M’Cheyne Bible Reading Plan
யெப்தாவும் எப்பிராயீமும்
12 எப்பிராயீம் கோத்திரத்தின் மனிதர்கள் தம் வீரர்கள் எல்லோரையும் ஒருங்கே அழைத்து நதியைக் கடந்து சாபோன் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யெப்தாவிடம், “அம்மோனிய ஜனங்களை எதிர்த்து நீங்கள் போரிடும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? உங்களையும் உங்கள் வீட்டையும் நாங்கள் எரித்துப்போடுவோம்” என்றனர்.
2 யெப்தா அவர்களுக்குப் பதிலாக, “அம்மோனிய ஜனங்கள் நமக்குத் தொல்லை தந்து கொண்டே இருந்தனர். எனவே நானும் எனது ஜனங்களும் அவர்களுக்கெதிராகப் போர் செய்தோம். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ வரவில்லை. 3 நீங்கள் எங்களுக்கு உதவ வரமாட்டீர்கள் என்பதை நான் கண்டேன். எனவே நான் எனது உயிரைப் பணயம் வைத்து, நதியைக் கடந்து அம்மோனிய ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றேன். அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் எனக்கு உதவினார். இப்போது ஏன் என்னை எதிர்த்துப் போரிட இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றான்.
4 அப்போது யெப்தா கீலேயாத்தின் மனிதர்களை ஒருங்கே அழைத்தான் எப்பிராயீம் கோத்திரத்தின் மனிதர்களை எதிர்த்து அவர்கள் போரிட்டனர். எப்பிராயீம் ஜனங்கள் கீலேயாத் ஜனங்களை அவமானப்படுத்தியதால் அவர்கள் எப்பிராயீம் ஜனங்களோடு போர் செய்தனர். அவர்கள், “கீலேயாத்தின் மனிதர்களாகிய நீங்கள் எப்பிராயீம் மனிதர்களிலிருந்து பிரிந்து போனவர்கள்தான், உங்களுக்கென சொந்தமான தேசம் எதுவும் கிடையாது. உங்களில் சிலர் எப்பிராயீமையும், மற்றும் சிலர் மனாசேயையும் சேர்ந்தவர்கள்” என்று சொல்லியிருந்தனர். கீலேயாத்தின் மனிதர்கள் எப்பிராயீமின் மனிதர்களைத் தோற்கடித்தனர்.
5 கீலேயாத்தின் ஆட்கள் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கின்ற எல்லா பகுதிகளையும் கைப்பற்றினார்கள். அப்பகுதிகள் எப்பிராயீம் நாட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தன. எப்பிராயீமிலிருந்து ஓடிப்போனவன் நதிக்கு வந்து, “என்னை நதியைக் கடக்க விடுங்கள்” என்று சொன்னால் கீலேயாத்தின் மனிதர்கள், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்பார்கள். அவன் “இல்லை” என்று சொன்னால், 6 அவர்கள், “‘ஷிபோலேத்’ என்று சொல்லு” என்பார்கள். எப்பிராயீம் மனிதரால் அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிக்க முடியாமல் அவர்கள் அதை, “சிபோலேத்” என்றனர். ஒருவன் “சிபோலேத்” என்று கூறினால் அவன் எப்பிராயீமைச் சேர்ந்தவன் என்று கண்டு, கீலேயாத் மனிதர்கள் நதியைக் கடக்கும் இடத்தில் அவனைக் கொன்றுவிடுவார்கள். எப்பிராயீம் ஆட்களில் 42,000 பேரை இவ்வாறு கொன்றார்கள்.
7 யெப்தா ஆறு வருட காலம் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதியாக இருந்தான். கீலேயாத்தைச் சேர்ந்த யெப்தா மரித்தான். யெப்தாவை கீலேயாத்திலுள்ள அவனது நகரில் அடக்கம் செய்தனர்.
நியாயாதிபதியாகிய இப்சான்
8 யெப்தாவுக்குப் பின்பு இப்சான் என்னும் பெயருள்ளவன் இஸ்ரவேலருக்கு நீதி பதியானான். இப்சான் பெத்லகேம் நகரத்தைச் சேர்ந்தவன். 9 இப்சானுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தனர். அவனுக்கு உறவினரல்லாத 30 பேரைத் திருமணம் செய்யுமாறு அவன் தனது மகள்களுக்குக் கூறினான். அவன் உறவினரல்லாத 30 பெண்களைத் தேர்ந்தெடுத்தான். அவனது மகன்கள் அவர்களைத் திருமணம் செய்தனர். இப்சான் 7 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான். 10 பின் இப்சான் மரித்தான். அவன் பெத்லகேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.
