Chronological
ஒரு பெண்ணும், இராட்சச பாம்பும்
12 அத்துடன் பரலோகத்தில் ஓர் அதிசயம் காணப்பட்டது: ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள். அவளது பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அவளது தலையின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்கள் உள்ள கிரீடம் இருந்தது. 2 அவள் கருவுற்றிருந்தாள். அவள் வலியால் கதறினாள். ஏனெனில் அவள் குழந்தை பெறுகிற நிலையில் இருந்தாள். 3 பிறகு இன்னொரு அதிசயமும் பரலோகத்தில் காணப்பட்டது. மிகப் பெரிய சிவப்பு வண்ணமுடைய இராட்சசப் பாம்பு தோன்றியது. அதற்கு ஏழு தலைகளிருந்தன. ஏழு தலைகளிலும் ஏழு கிரீடங்கள் இருந்தன. அத்துடன் பத்துக் கொம்புகளும் அதற்கு இருந்தன. 4 அதன் வால் உயர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து அவற்றைத் தரையில் வீசி எறிந்தன. பிள்ளை பெறுகிற நிலையில் இருந்த அப்பெண்ணின் முன்பு அந்தப் பாம்பு எழுந்து நின்றது. அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அதைத் தின்ன அப்பாம்பு தயாராக இருந்தது. 5 அப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் ஆட்சி செய்வான். பிறகு அக்குழந்தை தேவனுடைய முன்னிலையிலும் சிம்மாசனத்தின் முன்னிலையிலும் எடுத்துச்செல்லப்பட்டது. 6 அப்பெண் தேவனால் தயார் செய்யப்பட்ட இடமான பாலைவனத்திற்குள் ஓடினாள். அங்கே 1,260 நாட்கள் கவனித்துக்கொள்ளப்படுவாள்.
7 பின்பு பரலோகத்தில் ஒரு போர் உருவாயிற்று. அந்த இராட்சசப் பாம்புடன் மிகாவேலும் [a] அவனைச் சார்ந்த தேவ தூதர்களும் போரிட்டார்கள். பாம்பும், அதன் தூதர்களும் திரும்பித் தாக்கினார்கள். 8 பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள். 9 அப்பாம்பு பரலோகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது. (பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகின்ற பழைய பாம்பு தான் இந்த இராட்சசப் பாம்பு ஆகும். அவன் உலகம் முழுவதையும் தவறான வழிக்குள் நடத்துகிறான்) பாம்பும் அதன் தூதர்களும் பூமியில் வீசி எறியப்பட்டார்கள்.
10 அப்போது நான் பரலோகத்தில் ஓர் உரத்த குரலைக் கேட்டேன். அது, “வெற்றியும் வல்லமையும் நம் தேவனுடைய இராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் இப்போது வந்திருக்கின்றன. ஏனெனில் நமது சகோதரர்கள்மேல் குற்றம் சுமத்தியவன் புறந்தள்ளப்பட்டான். நம் தேவனுக்கு முன்பாக இரவும் பகலும் நம் சகோதரர்கள் மேல் குற்றம் சுமத்தியவன் அவனே ஆவான். 11 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை. 12 எனவே, பரலோகங்களே! அவற்றில் வாழ்பவர்களே! மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால் பூமிக்கும் கடலுக்கும் ஆபத்தாகும். ஏனெனில் சாத்தான் உங்களிடம் வந்துவிட்டான். அவன் கோபத்தோடு இருக்கின்றான். அவனது காலம் அதிகம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்” என்றது.
13 இராட்சசப் பாம்பானது தான் பூமியில் வீசி எறியப்பட்டதை அறிந்துகொண்டது. ஆகையால் அது ஆண்பிள்ளையைப் பெற்ற அந்தப் பெண்ணைத் துரத்தியது. 14 ஆனால் அப்பெண்ணுக்குப் பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டன. அவற்றால் அவள் பாலைவனத்தில் தனக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்குப் பறந்து செல்ல முடிந்தது. பாம்பிடமிருந்து அவள் அங்கே மூன்றரை வருட காலத்திற்கு கவனித்துக்கொள்ளப்பட்டாள். 15 பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது. 16 ஆனால் பூமி அப்பெண்ணுக்கு உதவியது. பூமி தன் வாயைத் திறந்து இராட்சசப் பாம்பின் வாயில் இருந்து வெளிவரும் வெள்ளத்தை விழுங்கியது.
17 பின்னும் அப்பாம்புக்கு அப்பெண்ணின்மீது மிகுந்த கோபம் இருந்தது. அவளது மற்ற பிள்ளைகளோடு போரிட அப்பாம்பு புறப்பட்டுப் போயிற்று. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களும், இயேசு போதித்த உண்மையைக் கொண்டிருப்பவர்களுமே அவளுடைய மற்ற பிள்ளைகள் ஆவார்கள்.
