Old/New Testament
28 “வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு,
ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு.
2 மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள்,
செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது.
3 வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள்.
அவைகளை குகைகளின் ஆழமான பகுதிகளில் தேடுகிறார்கள்.
ஆழ்ந்த இருளில் அவர்கள் பாறைகளைத் தேடிப்பார்க்கிறார்கள்.
4 தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள்.
ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள்.
மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள்.
5 நிலத்தின் மேல் உணவு விளைகிறது,
ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது.
6 நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும்.
அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.
7 நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது.
அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை.
8 காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை.
சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.
9 வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள்.
அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.
10 வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள்.
எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
11 பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள்.
அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.
12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?
நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,
பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!
ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,
நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!
பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.
சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.
தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?
எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.
வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.
நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.
தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.
வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.
கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,
இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.
ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.
அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்.
யோபு அவனது பேச்சைத் தொடர்கிறான்
29 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.
2 யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது,
பல மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போன்று என் வாழ்க்கை அமையாதா என விரும்புகிறேன்.
3 அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது.
தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார்.
4 நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன்.
அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
5 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.
6 என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது.
நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.
7 “நான் நகரவாயிலுக்குச் சென்று,
பொது ஜனங்கள் கூடும் இடத்தில் நகர மூப்பர்களுடன் வீற்றிருந்த நாட்கள் அவை.
8 அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்!
நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள்.
முதியோர் எழுந்து நின்றனர்.
என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
9 ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள்.
பிறரும் அமைதியாயிருக்கும்படி அவர்கள் தங்கள் கைகளை வாய்களில் வைத்தார்கள்.
10 மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள்.
ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
11 ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள்,
என்னைப்பற்றி நல்ல காரியங்களைச் சொன்னார்கள்.
12 ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன்.
நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.
13 கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான்.
உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.
14 நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன்.
நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
15 குருடர்களுக்கு நான் கண்களானேன்.
அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு வழி நடத்தினேன்.
முடவருக்கு நான் காலானேன்.
அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அவர்களைச் சுமந்து சென்றேன்.
16 நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன்.
நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன்.
நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.
17 நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன்.
அவர்களிடமிருந்து களங்கமற்றோரைக் காப்பாற்றினேன்.
18 “என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க
வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
19 பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல
நானும் ஆரேக்கியமாயிருப்பேன் என எண்ணியிருந்தேன்.
20 என் பெலன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது.
என் கையிலுள்ள வில் புதுப்பெலன் கொண்டது.
21 “கடந்தக் காலத்தில், ஜனங்கள் எனக்குச் செவி கொடுத்தார்கள்.
அவர்கள் எனது அறிவுரைக்காகக் காத்திருந்தபோது அமைதியாக இருந்தார்கள்.
22 நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை.
என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
23 மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள்.
வசந்த காலத்தில் தரை மழையை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை குடித்தார்கள்.
24 நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன்.
அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.
25 நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன்.
பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று,
நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
விசேஷ அழைப்பு
13 அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். 2 இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.
சீப்புருவில் பர்னபாவும் சவுலும்
4 பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். 5 சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).
6 அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. 7 ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். 8 ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். 9 பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, 10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! 11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.
அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். 12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.
தொடர் ஊழியம்
13 பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான். 14 அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள். 15 மோசேயின் நியாயப் பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன. பின் ஜெப ஆலயத் தலைவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு செய்தி அனுப்பினர். “சகோதரரே, நீங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவுமாறு ஏதேனும் கூறவேண்டியிருந்தால் தயவு செய்து பேசுங்கள்” என்றனர்.
16 பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 17 இஸ்ரவேலின் தேவன் நமது முன்னோரைத் தெரிந்துகொண்டார். அவர்கள் அந்நியராக எகிப்தில் வாழ்ந்த காலத்தில் தேவன் அவரது மக்களுக்கு உதவினார். மிகுந்த வல்லமையால் அந்நாட்டிலிருந்து அவர்களை அழைத்து வந்தார். 18 வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களோடு பொறுமையாக இருந்தார். 19 கானானிலுள்ள ஏழு தேசங்களை தேவன் அழித்தார். அவரது மக்களுக்கு அவர்கள் நாட்டைக் கொடுத்தார். 20 இவையெல்லாம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளில் நடந்தன.
“இதன் பிறகு, சாமுவேல் என்னும் தீர்க்கதரிசியின் காலம் வரைக்கும் தேவன் நமது மக்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்தார். 21 பின் மக்கள் ஒரு மன்னன் வேண்டுமென்று கேட்டனர். தேவன் அவர்களுக்கு கீஷ் என்பவனின் மகனாகிய சவுலைக் கொடுத்தார். சவுல் பென்யமீனின் குடும்ப மரபில் வந்தவன். அவன் நாற்பது ஆண்டுகள் மன்னனாக இருந்தான். 22 தேவன் சவுலை எடுத்துக்கொண்ட பிறகு தாவீதை அவர்களுக்கு மன்னனாக்கினார். தாவீதைக் குறித்து தேவன் கூறியதாவது: ‘ஈசாயின் மகனான தாவீதை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னென்ன செய்யவேண்டுமென நான் நினைக்கிறவற்றை அவன் செய்வான்’
23 “தேவன் தாவீதின் தலைமுறையினரில் ஒருவரை இஸ்ரவேலுக்கு மீட்பராக அனுப்பினார். அவ்வாறு வந்தவர்தான் இயேசு. தேவன் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். 24 இயேசு வரும் முன்னர் எல்லா யூத மக்களுக்கும் யோவான் போதித்தான். அவர்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவதைக் காட்டும் பொருட்டு யோவான் மக்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். 25 யோவான் தன் வேலையை முடித்துக்கொண்டிருக்கும் போது அவன், ‘நான் யாரென்று நினைக்கிறீர்கள். நான் கிறிஸ்து அல்ல. அவர் எனக்குப் பின் வருவார். அவர் மிதியடிகளை அவிழ்ப்பதற்கும் எனக்குத் தகுதி கிடையாது’ என்றான்.
2008 by World Bible Translation Center