Chronological
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைக்கிறார்
6 பின்பு ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைப்பதைக் கண்டேன். அப்போது நான்கு உயிருள்ள ஜீவன்களுள் ஒன்று இடிபோன்ற குரலில் பேசத்தொடங்குவதைக் கண்டேன். “வா!” என்று சொன்னது அக்குரல். 2 நான் பார்த்தபோது எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருப்பதைப் பார்த்தேன். அக்குதிரையில் சவாரி செய்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் பகைவர்களை வீழ்த்துவதற்காகச் சென்றான். வெல்வதற்காகவே புறப்பட்டுப் போனான்.
3 ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். 4 பிறகு இன்னொரு குதிரை வெளியே வந்தது. அது தீ போன்ற சிவப்பு வண்ணம் கொண்டது. அதன்மேல் இருந்தவனுக்கு உலகத்தில் உள்ள சமாதானத்தை எடுத்துவிடவும், பூமியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குமான அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு ஒரு பெரிய வாளும் தரப்பட்டது.
5 ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான். 6 அப்பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச்சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. “ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற்கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே” என்று கூறிற்று.
7 ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது. 8 நான் பார்த்தபோது மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. இக்குதிரையை ஓட்டி வந்தவனுக்கு “மரணம்” என்று பெயர். மேலும் அவனுக்குப் பின்னால் “பாதாளம்” நெருக்கமாய் வந்துகொண்டிருந்தது. உலகில் உள்ள கால் பங்கு மக்களின்மேல் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. வாளாலும், பஞ்சத்தாலும் நோயாலும் காட்டு மிருகங்களாலும் மக்களைக் கொல்லும் அதிகாரத்தை அவன் பெற்றான்.
9 ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன். 10 அந்த ஆன்மாக்கள் உரத்த குரலில் சத்தமிட்டன. “பரிசுத்தமும் உண்மையும் உள்ள தேவனே! எங்களைக் கொன்றதற்காக உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களை நியாயம் தீர்த்துத் தண்டிக்க எவ்வளவு காலம் ஆகும்?” என்றன. 11 பிறகு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. பிறகு சிறிது நேரத்திற்குக் காத்திருக்கும்படி அவற்றிற்குச் சொல்லப்பட்டது. கொல்லப்படப்போகிற அவர்களைப்போன்ற கிறிஸ்துவின் சேவையிலுள்ள எல்லா சக ஊழியர்களும் உண்மையில் கொல்லப்படுவதுவரை அவை காத்திருக்க வேண்டும்.
12 ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைக் கவனித்தேன். அப்போது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. சூரியன் இருண்டது. துக்கம் கொண்டாடுகிறவன் அணிகிற ஆடைகள்போல அது கறுத்தது. நிலவு இரத்தம்போல சிவப்பானது. 13 வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்திமரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன. 14 வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப்போல சுருண்டுகொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன.
15 மக்கள் குகைகளிலும், மலைப்புறங்களிலும் ஒளிந்துகொண்டனர். அவர்களுடன் அரசர்களும், ஆள்வோர்களும், அதிகாரிகளும், செல்வந்தர்களும் இருந்தனர். அடிமைகளும் சுதந்தரமானவர்களும் அவர்களோடு ஒளிந்துகொண்டனர். 16 மக்கள் மலைகளையும் பாறைகளையும் பார்த்து “எங்கள் மேல் விழுங்கள். சிம்மாசனத்தில் இருப்பவரின் பார்வையில் இருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துவிடுங்கள். 17 அவர்கள் தம் கோபத்தைக் காட்டுகிற தருணமாகிய மாபெரும் நாள் வந்துவிட்டது. அதனை எதிர்த்து ஒருவராலும் நிற்கமுடியாது.” என்று கூறினார்கள்.
1,44,000 இஸ்ரவேல் மக்கள்
7 அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர். 2 பிறகு கிழக்குத் திசையில் இருந்து ஒரு தேவதூதன் வருவதைக் கண்டேன். அவனிடம் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல் இருந்தது. அந்தத் தூதன் உரத்த குரலில் ஏனைய நான்கு தூதர்களையும் அழைத்தான். அந்த நான்கு தூதர்களுக்கும் தேவன் பூமியையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தைக் கொடுத்திருந்தார். 3 அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான்.