18 அந்த இராட்சசப் பாம்பு கடற்கரையில் நின்றது.
இரண்டு மிருகங்கள்
13 பின்பு கடலுக்குள் இருந்து ஒரு மிருகம் வெளிவருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கிரீடம் இருந்தது. அதன் ஒவ்வொரு தலைமீதும் ஒரு கெட்ட பெயர் எழுதப்பட்டிருந்தது. 2 அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது. 3 அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். 4 இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர்.
5 அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. 6 அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. 7 தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8 உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள்.
9 கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக.
10 எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ
அவன் சிறைபட்டுப் போவான்.
எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ
அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான்.
இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11 பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. 12 இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. 13 இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது.
14 அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். 15 முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. 16 இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. 17 எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
18 புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.
மீட்கப்பட்டவர்களின் பாடல்
14 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.
2 பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.
4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று தேவதூதர்கள்
6 பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். 7 அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.
8 பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான்.
9 மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். 10 அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான். 11 அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான். 12 இதன் பொருள் யாதெனில் தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், இயேசுவில் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
13 பிறகு, பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானதைக் கேட்டேன். அது “இதை எழுது: கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் இப்பொழுதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றது.
“ஆமாம் அவர்கள் தங்கள் கடினமான வேலைகளை விட்டுவிட்டு ஓய்வுபெறுவார்கள். அவர்களது செயல்கள் அவர்களோடு தங்கும், இது முற்றிலும் உண்மை” என்று ஆவியானவரும் கூறுகிறார்.
பூமி அறுவடையாகுதல்
14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது. 15 பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான். 16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.
17 பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான். 18 பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான். 19 அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான். 20 நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.
இறுதி வாதைகள்
15 பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.
2 நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. 3 அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்:
“சர்வ வல்லமையுள்ள தேவனே!
நீர் செய்தவை எல்லாம் பெரியவை,
அற்புதமானவை. நாடுகளின் அரசரே!
உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.
4 கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள்.
எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள்.
நீர் ஒருவரே பரிசுத்தமானவர்
எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள்.
ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”
5 இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது. 6 ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். 7 நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன. 8 தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.
தேவ கோபத்தின் கிண்ணங்கள்
16 பிறகு, நான் ஆலயத்தில் இருந்து ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். அக்குரல் ஏழு தேவ தூதர்களிடம் “தேவனுடைய கோபத்தை பூமியின் மீது சென்று ஊற்றுங்கள்” என்றது.
2 முதல் தேவதூதன் போனான். அவன் தன் கிண்ணத்தில் இருந்ததை பூமியில் ஊற்றினான். பிறகு மிருகத்தின் அடையாளத்தை உடையவர்களும் அதன் உருவச்சிலையை வணங்கியவர்களுமாகிய மக்கள் அனைவருக்கும் அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.
3 இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது.
4 மூன்றாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை நதிகளிலும், நீர் ஊற்றுக்களிலும் வீசி எறிந்தான். அதனால் நதிகளும், நீர் ஊற்றுகளும் இரத்தமாயிற்று. 5 நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன்,
“எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே.
பரிசுத்தமான ஒருவரும் நீரே.
நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.
6 உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர்.
அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள்.
அவர்களுக்குத் தகுதியானது இதுவே”
என்று கூறினான்.
7 அதற்கு பலிபீடமானது,
“ஆம், சர்வவல்லமைமிக்க தேவனாகிய கர்த்தாவே,
உம் நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை”
என்று சொல்வதைக் கேட்டேன்.
8 நான்காவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன் மீது போட்டான். அதனால் சூரியன் மக்களை நெருப்பாய் எரிக்கும் சக்தியைப் பெற்றது. 9 மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.
10 ஐந்தாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றை மிருகத்தின் சிம்மாசனத்தின்மீது எறிந்தான். அதனால் மிருகத்தின் இராஜ்யம் இருண்டுபோனது. மக்கள் வேதனையால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டனர். 11 மக்கள் தம் வலியின் நிமித்தமாகவும் தம் கொப்புளங்களின் நிமித்தமாகவும் பரலோகத்தின் தேவனை சபித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவோ, தங்கள் தீய செயல்களில் இருந்து விலகவோ விரும்பவில்லை.