நியாயாதிபதியாகிய ஏலோன்
11 இப்சானுக்குப் பின் இஸ்ரவேலருக்கு ஏலோன் என்பவன் நீதிபதியாக இருந்தான். ஏலோன் செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் 10 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான். 12 பின் செபுலோன் கோத்திரத்தானாகிய ஏலோன் மரித்தான். அவனை செபுலோனிலுள்ள ஆயலோனில் அடக்கம் செய்தனர்.
நியாயாதிபதியாகிய அப்தோன்
13 ஏலோன் மரித்த பின்பு இல்லேலின் மகனாகிய அப்தோன் இஸ்ரவேலருக்கு நீதிபதியானான். அவன் பிரத்தோன் நகரத்தைச் சேர்ந்தவன். 14 அவனுக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தனர். அவர்கள் 70 கழுதைகளில் ஏறி சவாரி வந்தனர். அப்தோன் 8 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான். 15 பின் இல்லேனின் மகனாகிய அப்தோன் மரித்தான். அவன் பிரத்தோன் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பிரத்தோன் எப்பிராயீம் தேசத்தில் இருந்தது. இது அமலேக்கியர் வாழ்ந்த மலைநாட்டில் இருந்த நகரமாகும்.
பவுல்-சீலா-தீமோத்தேயு
16 தெர்பை, லிஸ்திரா ஆகிய நகரங்களுக்குப் பவுல் சென்றான். தீமோத்தேயு எனப்படும் கிறிஸ்துவின் சீடன் அங்கிருந்தான். தீமோத்தேயுவின் தாய் ஒரு விசுவாசியான யூதப் பெண்மணி, அவன் தந்தை ஒரு கிரேக்கன். 2 லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர். 3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.
4 பின் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் பிற பட்டணங்கள் வழியாகப் பிரயாணம் செய்தனர். எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பர்களும் எடுத்த முடிவுகளையும் விதிகளையும் அவர்கள் விசுவாசிகளுக்கு அளித்தார்கள். இந்த விதிகளைப் பின்பற்றும்படிக்கு அவர்கள் விசுவாசிகளுக்குக் கூறினர். 5 எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன.
ஆசியாவிற்கு வெளியே அழைப்பு
6 பிரிகியா, கலாத்தியா நாடுகளின் வழியாகப் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் சென்றனர். ஆசியா நாட்டில் அவர்கள் நற்செய்தியைப் போதிப்பதை பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கவில்லை. 7 மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை. 8 எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர்.
9 அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். 10 பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு தேவன் எங்களை அழைத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
லீதியாளின் மாற்றம்
11 நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். 12 அங்கிருந்து நாங்கள் பிலிப்பிக்குச் சென்றோம். மக்கதோனியாவில் பிலிப்பி ஒரு முக்கியமான நகரம். அது ரோமர்களுக்கான நகரம். சில நாட்கள் நாங்கள் அந்நகரில் தங்கினோம்.
13 ஓய்வுநாளில் நகர வாசல் வழியாக ஆற்றை நோக்கிச் சென்றோம். நதியருகே ஒரு சிறப்பான பிரார்த்தனை செய்வதற்கு இடம் கிடைக்கக்கூடும் என்று எண்ணினோம். சில பெண்கள் அங்குக் கூடியிருந்தனர். நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களோடு பேசினோம். 14 தியத்தீரா என்னும் நகரிலுள்ள லீதியாள் என்னும் பெண்மணி அங்கிருந்தாள். ஊதாநிற பட்டு ஆடைகளை விற்பதே அவளது தொழில். அவள் உண்மையான தேவனை வழிபட்டாள். அவள் பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்து பவுல் சொன்னவற்றை ஒப்புக்கொள்ளச் செய்தார். அவள் பவுல் கூறியவற்றை நம்பினாள். 15 அவளும் அவளது வீட்டினரும் ஞானஸ்நானம் பெற்றனர். பின் லீதியாள் எங்களை அவளது வீட்டிற்கு அழைத்தாள். அவள், “கர்த்தராகிய இயேசுவில் நான் உண்மையாகவே விசுவாசம் உள்ளவள் என்று நீங்கள் எண்ணினால் என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்றாள். அவள் எங்களை அவளோடு தங்குமாறு வற்புறுத்தினாள்.
சிறையில் பவுலும் சீலாவும்
16 ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். 18 அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று.
19 அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். 20 தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். 21 நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.
22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.
25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.
29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.
35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.
36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.
37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.
38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.
எரேமியாவின் பிரசங்கத்தின் சுருக்கம்
25 யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் அரசனாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். அவன் அரசனான நான்காவது ஆண்டு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது. 2 எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான். 3 கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும் மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் மகனான யோசியா யூதாவில் அரசனாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்கு கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. 4 கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
5 அத்தீர்க்கதரிசிகள், “உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார். 6 அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்.”
7 “ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.”
8 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை. 9 எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் விரைவில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். 10 அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன். 11 அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் அரசனுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள்.