4 பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.
5 யூதா குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
ரூபன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
காத் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
6 ஆசேர் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
நப்தலி குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
மனாசே குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
7 சிமியோன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
லேவி குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
இசக்கார் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
8 செபுலோன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
யோசேப்பு குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
பென்யமீன் குடும்பத்திலிருந்து
முத்திரையிடப்பட்டவர்கள் 12,000
பெருங்கூட்டம்
9 பிறகு நான் பார்த்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். ஒரு மனிதனால் எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சகல நாடுகளிலும், பழங்குடிகளிலும், இனங்களிலும், மொழிகளிலும், இருந்து வந்தவர்கள். அவர்கள் சிம்மாசனத்தின் முன்னும், ஆட்டுக்குட்டியானவர் முன்னும் நின்றனர். அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர். 10 அவர்கள் உரத்த குரலில் “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் நம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் வெற்றி உரியது!” என்று குரல் எழுப்பினர்.
11 அங்கே நான்கு உயிருள்ள ஜீவன்களும் மூப்பர்களும் இருந்தனர். அவர்களையும் சிம்மாசனத்தையும் சுற்றி தேவ தூதர்கள் நின்றனர். அவர்கள் தலைகுனிந்து பணிவுடன் வழிபட்டார்கள். 12 அவர்கள், “ஆமென்! எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக! ஆமென்” என்றனர்.
13 பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.
14 அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன்.
அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து [a] உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். 15 எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். 16 இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. 17 சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”
ஏழாவது முத்திரை
8 ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைத்தார். அப்போது ஏறக்குறைய அரை மணி நேரத்துக்குப் பரலோகம் முழுவதும் அமைதி ஏற்பட்டது. 2 தேவனுக்கு முன்னர் ஏழு தேவதூதர்கள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 இன்னொரு தூதன் வந்து பலிபீடத்தின் அருகில் நின்றான். அவன் தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்திருந்தான். தேவனுடைய பரிசுத்த மக்களின் பிரார்த்தனைகளோடு பொற்பீடத்தின் மீது எரிக்கும் பொருட்டு அவனிடம் மிகுதியான தூபவர்க்கம் கொடுக்கப்பட்டது. 4 தூதனின் கையில் உள்ள கலசத்தில் இருந்து தூபப் புகையானது தேவனிடம் சென்றது. அது தேவனுடைய மக்களது பிரார்த்தனைகளோடும் சென்றது. 5 பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்தான். பின்பு அதைப் பலிபீடத்து நெருப்பால் நிரப்பினான். பின் அதனைப் பூமியில் வீசியெறிந்தான். அதன் பிறகு அங்கே மின்னலும், இடியும், வேறு சப்தங்களும், நிலநடுக்கமும் ஏற்பட்டன.
ஏழு தூதர்களும் தம் எக்காளங்களை ஊதுதல்
6 பிறகு ஏழு தூதர்களும் தம் ஏழு எக்காளங்களையும் ஊதத் தயாரானார்கள்.
7 முதல் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி பூமியிலே விழுந்தன. இதனால் மூன்றில் ஒரு பங்கு பூமியும், மூன்றில் ஒரு பங்கு மரங்களும் எரிந்துபோயின. பசும்புற்களெல்லாம் கரிந்து போயின.
8 இரண்டாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அதனால் நெருப்பு பற்றி எரிகின்ற மலை போன்ற ஒன்று கடலில் எறியப்பட்டது. எனவே கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாயிற்று. 9 கடலில் உயிர் வாழ்கின்ற உயிர்களில் மூன்றில் ஒரு பகுதி செத்துப்போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துபோயிற்று.
10 மூன்றாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். பிறகு வானில் உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் தீப்பந்தம்போல எரிந்து விழுந்தது. அது ஆறுகளில் மூன்றில் ஒரு பகுதி மீதும் நீரூற்றுகளின் மீதும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்தின் பெயர் எட்டி. அதனால் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டியைப் போன்று கசப்பாயிற்று. அவற்றைக் குடித்த ஏராளமான மக்கள் இறந்துபோயினர்.
12 நான்காம் தூதன் தன் எக்காளத்தை எடுத்து ஊதினான். அதனால் மூன்றில் ஒரு பகுதியான சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் சேதப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இருண்டது. இரவிலும், பகலிலும் மூன்றில் ஒரு பாகம் வெளிச்சம் இல்லாமல் போனது.