12 ஆறாம் தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை ஐபிராத்து என்னும் பெரிய ஆற்றில் எறிந்தான். அதிலுள்ள நீர் வற்றிப்போனது. அதனால் கீழ்நாட்டில் உள்ள அரசர்கள் வர வழி தயார் ஆயிற்று. 13 பின்பு நான், தவளைபோல தோற்றம் அளித்த மூன்று அசிங்கமான கெட்ட ஆவிகளைக் கண்டேன். இராட்சச பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயில் இருந்தும் அவை வெளி வந்தன. 14 இந்தக் கெட்ட ஆவிகளே பிசாசுகளின் ஆவிகள். அவை அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. அவை உலகிலுள்ள அத்தனை அரசர்களிடமும் செல்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனின் மாபெரும் நாளின் யுத்தத்திற்கு அரசர்களை ஒன்று திரட்ட அவை வெளியே செல்கின்றன.
15 “கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.”
16 கெட்ட ஆவிகள் அரசர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது.
17 ஏழாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றைக் காற்றில் தூவினான். அதனால் ஆலயத்திலுள்ள சிம்மாசனத்தில் இருந்து ஒரு பெரும் குரல் ஒலித்தது. அது, “அது முடிந்தது” என்று சொன்னது. 18 பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி. 19 மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்துபோயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்துபோயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார். 20 எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. 21 இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.
மிருகத்தின்மேல் பெண்மணி
17 ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். 2 பூமியில் உள்ள அரசர்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
3 ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. 4 இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. 5 அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
மகா பாபிலோன் வேசிகளுக்கும்
பூமியில் உள்ள
அருவருப்புகளுக்கும் தாய்!
6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. 7 அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது.
9 “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு அரசர்களுமாகும். 10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் அரசனாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
12 “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களாகும். இந்தப் பத்து பேரும் இன்னும் தம் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த மிருகத்துடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆள்வதற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். 13 இவர்கள் ஒரே நோக்கம் உடையவர்கள். அவர்கள் தம் சக்தியையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் போர் செய்வார்கள். ஆனால் இவர்களை ஆட்டுக்குட்டியானவர் தோற்கடிப்பார். ஏனென்றால் அவர் கர்த்தர்களின் கர்த்தர், அரசர்களின் அரசர். அவர் தாம் அழைத்தவர்களாகிய தம்முடைய தேர்ந்தெடுத்தவர்களோடும், நம்பிக்கைக்குரியவர்களோடும் கூட அவர்களைத் தோற்கடிப்பார்” என்று சொன்னான்.
15 பிறகு அந்தத் தூதன் என்னிடம், “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற நீர்நிலைகளைப் பார்த்தாய் அல்லவா. அந்த நீர்நிலைகள் தான் உலகத்தில் உள்ள மக்கள், குடிகள், தேசங்கள், மொழிகளாக இருக்கின்றன. 16 நீ பார்த்த அந்த மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுப்பர். அவளிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு அவளை நிர்வாணமாக விட்டுவிடுவர். அவர்கள் அவளது உடலைத் தின்பார்கள். அவர்கள் அவளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள். 17 தன் குறிக்கோளை நிறைவேற்ற, அந்த பத்துக் கொம்புகளும் விருப்பம் கொள்ள தேவன் காரணமானார். ஆளுவதற்குரிய அவர்கள் அதிகாரத்தை அம்மிருகத்துக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். தேவன் சொன்னவை நிறைவேறும் காலம்வரை அவர்கள் ஆளுவார்கள். 18 பூமியின் அரசர்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.
பாபிலோன் அழிக்கப்படுதல்
18 பிறகு வேறொரு தூதன் பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவனுக்கு மிகுதியான அதிகாரம் இருந்தது. அவனுடைய மகிமையால் பூமி ஒளி பெற்றது. 2 அத்தூதன் உரத்த குரலில் கூவினான்:
“அவள் அழிக்கப்பட்டாள்!
மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது!
அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள்.
அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று.
எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது.
அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
3 அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன.
உலகிலுள்ள அரசர்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்.
உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.”
4 பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன்.
“ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில்
உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள்.
பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.
5 அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன.
தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.
6 அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள்.
அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள்.
மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள்.
7 அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள்.
அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்.
அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி.
நான் விதவை அல்ல.
நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள்.
8 எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும்.
அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும்.
அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள்.
ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”
9 “அவளோடு வேசித்தனம் புரிந்து அவளுடைய செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பூமியின் எல்லா அரசர்களும் அவள் எரியும்போது வரும் புகையைக் காண்பார்கள். அவளது மரணத்துக்காக அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 10 அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்:
“பயங்கரம்! எவ்வளவு பயங்கரம்,
மாநகரமே,
சக்திமிக்க பாபிலோன் நகரமே!
உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”
11 “அவளுக்காக உலகிலுள்ள வியாபாரிகள் அழுது துக்கப்படுவார்கள். இப்பொழுது அவர்களின் பொருள்களை வாங்குவதற்கு யாரும் இல்லை என்பது தான் அவர்களின் துயரத்துக்குக் காரணம். 12 அவர்கள் தங்கம், வெள்ளி, நகைகள், முத்துக்கள், மெல்லிய ஆடை, இரத்தாம்பர ஆடை, பட்டு ஆடை, சிவப்பு ஆடை, எல்லாவிதமான வாசனைக் கட்டைகள், தந்தத்தால், தங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருள்கள், விலையுயர்ந்த மரப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், வெள்ளைக்கல் பொருட்கள், ஆகியவற்றை விற்கின்றனர். 13 இலவங்கப்பட்டை, தூபவர்க்கம், தைலங்கள், சாம்பிராணி, திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மெல்லிய மாவு, கோதுமை, மாடு, ஆடு, குதிரைகள், இரதங்கள், மனிதர்களின் சரீரங்கள் மற்றும் ஆன்மாக்கள் போன்றவற்றையும் அவர்கள் விற்கின்றனர்.
14 “ஓ பாபிலோனே, நீ விரும்பிய பொருட்களெல்லாம் உன்னை விட்டுப் போய்விட்டன.
உன் செல்வமும் நாகரீகமும் மறைந்து விட்டன.
உன்னால் அவற்றை மீண்டும் பெற இயலாது.”
15 “உலகிலுள்ள வியாபாரிகள் அவளது துயரங்களுக்கு அஞ்சி அவளை விட்டு விலகுவார்கள். இவர்களே பலவற்றை அவளிடம் விற்று செல்வம் குவித்தார்கள். அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். 16 அவர்கள் சொல்வார்கள்:
“பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது!
அவள் மெல்லிய துணி,
பீதாம்பரம், சிவப்பாடைகளை அணிந்திருந்தாள்.
அவள் தங்கம், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றால் சிங்காரிக்கப்பட்டாள்.
17 அத்தனை செல்வமும் ஒரு மணி நேரத்துக்குள் அழிக்கப்பட்டது.”
“எல்லா கடல் தலைவர்களும், மாலுமிகளும், கப்பற் பயணிகளும், கடலில் சம்பாதித்தவர்களும் பாபிலோனை விட்டு விலகி நின்றனர். 18 அவள் எரியும் புகையைக் கண்டனர். அவர்கள் உரத்த குரலில், ‘இது போன்ற ஒரு மகா நகரம் எங்கேனும் உண்டா?’ என்று கேட்டனர். 19 தங்கள் தலைமேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் அழுது துக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தமாய்க் கூறினார்கள்:
“பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது!
கடலில் சொந்தக் கப்பல்களுள்ள அனைவரும் அவளது செல்வத்தால் பணக்காரர்கள் ஆனார்கள்!
ஆனால் அவளோ ஒரு மணிநேரத்தில் அழிந்து போனாள்!
20 பரலோகமே! இதற்காக மகிழ்ச்சியோடிரு.
தேவனுடைய பரிசுத்தமான மக்களே!
அப்போஸ்தலர்களே, தீர்க்கதரிசிகளே மகிழ்ச்சி அடையுங்கள்!
அவள் உங்களுக்குச் செய்த கேடுகளுக்காக தேவன் அவளைத் தண்டித்துவிட்டார்.”
21 அப்போது சக்திமிக்க தூதன் ஒருவன் ஒரு பெரும் பாறையைத் தூக்கி வந்தான். அது ஒரு பெரிய எந்திரக்கல்லைப்போல இருந்தது. கடலில் அப்பாறையைப் போட்டு விட்டு தூதன் சொன்னான்:
“இவ்வாறுதான் பாபிலோன் நகரமும் தூக்கி எறியப்படும்.
அந்நகரம் மீண்டும் ஒருக்காலும் காணப்படாமல் போகும்.
22 சுரமண்டலங்களையும் மற்ற இசைக் கருவிகளையும் நாதசுரங்களையும் எக்காளங்களையும் மக்கள் வாசித்து எழுப்பும் இசை ஒருபோதும் இனி உன்னிடத்தில் கேட்காது.
எந்தத் துறையின் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படமாட்டான்.
எந்திரங்களின் ஓசை இனி உன்னிடம் கேட்கப்படுவதில்லை.
23 இனி விளக்குகளின் ஒளி உன்னிடம் பிரகாசிக்காது.
மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தங்கள் இனி உன்னிடம் கேட்காது.
உன் வியாபாரிகள் உலகில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
உலக நாடுகள் எல்லாம் உன் மாயத்தால் மோசம் செய்யப்பட்டன.
24 தீர்க்கதரிசிகள், தேவனுடைய பரிசுத்த மக்கள் மற்றும் பூமியின்மேல் கொல்லப்பட்டிருக்கிற மக்கள் அனைவருடையதுமான இரத்தத்தால்
அவள் குற்ற உணர்வோடு இருக்கிறாள்.”
2008 by World Bible Translation Center