9 இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். 10 இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார். 11 பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய குமாரன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள்.
12 பின்னர் சூவாவின் குமாரத்தியான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான். 13 தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதை தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள். 14 எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய குமாரனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதை தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள்.
15 யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான். அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவளை வேசி என்று நினைத்துக்கொண்டான். 16 யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள்.
17 அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான்.
அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள்.
18 அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான்.
அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள். 19 தாமார் தன் வீட்டிற்குப் போய் முக்காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.
20 யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 21 ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான்.
அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர்.
22 எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான்.
23 அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான்.
தாமார் கர்ப்பமாகுதல்
24 மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர்.
யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான்.
25 அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள்.
26 யூதாவுக்கு எல்லாம் புரிந்து போயிற்று, “அவள் சொல்வது சரி, நானே தவறு செய்து விட்டேன். நான் சொன்னபடி என் குமாரன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை” என்று உணர்ந்தான். அவன் மீண்டும் தாமாரோடு பாலின உறவு கொள்ளவில்லை.
27 தாமார் குழந்தைபெறும் காலம் வந்தது. அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்றார்கள். 28 முதலில் ஒரு குழந்தை கையை நீட்டியதும் அதன் கையில் சிவப்புக் கயிற்றைக்கட்டி “அது மூத்த குழந்தை” என்றாள் தாதி. 29 ஆனால் அக்குழந்தை கைகளை உள்ளே இழுத்துக்கொண்ட போது இன்னொரு குழந்தை பிறந்தது. எனவே தாதி, “நீ மீறிக்கொண்டு வந்தாய். அதனால் மீறுதல் உன்னிடம் நிற்கும்” என்று அதற்கு பாரேஸ் என்று பேரிட்டாள். 30 பின்னரே அடுத்த குழந்தை பிறந்தது. அதன் கையில் சிவப்புக் கயிறு இருந்ததால் சேரா என்று பெயரிட்டனர்.
21 “சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22 நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
24 “ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. 25 ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.
யாருக்குப் பயப்படுவது
(லூக்கா 12:2-7)
26 “எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். 27 நான் இவற்றை இருளில் (இரகசியமாக) கூறுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றை வெளிச்சத்தில் கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் இவற்றை அமைதியாக உங்களுடன் மட்டும் மெதுவாகப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றைத் தாராளமாக எல்லா மக்களுக்கும் கூற வேண்டும்.
28 “மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். 29 பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது. 30 உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். 31 எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்.
விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள்
(லூக்கா 12:8-9)
32 “ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் (நின்று கொண்டு) என்னிடம் நம்பிக்கை உடையவனாய் இருப்பதாகக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவான். நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். 33 மாறாக, ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் என்னிடம் நம்பிக்கை உடையவனல்ல எனக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவானல்ல. நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன்.
வித்தயாசமான போதனை
(லூக்கா 12:51-53; 14:26-27)
34 “பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். 35 கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்:
“‘மகன் தன் தந்தைக்கும்,
மகள் தன் தாய்க்கும்,
மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’
36 தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள்.[a]
37 “என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 38 என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 39 என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.”
உங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்
(மாற்கு 9:41)
40 “உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41 தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42 யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”
2008 by World Bible Translation Center