Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாக்கோபு 5

சுய நலமிக்க பணக்காரர்கள் தண்டிக்கப்படுவர்

பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துப் போகும். அந்தத் துருவே நீங்கள் தவறானவர்கள் என்பதை நிரூபிக்கும். அது உங்கள் சரீரத்தை நெருப்பு போல எரித்துவிடும். உங்கள் கடைசி நாட்களில் செல்வத்தைச் சேர்த்தீர்கள். மக்கள் உங்கள் வயல்களில் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை. அவர்கள் கூலிகளை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். இப்போது அவர்கள் மீண்டும் உங்களைப் பார்த்து கூக்குரலிடுகிறார்கள். கூலிக்காரர்களின் கதறல்களை அனைத்து அதிகாரமுமுள்ள கர்த்தர் கேட்டார்.

பூமியில் உங்கள் வாழ்வானது செல்வமிக்கது. உங்கள் விருப்பத்தின்படி கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைகிறீர்கள். உங்களை நீங்கள் கொழுக்க வைத்து வெட்டப்படப்போகிற மிருகங்களைப்போல் ஆகிறீர்கள். நல்ல மக்களுக்கு நீங்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களை எதிர்த்து நிற்காத நல்ல மக்களை நீங்கள் தண்டித்துக் கொலை செய்தீர்கள்.

பொறுமையாய் இருங்கள்

சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார்.

10 துன்பப்படுதலுக்கும் பொறுமைக்கும் ஒரு உதாரணமாகக் கர்த்தரின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். 11 சகித்துக்கொண்டதால் இப்போது நாம் அவர்களை “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறோம். நீங்கள் யோபின் பொறுமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவரது அனைத்துத் துன்பங்களுக்கும் பிறகு கர்த்தர் உதவினார். இது, தேவன் கிருபையும், இரக்கமும் உடையவர் என்பதைக் காட்டும்.

நீங்கள் சொல்வதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

12 எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.

பிரார்த்தனையின் அதிகாரம்

13 உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். 14 உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும்.

16 நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். 17 எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். 18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.

ஆன்மாவைக் காப்பாற்றுதல்

19 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். 20 இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center