Chronological
4 சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். 5 பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். 6 புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.
துரோவாவில் பவுல்
7 கர்த்தரின் திருவிருந்தை [a] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். 8 நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. 9 ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.
10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.
மிலேத்துவுக்குப் பயணம்
13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து [b] நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.
எபேசு மூப்பர்களுடன் பவுல்
17 மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான்.
18 மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, “நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள். 19 யூதர்கள் அடிக்கடி எனக்கு எதிராகக் காரியங்களைத் திட்டமிட்டனர். இது எனக்குத் துன்பங்களைத் தந்தது. நான் அடிக்கடி அழுதேன். ஆனால் மிகப் பணிவாக எப்போதும் தேவனுக்கு சேவை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 20 உங்களுக்கு மிகவும் சிறந்ததையே நான் எப்போதும் செய்தேன். இயேசுவைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறினேன். வீடுகளிலும் உங்களுக்குக் கற்பித்தேன். 21 தங்கள் இருதயங்களை மாற்றி, தேவனுக்கு நேராகத் திரும்பும்படி, யூதரும் கிரேக்கருமாகிய எல்லா மக்களுக்கும் நான் கூறினேன். நமது கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைக்குமாறு அவர்கள் எல்லோருக்கும் சொன்னேன்.
22 “ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. 23 துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். 24 நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை.
25 “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். 26 எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். 27 நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. 28 உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. 29 நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். 30 மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். 31 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன்.
32 “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். 33 நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. 34 எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35 நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான்.
36 இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். 37-38 அங்கு அழுகின்ற பெரும் சத்தம் இருந்தது. பவுல் மீண்டும், அவர்கள் தன்னைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறியதால் அம்மனிதர்கள், மிகவும் வருத்தமுடனிருந்தார்கள். அவர்கள் பவுலைக் கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்தனர். அவனை வழியனுப்புவதற்காக அவனோடு கப்பல் வரைக்கும் சென்றனர்.
பவுல் எருசலேமுக்குப் போகிறான்
21 நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். 2 சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.
3 சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. 4 தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். 5 ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். 6 பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
7 தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். 8 மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். 9 அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.
10 பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை [c] வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.
12 நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13 ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.
14 பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.
15 இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16 செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பவுல் யாக்கோபைச் சந்தித்தல்
17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.
20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.
22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [d] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.
25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,
‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,
பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.
பவுல் கைதுசெய்யப்படுகிறார்
26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.
27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28 அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29 பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.
30 எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31 மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32 உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.
33 அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34 அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36 எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.
37 வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38 அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.
39 பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.
40 பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.
பவுல் மக்களோடு பேசுகிறான்
22 பவுல், “எனது சகோதரர்களே! தந்தையரே! நான் கூறுவதைக் கேளுங்கள், நான் என் சார்பான நியாயங்களை உங்கள் முன்வைக்கிறேன்” என்றான்.
2 பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,
3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் [e] மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். நான் தேவனுடைய சேவையில், நீங்கள் எல்லோரும் இப்போது இருப்பதைப் போல், முனைந்து நின்றேன். 4 இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.
5 “தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.
பவுலின் சாட்சி
6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.
8 “நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. 9 என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
10 “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11 என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.
12 “தமஸ்குவில் அனனியா [f] என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.
14 “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். 16 இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான்.
17 “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18 நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
19 “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20 உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.
21 “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.
22 யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, “அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக்கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது” என்றனர். 23 அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர். [g] 24 அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான்.
26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான்.
27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான்.
பவுல் “ஆம்” என்றான்.
28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான்.
ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்” என்றான்.
29 பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.
பவுலும்-யூதத்தலைவர்களும்
30 மறுநாள் யூதர்கள் பவுலுக்கு எதிராகப் பேசும் உறுதியான காரணத்தைக் கண்டறிய அந்த அதிகாரி முடிவு செய்தான். எனவே தலைமை ஆசாரியரையும் யூதர்களையும் அழைத்து பவுலின் விலங்குகளைக் கழற்றக் கட்டளையிட்டான். பின் பவுலை வெளியே அழைத்து வந்து, அக்கூட்டத்தின் முன்பாக நிறுத்தினான்.
23 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். 2 தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். 3 பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.
4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர்.
5 பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ [h] என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.
6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான்.
7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. 8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) 9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர்.
10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.
பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்
12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.
16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.
செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்
23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.
26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.
31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.
34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)
2008 by World Bible Translation Center