13 நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது வானில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகின் சத்தத்தைக் கேட்டேன். அது உரத்த குரலில், “ஆபத்து, ஆபத்து, பூமியில் உயிருடன் வாழ்பவர்களுக்கு ஆபத்து. எஞ்சிய மற்ற மூன்று தேவதூதர்கள் தம் எக்காளங்களை ஊதும்போது ஆபத்து நேரும்” என்றது.
ஐந்தாம் எக்காளம் முதலாவது ஆபத்தை ஆரம்பித்து வைக்கிறது
9 ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 2 அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது.
3 அப்புகையில் இருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் பறந்து வந்தன. அவற்றுக்குத் தேளுக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. 4 பூமியில் உள்ள புல்லையோ செடி கொடிகளையோ, மரத்தையோ சேதமாக்கக்கூடாது என்று வெட்டுக்கிளிகளுக்கு ஆணை இருந்தது. தேவனுடைய முத்திரையைத் தம் நெற்றியில் தாங்காத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவ்வெட்டுக் கிளிகளுக்கு உத்தரவு இருந்தது. 5 மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது. 6 அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்.
7 வெட்டுக்கிளிகள், போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப்போல இருந்தன. அவற்றின் தலைகளின் மேல் பொன்மயமான கிரீடங்கள் போன்றவை இருந்தன. அவை மனித முகங்களையும், 8 பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன. 9 அவற்றின் மார்புகள் இரும்புக் கவசங்களைப்போல் இருந்தன. அவற்றின் சிறகுகளிலிருந்து புறப்படும் ஓசையானது யுத்தகளத்தில் நுழையும் குதிரைகள் பூட்டிய ரதங்களின் இரைச்சலைப்போல இருந்தது. 10 அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது. 11 பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் [b] என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.
12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று. ஆனாலும் எச்சரிக்கையாயிருங்கள். இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வர இருக்கின்றன.
ஆறாவது எக்காள தொனி
13 ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். 14 பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன். 15 எனவே, அந்த ஆண்டுக்கும், அந்த மாதத்துக்கும், நாளுக்கும், மணிக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் விடுவிக்கப்பட்டார்கள். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 16 அவர்களது படையில் குதிரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் கேள்விப்பட்டேன். அவை இருபது கோடி ஆகும்.
17 குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன. 18 குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள். 19 அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன.
20 பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்). 21 இம்மக்கள் தம் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களைக் கொல்லும் வழக்கத்தையும் விடவில்லை. தம் தீயமந்திரங்கள், பாலியல் பாவங்கள், திருட்டு வேலைகள் போன்றவற்றையும் விடவில்லை.
தேவதூதனும் ஒரு சிறு தோல்சுருளும்
10 பிறகு நான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு பலமுள்ள தேவதூதனைக் கண்டேன். அவனை மேகங்கள் ஆடையைப்போல சுற்றியிருந்தன. அவனது தலையைச் சுற்றி வானவில் இருந்தது. அவனது முகம் சூரினைப் போன்று இருந்தது. அவனது கால்களோ நெருப்புத் தூண்களைப் போன்று விளங்கின. 2 அந்தத் தூதன் தன் கையில் சிறு தோல் சுருள் ஒன்றை வைத்திருந்தான். அத்தோல்சுருள் திறந்திருந்தது. அத்தூதன் தன் வலதுகாலைக் கடலிலும் இடது காலை பூமியிலும் வைத்தான். 3 சிங்கம் கெர்ச்சிப்பதைப்போன்று அத்தூதன் சத்தமிட்டான். பின் ஏழு இடிகளும் சத்தமாக முழங்கின.
4 அந்த ஏழு இடிகளும் சொல்லச் சொல்ல நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் அப்போது பரலோகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது “ஏழு இடிகளும் சொல்வதை நீ எழுதாதே. அவற்றை இரகசியமாய் மூடிவை” என்று சொன்னது.