12 “ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் அரசனைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன். 13 நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 14 ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய அரசர்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்.”
உலகிலுள்ள நாடுகளுக்கான தீர்ப்புகள்
15 கர்த்தரும் இஸ்ரவேலின் தேவனுமாகிய கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, எனது கையிலுள்ள ஒரு கோப்பைத் திராட்சைரசத்தை எடுத்துக்கொள். இது எனது கோபமாகிய திராட்சைரசம். நான் உன்னை வேறுபட்ட நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கோப்பையிலிருந்து குடிக்குமாறு அந்நாடுகளைச் செய். 16 அவர்கள் இந்தத் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும். பிறகு அவர்கள் வாந்தி எடுத்து புத்திகெட்டவர்களைப் போல் நடப்பார்கள். அவர்கள் இதனைச் செய்வார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக நான் பட்டயத்தை விரைவில் அனுப்புவேன்.”
17 எனவே, கர்த்தருடைய கையிலிருந்த திராட்சைரசக் கோப்பையை நான் எடுத்துக்கொண்டு, கர்த்தர் என்னை அனுப்பிய எல்லா நாடுகளுக்கும் நான் சென்றேன். ஜனங்களை அக்கோப்பையிலிருந்து குடிக்கும்படிச் செய்தேன். 18 நான் இந்தத் திராட்சை ரசத்தை எருசலேம் மற்றும் யூதா ஜனங்களுக்கு ஊற்றினேன். யூதா அரசர்களையும் தலைவர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். நான் இதனைச் செய்தேன். எனவே அவர்கள் காலியான வனாந்தரமாவார்கள். நான் இதனைச் செய்தேன். எனவே, அந்த இடம் மிக மோசமாக அழிக்கப்படும். ஜனங்கள் அதைப்பற்றி இகழ்ச்சியாகப் பேசி பிரமிப்பார்கள். அந்த இடத்தை சபிப்பார்கள். இது நிகழ்ந்தது. யூதா இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது.
19 எகிப்தின் அரசனான பார்வோனையும் அக்கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். கர்த்தருடைய கோபமாகிய கோப்பையை அவனது அதிகாரிகள், அவனது முக்கியமான தலைவர்கள் மற்றும் அவனது அனைத்து ஜனங்கள் ஆகியோரைக் குடிக்கச் செய்தேன்.
20 அரேபியர்கள் அனைவரையும் ஊத்ஸ் நாட்டிலுள்ள எல்லா அரசர்களையும் அக்கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். பெலிஸ்தியர்களின் நாட்டிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்க வைத்தேன். அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோத் ஆகிய நகரங்களில் உள்ள அரசர்கள் அவர்கள்.
21 பிறகு, நான் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகிய ஜனங்களை கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
22 தீரு மற்றும் சீதோனிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.
தொலைதூர நாடுகளிலுள்ள அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 23 தேதான், தேமா, பூசு ஆகிய ஜனங்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தங்கள் நெற்றிப்பக்கங்களில் தலைமுடியை வெட்டிக்கொண்ட அனைவரையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 24 அரபியாவிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். இந்த அரசர்கள் வனாந்தரங்களில் வாழ்கிறார்கள். 25 சிம்ரி, ஏலாம், மேதியா ஆகிய நாடுகளிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 26 வடநாட்டிலுள்ள அருகிலும் தொலைவிலுமுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களை ஒருவருக்குப் பின் ஒருவராகக் குடிக்கச் செய்தேன். பூமியிலுள்ள அனைத்து ராஜ்யங்களையும் கர்த்தருடைய கோபமாகிய கோப்பையைக் குடிக்கும்படிச் செய்தேன். ஆனால், “சேசாக்கு” (பாபிலோன்) அரசன் அனைத்து நாடுகளுக்கும் பிறகு, இக்கோப்பையிலிருந்து குடிப்பான்.
27 “எரேமியா, அந்நாடுகளிடம் சொல். இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் சொல்கிறது, ‘எனது கோபமாகிய இக்கோப்பையைக் குடி. இதிலிருந்து குடி. வாந்தி எடு! கீழே விழு. எழவேண்டாம். ஏனென்றால் உன்னைக் கொல்ல ஒரு பட்டயத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’
28 “அந்த ஜனங்கள் உமது கையிலிருந்து கோப்பையை எடுத்துக்கொள்ள மறுப்பார்கள். அவர்கள் அதைக் குடிக்க மறுப்பார்கள். ஆனால் நீ அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: நீங்கள் இக்கோப்பையிலிருந்து குடித்துத்தீர வேண்டும்! 29 எனது நாமத்தால் அழைக்கப்படுகிற எருசலேம் நகரத்திற்கு நான் ஏற்கனவே இத்தீமைகளை ஏற்படுத்திவிட்டேன். நீங்கள் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் தாக்க நான் ஒரு வாளை அழைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார்” என்பாய். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
30 “எரேமியா, நீ அவர்களுக்கு இச்செய்தியைக் கொடுப்பாய்,
“‘கர்த்தர் மேலிருந்து சத்தமிடுகிறார்.
