M’Cheyne Bible Reading Plan
யூதாவின் ராஜாவாகிய யோசியா
34 யோசியா ராஜாவாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 2 யோசியா சரியான செயல்களையே செய்தான். கர்த்தருடைய விருப்பப்படியே நல்ல காரியங்களையே அவன் செய்தான். அவன் தனது முற்பிதாவான தாவீதைப் போன்று நல்ல செயல்களைச் செய்துவந்தான். யோசியா நல்ல காரியங்களைச் செய்வதில் இருந்து திரும்பவே இல்லை. 3 யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டாவது ஆண்டில் அவன் தனது முற்பிதாவான தாவீது தேவனைப் பின்பற்றியது போலவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான். யோசியா தேவனைப் பின்பற்றும்போது மிகவும் இளையவனாக இருந்தான். யோசியா ராஜாவாகியப் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் மேடைகளையும், விக்கிரகங்களையும் அழித்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அந்நிய விக்கிரகங்களையும் அகற்றினான். 4 பாகால் தெய்வங்களான எல்லா பலி பீடங்களையும் ஜனங்கள் உடைத்தனர். அவர்கள் யோசியாவின் முன்னிலையிலேயே இதனைச் செய்தனர். பிறகு ஜனங்களின் முன்னே உயரமாய் நின்றிருந்த நறுமணப் பொருட்களை எரிக்கும் பீடங்களை யோசியா இடித்தான். செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் அவன் உடைத்தான். அவன் அவற்றைத் தூளாக்கி, பாகால் தெய்வங்களை தொழுதுகொண்டு மரித்துப்போனவர்களின் கல்லறைகள் மீது தூவினான். 5 யோசியா பாகால் தெய்வத்துக்கு சேவைசெய்த ஆசாரியர்களின் எலும்புகளை அவர்கள் பலிபீடங்களிலேயே எரித்தான். இவ்வாறு யோசியா யூதா மற்றும் எருசலேமின் விக்கிரகங்களையும், விக்கிரக ஆராதனைகளையும் அழித்தான். 6 மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலி செல்லும் வழி முழுவதுமான பகுதிகளில் இருந்த ஊர்களுக்கும் யோசியா அதையேச் செய்தான். அந்த ஊர்களுக்கு அருகாமையிலிருந்த பாழடைந்த பகுதிகளுக்கும் அவன் அதையே செய்தான். 7 யோசியா பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அழித்தான். அவன் விக்கிரகங்களைத் தூளாக்குமாறு உடைத்தான். இஸ்ரவேல் நாட்டில் பாகாலை தொழுது கொள்ள வைத்திருந்த அனைத்து பலிபீடங்களையும் நொறுக்கினான். பிறகே அவன் எருசலேமிற்குத் திரும்பினான்.
8 யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்).
எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான். 9 அவர்கள் தலைமை ஆசாரியனான இல்க்கியாவிடம் வந்தனர். தேவனுடைய ஆலயத்திற்காக ஜனங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் இலக்கியாவிடம் கொடுத்தனர். வாயிற்காவலர்களான லேவியர்கள் இப்பணத்தை மனாசே, எப்பிராயீம் மற்றும் வெளியேறிய இஸ்ரவேலர் அனைவரிடமிருந்தும் வசூலித்திருந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன் மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் பணத்தை வசூலித்திருந்தனர். 10 பிறகு லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்தனர். மேற்பார்வையாளர்களோ அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். 11 அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் ராஜாக்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன. 12-13 எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள். யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர்.
சட்டப் புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது
14 கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. 15 இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். 16 சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 17 அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். 18 மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். 19 யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். 20 பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். 21 ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
22 இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். 23 உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: 24 ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். 25 ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’
26 “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: 27 ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், 28 உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர்.
29 பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். 30 ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். 31 பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். 32 பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.
ஆயிரம் ஆண்டுகள்
20 பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான். 2 சாத்தான் எனப்படும் பழைய பாம்பாகிய ராட்சசப் பாம்பை அவன் பிடித்தான். அவன் அப்பாம்பை ஆயிரம் ஆண்டு காலத்துக்குச் சங்கிலியால் கட்டிப்போட்டான். 3 அவன் அப்பாம்பைப் பாதாளத்திற்குள் எறிந்து மூடினான். ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை பூமியின் மக்களை அது வஞ்சிக்காதபடிக்குப் பூட்டி முத்திரையிட்டான். அதன் பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பாம்பினை விடுதலை செய்யவேண்டும்.
4 பிறகு நான் சில சிம்மாசனங்களைப் பார்த்தேன். அவற்றின்மேல் சிலர் அமர்ந்திருந்தனர். நியாயந்தீர்க்கிற அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த மக்கள் இவர்களே ஆவார்கள். அப்போது இயேசுவைப் பற்றிய சாட்சிக்காகவும் தேவனுடைய செய்திக்காகவும் தலைவெட்டப்பட்டவர்களின் ஆன்மாக்களைக் கண்டேன். அவர்கள் அம்மிருகத்தையோ அல்லது அதனுடைய உருவத்தையோ வழிபடவில்லை. அவர்கள் அம்மிருகத்தின் அடையாளக் குறியை தம் முன் நெற்றியிலோ கைகளிலோ பெற்றிருக்கவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷங்கள் அரசாண்டார்கள். 5 (மற்ற இறந்த மக்கள் 1,000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை.)
இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும். 6 இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமானவர்களும் ஆவார்கள். அவர்கள் மீது இரண்டாம் மரணத்துக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஆசாரியராய் இருப்பார்கள். அவர்கள் இயேசுவோடு கூட ஆயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி செய்வார்கள்.
சாத்தான் முறியடிக்கப்படுதல்
7 ஆயிரம் ஆண்டுக் காலம் முடிந்த பிறகு, சிறையிலிருந்து சாத்தான் விடுதலை செய்யப்படுவான். 8 உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள தேசங்களில் இருக்கிற கோகையும் மகோகையும் வஞ்சிக்கச் செல்வான். போர் செய்வதற்காக மக்களை ஒன்று திரட்டுவான். ஏராளமான மக்கள் கடற்கரையில் உள்ள மணலைப் போன்று எண்ணிக்கையில் கூடுவர்.
9 சாத்தானின் படை எங்கும் பரந்தது. பூமியெங்கும் பரந்து தேவனுடைய மக்களுடைய முகாமையும் தேவன் நேசிக்கிற நகரையும் வளைந்துகொண்டது. ஆனால் பரலோகத்தில் இருந்து நெருப்பு கீழே வந்து சாத்தானின் படையை அழித்துவிட்டது. 10 மக்களைத் தந்திரத்தால் ஏமாற்றி வந்த சாத்தான், கந்தகம் எரியும் நெருப்புக் கடலுக்குள் வீசப்பட்டான். அவனோடு, அந்த மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் வீசப்பட்டனர். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வதைக்கப்படுவார்கள்.
வெள்ளை சிம்மாசனம்
11 பிறகு, ஒரு பெரிய வெள்ளை சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் நான் கண்டேன். அவர் பார்வையிலிருந்து வானமும், பூமியும் விலகி மறைந்தன. 12 மேலும் இறந்துபோன பெரியவர்களும், சிறியவர்களும் சிம்மாசனத்தின் முன்னே நிற்பதைக் கண்டேன். ஜீவப்புத்தகம் திறக்கப்பட்டது. வேறு சில புத்தகங்களும் திறக்கப்பட்டன. இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். இவை எல்லாம் அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.
13 கடல் தன்னுள் இறந்து போனவர்களை ஒப்படைத்தது. மரணமும், பாதாளமும் தங்களிடமிருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நற்செயல்களைப் பொறுத்து நியாயம் தீர்க்கப்பட்டான். 14 அப்போது மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணமாகும். 15 ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ, அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.
ஆசாரியர்களுக்கான விதிகள்
2 “ஆசாரியர்களே, இந்த விதி உங்களுக்குரியது. என்னைக் கவனியுங்கள்! நான் சொல்கின்ற வற்றில் கவனம் செலுத்துங்கள்! எனது பேரைக் கனம்பண்ணுங்கள். 2 நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
3 “பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள். 4 பின்னர் நான் ஏன் இந்தக் கட்டளையைக் கொடுத்தேன் என்பதைக் கற்றுக் கொள்வாய். நான் இவற்றை உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லேவியோடு நான் கொண்ட எனது உடன்படிக்கைத் தொடரும்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5 கர்த்தர், “நான் அந்த உடன்படிக்கையை லேவியோடு செய்தேன். நான் அவனுக்கு வாழ்வையும், சமாதானத்தையும் கொடுப்பதாக வாக்குறுதியளித்தேன். நான் அவனுக்கு அவற்றைக் கொடுத்தேன். லேவி என்னை மதித்தான். அவன் எனது நாமத்திற்கு மரியாதைச் செலுத்தினான். 6 லேவி சத்திய வேதத்தைப் போதித்தான். அவன் பொய்யானவற்றை போதிக்கவில்லை. லேவி நேர்மையானவன். அவன் சமாதானத்தை நேசித்தான். லேவி என்னைப் பின் தொடர்ந்தான். அநேகர் தங்கள் பாவ வழிகளை விட்டுவிலகச் செய்தான். அவர்களைக் காப்பாற்றினான். 7 ஒரு ஆசாரியன் தேவனுடைய போதனைகளை கற்றிருக்கவேண்டும். ஜனங்கள் ஆசாரியனிடம் சென்று தேவனுடைய போதனைகளை கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆசாரியன் தேவனுடைய தூதுவனாக ஜனங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.
8 கர்த்தர், “ஆசாரியர்களாகிய நீங்கள் என்னைப் பின்பற்றுவதை நிறுத்தினீர்கள். நீங்கள் பலர் தவறு செய்வதற்காக போதனைகளைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் வேவியோடு செய்த உடன்படிக்கையை அழித்தீர்கள்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். 9 “நீங்கள் நான் சொன்ன வழியில் வாழவில்லை. நீங்கள் என் போதனைகளை ஜனங்களுக்குப் போதிக்கையில் பட்சபாதம் காண்பித்தீர்கள். எனவே நான் உங்களை முக்கியமற்றவர்களாகச் செய்வேன். ஜனங்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.”
