Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 பேதுரு 2

ஜீவனுள்ள கல்லும் பரிசுத்தமான நாடும்

எனவே எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் விலகி இருங்கள். பொய் கூறாதீர்கள். போலியாக இருக்காதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். மக்களைக் குறித்துத் தீயன கூறாதீர்கள். இவற்றையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துங்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல இருங்கள். உங்களை ஆவியில் வளர்க்கும் பரிசுத்த பாலைப் போன்ற வேதவசனங்கள் மேல் பசியுடையவர்களாக இருங்கள். அதைப் பருகுவதால் நீங்கள் வளர்ந்து காப்பாற்றப்படுவீர்கள். கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள்.

கர்த்தர் இயேசு ஜீவனுள்ள “தலைக் கல்லாக” இருக்கிறார். உலக மக்களால் ஒதுக்கப்பட்ட கல்லாக அவர் இருந்தார். ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த கல் அவர் தான். தேவனிடம் அவர் விலை மதிப்புள்ளவராக இருக்கிறார். எனவே அவரிடம் வாருங்கள். நீங்களும் ஜீவனுள்ள கற்களைப் போன்றிருக்கிறீர்கள். ஓர் ஆன்மீக ஆலயத்தைக் கட்ட உங்களை தேவன் பயன்படுத்துகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்து வழியாக தேவன் ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைக் கொடுக்கும் பரிசுத்த ஆசாரியராக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் அப்பலிகளைக் கொடுங்கள். வேதவாக்கியம் சொல்கிறது,

“பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
    அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன்.
அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.” (A)

நம்புகிற மக்களுக்கு அவர் கௌரவத்துக்குரியதாகிறார். ஆனால் நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர் கட்டுபவர்கள்,

“வேண்டாமென்று தள்ளிய கல்லாகிறது.
    ஆனால் அக்கல்லே மிக முக்கியமான கல்லாயிற்று” (B)

என்பதற்கேற்ப இருக்கிறார்.

நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர்,

“மக்களை இடறச் செய்யும் கல்லாவார்.
    மக்களை விழவைக்கும் கல்லாவார்” (C)

என்பதற்கேற்ப இருக்கிறார். தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாததால் மக்கள் இடறுகிறார்கள். அம்மக்களுக்கு தேவன் திட்டமிட்டிருப்பது இதுவே.

ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் அரசரின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார்.

10 ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை.
    ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை.
    ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள்.

தேவனுக்காக வாழுங்கள்

11 அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன. 12 தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படியுங்கள்

13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசனுக்குக் கீழ்ப்படியுங்கள். 14 அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். 15 எனவே புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசும் முட்டாள் மனிதர்களின் வாயை அடைக்கும் பொருட்டு நற்செயல்களைச் செய்யுங்கள். இதையே தேவன் விரும்புகிறார். 16 சுதந்திரமான மனிதரைப்போன்று வாழுங்கள். தீயன செய்வதற்கு ஒரு காரணமாக உங்கள் விடுதலையைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்பவர்களாகவே வாழுங்கள். 17 எல்லாருக்கும் மரியாதை செலுத்துங்கள். தேவனுடைய குடும்பத்தில் எல்லா சகோதரர்களையும் சகோதரிகளையும் நேசியுங்கள். தேவனுக்கு அஞ்சுங்கள். அரசனை மதியுங்கள்.

கிறிஸ்துவின் துன்பத்திற்கு எடுத்துக்காட்டு

18 அடிமைகளே, உங்கள் எஜமானர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை எல்லா மரியாதையோடும் செய்யுங்கள். நல்ல இரக்கமுள்ள எஜமானருக்குக் கீழ்ப்படியுங்கள். முரட்டுத்தனமான எஜமானருக்கும் கீழ்ப்படியுங்கள். 19 ஒருவன் எந்தத் தவறும் செய்யாதபோதும் அவன் துன்பப்பட வேண்டியதிருக்கும். ஒருவன் தேவனை எண்ணிக்கொண்டே, துன்பத்தை அனுபவிப்பானாயின், அது தேவனை சந்தோஷப்படுத்தும். 20 ஆனால் நீங்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்பட்டால், அத் தண்டனையை அனுபவிப்பதற்காக உங்களைப் புகழவேண்டியிராது. ஆனால் நன்மை செய்வதற்காக நீங்கள் துன்புற்றால் அது தேவனுக்கு சந்தோஷம் தரும். 21 அதைச் செய்வதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பின்பற்றும்படியாக கிறிஸ்து ஓர் எடுத்துக்காட்டை உங்களுக்குத் தந்தார். அவர் செய்ததைப் போலவே நீங்களும் செய்யவேண்டும். கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்றதால் நீங்கள் துன்பப்படும்போது பொறுமையாக இருக்கவேண்டும்.

22 “அவர் பாவமேதும் செய்யவில்லை.
    அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.” (D)

23 மக்கள் கிறிஸ்துவிடம் தீயவற்றைப் பேசினார்கள். ஆனால் அவர் அவர்களுக்கு எந்தத் தீய பதிலையும் தரவில்லை. கிறிஸ்து துன்புற்றார். ஆனால் அவர் மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. இல்லை! தேவன் தன்னைக் கவனித்துக்கொள்ளுமாறு கிறிஸ்து விட்டு விட்டார். தேவன் சரியான முறையில் நியாயந்தீர்க்கிறார். 24 சிலுவையின் மேல் கிறிஸ்து தம் சரீரத்தில் நம் பாவங்களையும் சுமந்தார். நாம் பாவங்களுக்காக வாழ்வதை நிறுத்தி, நேர்மையாக வாழ்வதற்காக அவர் இதைச் செய்தார். அவரது காயங்களினால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள். 25 தவறான வழியில் சென்ற ஆடுகளைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் மேய்ப்பனாகிய ஆன்மாவைக் காக்கிறவரிடம் வந்துவிட்டீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center