Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எபிரேயர் 13

தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு

13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,

“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். (A)

எனவே,

“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
    நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். (B)

உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.

10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.

17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.

18 எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். 19 உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.

20-21 சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

22 என் சகோதர சகோதரிகளே! உங்களை உற்சாகப்படுத்த நான் எழுதிய சிறு செய்தியை நீங்கள் பொறுமையுடன் கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை உங்களை பலப்படுத்தும். இது நீண்ட நிருபம் அன்று. 23 நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.

24 உங்கள் தலைவர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லுங்கள். இத்தாலியில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

25 உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center