Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 35-36

தாவீதின் பாடல்

35 கர்த்தாவே, என் யுத்தங்களையும்
    என் போர்களையும் நீரே நடத்தும்.
கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும்.
    எழுந்திருந்து எனக்கு உதவும்.
ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும்.
    கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.

சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்களை வெட்கமடையச் செய்யும்.
காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
நான் பிழையேதும் செய்யவில்லை.
    ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
    காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும்.
    அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும்.
    அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன்.
    அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
10 “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை.
    கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர்.
ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து
    அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர்.
    அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
    அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன்.
    ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர்.
    கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன்.
    உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன்.
    அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா?
14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன்.
    அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன்.
தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன்.
    அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன்.
    துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.
15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர்.
    அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல.
ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை.
    அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள்.
16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள்.
    அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்?
    அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள்.
    கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.

18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன்.
    வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன்.
19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது.
    தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.
20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை.
    இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள்.
21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள்.
    அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா!
    நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள்.
22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும்.
    எனவே சும்மா இராதேயும்.
    என்னை விட்டு விலகாதேயும்.
23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும்.
    என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.
24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும்.
    அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
25 அந்த ஜனங்கள், “ஆஹா!
    எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும்.
    கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!”
    என அவர்கள் கூறவிடாதேயும்.
26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன்.
    எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.
    எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும்.
27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள்.
    அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன்.
அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்!
    அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.

28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன்.
    ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.

இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்

36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
    அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
    அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
    எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
    அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
    எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
    ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.

கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
    உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
    கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
    ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
    உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
    அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
    உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
    உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
    தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
    அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.

அப்போஸ்தலர் 25

பவுலின் வாதம்

25 பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். தலைமை ஆசாரியரும் முக்கியமான யூதத் தலைவர்களும் பெஸ்துவுக்கு முன் பவுலுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர். தங்களுக்கு ஓர் உதவி செய்யும்படியாக பெஸ்துவை வேண்டினர். பவுலை எருசலேமுக்கு மீண்டும் அனுப்பும்படியாக பெஸ்துவைக் கேட்டார்கள். வழியில் பவுலைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்தனர்.

ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன். உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான்.

எட்டு அல்லது பத்து நாட்கள் பெஸ்து எருசலேமில் தங்கினான். பின் அவன் செசரியாவுக்குத் திரும்பினான். மறுநாள் பெஸ்து பவுலைத் தனக்கு முன்னால் அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கூறினான். பெஸ்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். பவுல் அறைக்குள் வந்தான். எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டனர். பவுல் பல குற்றங்களைச் செய்தான் என்று யூதர்கள் கூறினார்கள். ஆனால் இக்காரியங்கள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான்.

ஆனால் பெஸ்து யூதர்களைத் திருப்திப்படுத்த நினைத்தான். எனவே அவன் பவுலை நோக்கி, “நீ எருசலேமுக்குப் போக விரும்புகிறாயா? இக்குற்றங்களுக்காக நான் அங்கு நீதி வழங்கவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டான்.

10 பவுல், “இராயனின் நியாயஸ்தலத்திற்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இங்கு நான் நியாயந்தீர்க்கப்படவேண்டும்! நான் யூதர்களுக்கு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 11 நான் ஏதேனும் தவறு செய்து, சட்டமும் நான் அதற்காக இறக்க வேண்டுமெனக் கூறினால், நான் இறப்பதற்குச் சம்மதிக்கிறேன். நான் மரணத்தினின்று தப்பவேண்டுமென்று கேட்கவில்லை. ஆனால் இப்பழிகள் பொய்யெனில் யாரும் என்னை யூதரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் இராயரால் நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறேன்!” என்றான்.

12 பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான்.

ஏரோது அகிரிப்பாவின் முன் பவுல்

13 சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர். 14 அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான். 15 நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவன் மீது வழக்குத் தொடுத்தனர். அவனுக்கு நான் மரண தண்டனை அளிக்க வேண்டுமென யூதர்கள் விரும்பினர். 16 ஆனால் நான், ‘ஒரு மனிதன் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், ரோமர் அவனைப் பிறரிடம் நியாயம் வழங்குவதன் பொருட்டு ஒப்படைப்பதில்லை. முதலில் அம்மனிதன் அவனைப் பழியிடும் மக்களை எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் இட்ட வழக்குகளுக்கு எதிரான தனது கருத்துக்களைச் சொல்லவேண்டும்’ என்று பதில் அளித்தேன்.

17 “எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன். 18 யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். 19 அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்தும் இயேசு என்கிற மனிதனைப் பற்றியும் மட்டுமே கூறினார்கள். இயேசு இறந்தார், ஆனால் பவுல் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். என்று கூறுகிறான். 20 எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன். 21 ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான்.

22 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான்.

23 மறுநாள் அகிரிப்பாவும் பெர்னிசும் அங்கு வந்தார்கள். மிக முக்கியமான மனிதர்களுக்குரிய ஆடைகளை உடுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர். அகிரிப்பாவும் பெர்னிசும் படை அதிகாரிகளும், செசரியாவின் முக்கிய மனிதர்களும் நியாயத்தீர்ப்பு அறைக்குள் சென்றனர். பெஸ்து பவுலை உள்ளே அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

24 பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். 25 நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன். 26 இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம். 27 ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center