Old/New Testament
பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான்
25 சூகியனான பில்தாத் பதிலாக:
2 “தேவனே அரசாள்பவர்.
ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார்.
தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.
3 அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது.
தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
4 தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்?
மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
5 தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல.
நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.
6 ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள்.
பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.
யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான்
26 அப்போது யோபு பதிலாக:
2 “பில்தாத், சோப்பார், எலிப்பாஸ் ஆகியோரே, சோர்வுற்று நலிந்த இம்மனிதனுக்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள்?
ஆம், நீங்கள் உண்மையிலேயே நல்ல ஊக்கமூட்டுபவர்களாக இருந்திருக்கிறீர்கள்!
உண்மையிலேயே நீங்கள் என் தளர்ந்துப்போன கரங்களை மறுபடியும் பெலப்படசெய்தீர்கள்.
3 ஆம், ஞானமற்றவனுக்கு நீங்கள் அற்புதமான அறிவுரையைத் தந்திருக்கிறீர்கள்!
நீங்கள் எத்தனை ஞானவான்கள் என்பதை உண்மையாகவே காட்டியிருக்கிறீர்கள்! [a]
4 இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்?
யாருடைய ஆவி உங்களுக்கு எழுச்சியூட்டியது?
5 “பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன.
6 ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும்.
மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
7 வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார்.
வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார்.
8 தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார்.
மிகுந்த பாரம் மேகங்களை உடைத்துத் திறக்காதபடி தேவன் பார்க்கிறார்.
9 முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார்.
அவர் தமது மேகங்களை அதன் மீது விரித்து அதைப் போர்த்துகிறார்.
10 தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து
ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார்.
11 தேவன் பயமுறுத்தும்போது
வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன.
12 தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது.
தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது.
13 தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும்.
தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது.
14 தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே.
தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம்.
தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான்.
27 பின்பு யோபு தன் விரிவுரையைத் தொடர்ந்தான். அவன்,
2 “உண்மையாகவே, தேவன் உயிரோடிருக்கிறார்.
தேவன் உண்மையாக வாழ்வதைப்போல, அவர் உண்மையாக என்னோடு அநீதியாய் நடக்கிறார்.
ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன் என் வாழ்க்கையைக் கசப்பாக்கினார்.
3 ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும்
தேவனுடைய உயிர்மூச்சு என் மூக்கில் இருக்கும் மட்டும்
4 என் உதடுகள் தீயவற்றைப் பேசாது,
என் நாவு ஒருபோதும் பொய் கூறாது.
5 நீங்கள் சொல்வது சரியென நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
நான் மரிக்கும் நாள் மட்டும், நான் களங்கமற்றவன் என்று தொடர்ந்து சொல்வேன்.
6 நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன்.
நியாயமாக நடப்பதை விட்டுவிடமாட்டேன்.
நான் வாழும்வரை என் மனச்சாட்சி என்னை உறுத்தாது.
7 ஜனங்கள் எனக்கெதிராக எழுந்து நிற்கிறார்கள்.
தீயோர் தண்டிக்கப்படுவதைப் போல என் பகைவர்கள் தண்டனை பெறுவார்கள் என நம்புகிறேன்.
8 ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை.
தேவன் அவன் உயிரை எடுக்கும்போது, அம்மனிதனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.
9 அத்தீயவனுக்குத் தொல்லைகள் விளையும், அவன் தேவனை நோக்கி உதவி வேண்டுவான்.
ஆனால் தேவன் அவனுக்குச் செவிசாய்க்கமாட்டார்!
10 சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பேசுவதில் அவன் களிப்படைந்திருக்க வேண்டும்.
எப்போதும் அம்மனிதன் தேவனிடம் ஜெபம் செய்திருக்க வேண்டும்.
11 “தேவனுடைய வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திட்டங்களை நான் உங்களிடம் மறைக்கமாட்டேன்.
12 உங்கள் சொந்தக் கண்களால் தேவனுடைய வல்லமையைக் கண்டிருக்கிறீர்கள்.
எனவே அந்தப் பயனற்ற காரியங்களை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?
13 தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே
சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கொடியோர் இதையே பெறுவார்கள்.
14 தீயவனுக்குப் பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் அவனது பிள்ளைகள் மரிப்பார்கள்.
தீயவனின் பிள்ளைகளுக்கு உண்பதற்கு போதிய உணவு இராது.
15 அவனது எல்லாப் பிள்ளைகளும் மரிப்பார்கள்.
அவனது விதவை அவனுக்காகத் துக்கப்படமாட்டாள்.
16 தீயோனுக்குத் துகளைப்போன்று மிகுதியான வெள்ளி கிடைக்கலாம்.
களிமண் குவியலைப்போன்று அவனிடம் பல ஆடைகள் இருக்கலாம்.
17 ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும்.
களங்கமற்ற ஜனங்கள் அவனது வெள்ளியைப் பெறுவார்கள்.
18 தீயவன் ஒரு வீட்டைக் கட்டலாம், ஆனால் அது நீண்டகாலம் நிலைக்காது.
அது ஒரு சிலந்தி வலையைப்போன்றும், காவலாளியின் கூடாரத்தைப்போன்றும் இருக்கும்.
19 தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம்.
ஆனால் அவனது கண்களை அவன் திறக்கும்போது, எல்லா செல்வங்களும் மறைந்திருக்கும்.
20 அவன் அச்சமடைவான்.
அது வெள்ளப் பெருக்கைப் போன்றும், புயல்வீசி எல்லாவற்றையும் அடித்துச் செல்வதைப்போன்றும் இருக்கும்.
21 கிழக்குக் காற்று அவனை அடித்துச் செல்லும், அவன் அழிந்துபோவான்.
புயல் அவன் வீட்டிலிருந்து அவனை இழுத்துச் செல்லும்.
22 புயலின் வல்லமையிலிருந்து தீயவன் ஓடிப்போக முயல்வான்
ஆனால், இரக்கமின்றி புயல் அவனைத் தாக்கும்.
23 தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள்.
தீயவன் வீட்டைவிட்டு ஓடுகிறபோது, அவர்கள் அவனைப் பார்த்து சீட்டியடிப்பார்கள்.”
The V a lu e of W is d o m
சபையைத் துன்புறுத்துதல்
12 அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். 2 ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். 3 யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது) 4 ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். 5 எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.
பேதுரு விடுவிக்கப்படுதல்
6 இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.
7 அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. 8 தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.
9 தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். 10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.
11 நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.
12 பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியாளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட்டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். 14 ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள். 15 விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.
16 ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், “நடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.
18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.
ஏரோது அகிரிப்பாவின் மரணம்
பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.
25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.
2008 by World Bible Translation Center