அவர் அவரது பரிசுத்தமான ஆலயத்தில் இருந்து சத்தமிடுகிறார்!
கர்த்தர் அவரது மேய்ச்சலிடம் (ஜனங்களிடம்) சத்தமிடுகிறார்!
அவரது சத்தங்கள் திராட்சைப்பழங்களில் ரசமெடுக்க நடப்பவர்களின் பாடலைப்போன்று சத்தமாக இருக்கிறது.
31 பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் அச்சத்தம் பரவுகிறது.
அனைத்து சத்தம் எதைக் குறித்துள்ளது?
எல்லா நாடுகளில் உள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டித்துக்கொண்டிருக்கிறார்.
கர்த்தர் ஜனங்களுக்கு எதிராக தம் வாதங்களைச் சொன்னார்.
அவர் ஜனங்களை நியாயந்தீர்த்தார்.
இப்பொழுது அவர் தீய ஜனங்களை பட்டயத்தால் கொன்றுக்கொண்டிருக்கிறார்’”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
32 இதைத்தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நாடுவிட்டு நாடு பேரழிவு விரைவில் பரவும்.
அவை ஒரு வல்லமை வாய்ந்த
புயலைப் போன்று பூமியிலுள்ள
எல்லா தொலைதூர இடங்களுக்கும் பரவும்!”
33 நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு ஜனங்களின் மரித்த உடல்கள் போய்ச் சேரும். மரித்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். எவரும் அந்த உடல்களை சேகரித்து அடக்கம் செய்யமாட்டார்கள். அவை தரையில் எருவைப்போன்று கிடக்குமாறு விடப்படும்.
34 மேய்ப்பர்களே (தலைவர்களே) நீங்கள் ஆடுகளை (ஜனங்களை) வழிநடத்தவேண்டும்.
பெருந்தலைவர்களே, நீங்கள் கதறத் தொடங்குங்கள்.
வலியில் தரை மீது உருளுங்கள்,
ஆடுகளின் (ஜனங்களின்) தலைவர்களே.
ஏனென்றால், இது உங்களை வெட்டுவதற்கான காலம்.
எங்கும் சிதறிப்போகும், உடைந்த ஜாடியின் துண்டுகளைப்போன்று, கர்த்தர் உங்களை முறித்து சிதறடிப்பார்.
35 மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை.
அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
36 நான் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) சத்தமிடுவதைக் கேட்கிறேன்.
ஆடுகளின் (ஜனங்கள்) தலைவர்களின் புலம்பலை நான் கேட்கிறேன்.
கர்த்தர் மேய்ச்சலிடங்களை (நாட்டை) அழித்துக்கொண்டிருக்கிறார்.
37 அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது.
இது நிகழ்ந்தது.
ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார்.
38 கர்த்தர், தன் குகையை விட்டு வெளியே வரும் ஆபத்தான சிங்கத்தைப்போன்று இருக்கிறார்.
கர்த்தர் கோபமாக இருக்கிறார்!
அந்த கோபம் அந்த ஜனங்களைப் பாதிக்கும்.
அவர்களின் நாடு காலியான வனாந்தரம்போன்று ஆகும்.
எருசலேமுக்குள் இயேசு நுழைதல்(A)
11 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். 2 இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். 3 யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.
4 சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். 5 அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். 6 இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.
7 சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். 8 ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். 9 சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர்.
“அவரைப் புகழுங்கள்
‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ (B)
10 “தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது.
பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”
என்று அவர்கள் சத்தமிட்டனர்.
11 எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.
அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்(C)
12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14 ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தேவாலயத்தில் இயேசு(D)
15 அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். 16 ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். 17 பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. [a] ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” [b] என்றார்.
18 தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். 19 அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர்.
விசுவாசத்தின் வல்லமை(E)
20 மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.
22 அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். 23 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். 24 ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும். 25 நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார். 26 [c]
இயேசுவின் அதிகாரத்தை சந்தேகித்தல்(F)
27 இயேசுவும் சீஷர்களும் மீண்டும் எருசலேமுக்குச் சென்றார்கள். அவர் தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவிடம் வந்தனர். 28 அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர்.
29 அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 30 யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.
31 யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான். 32 ‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
33 ஆகையால் அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குப் பதில் தெரியாது” என்றனர். இயேசுவும், “அப்படியானால், நானும் யார் அதிகாரத்தால் இதனைச் செய்கிறேன் என்பதைச் சொல்லமாட்டேன்” என்றார்.
2008 by World Bible Translation Center