யூதா தேவனுக்கு உண்மையாக இல்லை
10 நாங்கள் அனைவரும் ஒரே தந்தையை (தேவன்) உடையவர்கள். அதே தேவன் எங்கள் ஒவ்வொருவரையும் படைத்தார். எனவே ஜனங்கள் தமது சகோதரர்களை எதற்கு ஏமாற்ற வேண்டும்? அந்த ஜனங்கள் தம் உடன்படிக்கையை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறார்கள். அவர்கள் நமது முற்பிதாக்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையை மதிக்கவில்லை. 11 யூதாவின் ஜனங்கள் மற்ற ஜனங்களை ஏமாற்றினார்கள். எருசலேமிலும் இஸ்ரவேலிலும் உள்ள ஜனங்கள் பயங்கரமான காரியங்களைச் செய்தனர். யூதாவிலுள்ள ஜனங்கள் கத்தருடைய பரிசுத்தமான ஆலயத்தை மதிக்கவில்லை. தேவன் அந்த இடத்தை நேசிக்கிறார். யூதாவின் ஜனங்கள் அயல் நாட்டு தேவதைகளை தொழுதிடத் தொடங்கினார்கள். 12 கர்த்தர் யூதாவின் குடும்பத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவார். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஆனால் அது உதவாது. 13 நீங்கள் அழமுடியும். கர்த்தருடைய பலிபீடத்தை கண்ணீரால் மூட முடியும். ஆனால் கர்த்தர் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தர் நீங்கள் கொண்டு வருகிற பொருட்களால் திருப்தி அடையமாட்டார்.
14 நீங்கள், “கர்த்தரால் எங்கள் காணிக்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த தீமைகளைக் கர்த்தர் பார்த்தார். அவர் உங்களுக்கு எதிரான சாட்சி. நீங்கள் உங்கள் மனைவியரை ஏமாற்றியதை அவர் பார்த்தார். நீ இளமையாய் இருக்கும்போதே அப்பெண்ணை மணந்துகொண்டிருக்கிறாய். அவள் உனது பெண் சிநேகிதியாய் இருந்தாள். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துக்கொண்டீர்கள். அவள் உனது மனையியானாள். ஆனால் நீ அவளை ஏமாற்றினாய். 15 தேவன் கணவர்களும் மனைவிகளும் ஒரே உடலாகவும் ஒரே ஆவியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர். ஏன்? அதனால்தான் அவர்கள் பரிசுத்தமான குழந்தைகளைப் பெறமுடியும். எனவே அந்த ஆவிக்குரிய கூடி வருதலை பாதுகாத்துக்கொள். உன் மனைவியை நீ ஏமாற்றாதே. அவள் உனது இளமைகாலம் முதற்கொண்டே உன் மனைவியாக இருக்கிறாள்.
16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், “நான் விவாகரத்தை வெறுக்கிறேன். நான் ஆண்கள் செய்யும் கொடூரங்களை வெறுக்கிறேன். எனவே உன் ஆவிக்குரிய கூடிவருதலை காப்பாற்று. உன் மனைவியை ஏமாற்றாதே” என்று கூறுகிறார்.
நியாயத்தீர்ப்புக்கான சிறப்பான காலம்
17 நீ தவறானவற்றைக் கற்றுத் தந்திருக்கிறாய். அத்தவறான போதனைகள் கர்த்தரை மிகவும் துக்கமடையச் செய்தன. தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் விரும்புகிறார் என்று சொன்னீர்கள். அந்த ஜனங்கள் நல்லவர்கள் என்று தேவன் நினைப்பதாய் சொன்னீர்கள். தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் தண்டிக்கமாட்டார் என்று சொன்னீர்கள்.
19 பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். 2 போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். 3 “யூதருடைய ராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.
4 மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். 5 பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான்.
6 பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர்.
ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.
7 யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.
8 பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். 9 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.
11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.
12 இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை ராஜா என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள்.
13 யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14 அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் ராஜா” என்றான்.
15 அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர்.
அவர்களிடம் பிலாத்து, “உங்களது ராஜாவை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே ராஜா இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.
சிலுவையில் இயேசு
(மத்தேயு 27:32-44; மாற்கு 15:21-32; லூக்கா 23:26-39)
சேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17 இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 18 கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர்.
19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.
21 யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய ராஜா என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய ராஜா என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.
22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.
23 ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24 எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர்.
“அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர்.
என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்”(A)
என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.
25 இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் குமாரன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
இயேசுவின் மரணம்
(மத்தேயு 27:45-56; மாற்கு 15:33-41; லூக்கா 23:44-49)
28 பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்”[a] என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். 30 இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.
31 அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். 32 எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். 33 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை.
34 ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. 35 (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) 36 “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை”(B) என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.
37 அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்”(C) என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசுவின் அடக்கம்
(மத்தேயு 27:57-61; மாற்கு 15:42-47; லூக்கா 23:50-56)
38 பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.
39 நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல்[b] வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) 41 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. 42 அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.
2008 by World Bible Translation Center