5 கடலின் மேலும் பூமியின் மேலும் நின்றுகொண்டிருந்த தேவ தூதன் தன் கையைப் பரலோகத்துக்கு நேராக உயர்த்தியதைப் பார்த்தேன். 6 எல்லாக் காலங்களிலும் ஜீவிக்கிற தேவனின் வல்லமையால் அத்தூதன் ஆணையிட்டான். தேவனே வானத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அவரே பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தவர். அவரே கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அந்தத் தூதன், “இனி தாமதம் இருக்காது! 7 ஏழாம் தூதன் எக்காளத்தை ஊதத் தயாராக இருக்கும் நாட்களில் தேவனுடைய இரகசியத் திட்டம் நிறைவேறும். தேவன் தன் ஊழியக்காரரிடமும், தீர்க்கதரிசிகளிடமும் கூறிய நற்செய்தி தான் அத்திட்டம்” என்றான்.
8 மீண்டும் அதே குரலை நான் பரலோகத்திலிருந்து கேட்டேன். அக்குரல் என்னிடம், “போ, அத்தூதன் கையில் உள்ள திறந்திருக்கும் தோல் சுருளை வாங்கிக்கொள். கடலிலும், பூமியிலும் நிற்கிற தூதனே இவன்” என்றது.
9 எனவே, நான் அத்தூதனிடம் சென்று அச்சிறு தோல்சுருளைத் தருமாறு கேட்டேன். அத்தூதன் என்னிடம் “இத்தோல் சுருளை எடுத்துத் தின்று விடு. இது உன் வயிற்றில் கசப்பாக இருக்கும் ஆனால் உன் வாயில் இது தேனைப் போன்று இனிக்கும்”, என்றான். 10 அதனால் தூதனின் கையில் இருந்து அச்சிறு தோல் சுருளை நான் வாங்கினேன். அதனை நான் தின்றேன். அது என் வாயில் தேனைப் போன்று இனித்தது. ஆனால் அது என் வயிற்றுக்குப் போனதும் கசந்தது. 11 அப்போது அவன் என்னிடம் “நீ மறுபடியும் பல்வேறு இனங்கள், நாடுகள், மொழிகள், அரசர்கள் ஆகியோரைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்றான்.
இரண்டு சாட்சிகள்
11 பிறகு கைக்கோல் போன்ற ஒரு அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்போது தேவதூதன் நின்று என்னிடம், “போ, போய் தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அளந்து பார், அதற்குள் வழிபட்டுக்கொண்டிருப்பவர்களையும் அளந்து பார். 2 ஆலயத்திற்கு வெளியே இருக்கிற பிரகாரம் யூதர் அல்லாதவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அளக்காதே. அந்த மக்கள் பரிசுத்த நகரத்தில் 42 மாதங்கள் நடமாடுவார்கள். 3 நான் எனது இரண்டு சாட்சிகளுக்கும் 1,260 நாட்களின் அளவிற்குத் தீர்க்கதரிசனம் சொல்ல அதிகாரம் கொடுப்பேன். அவர்கள் முரட்டுத் துணியாலான ஆடையை அணிந்திருப்பார்கள்” என்றான்.
4 இரண்டு ஒலிவ மரங்களும் பூமியின் கர்த்தருக்கு முன்னிலையில் இருக்கிற இரு விளக்குத்தண்டுகளும் இந்த இரு சாட்சிகளாகும். 5 எவராவது சாட்சிகளைச் சேதப்படுத்த முயற்சித்தால், சாட்சிகளின் வாயில் இருந்து நெருப்பு வந்து எதிரிகளை அழித்துவிடும். எவரொருவர் சாட்சிகளைச் சேதப்படுத்த முயன்றாலும் அவர்கள் இது போலவே அழிக்கப்படுவர். 6 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாள்களில் மழை பெய்துவிடாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு வல்லமை உண்டு. அவர்களுக்குத் தண்ணீரை இரத்தம் ஆக்குகிற வல்லமையும் உண்டு. விரும்பும்போதெல்லாம் அடிக்கடி பூமியைச் சகலவிதமான வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உண்டு.
7 அந்த இரு சாட்சிகளும் தங்களது செய்திகளைச் சொல்லி முடித்தபின், பாதாளத்தில் இருந்து வெளிவருகிற மிருகம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடும். அம்மிருகம் அவர்களைத் தோற்கடித்து அவர்களைக் கொல்லும். 8 பிறகு ஞானார்த்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படுகிற அந்த மகா நகரத்தின் தெருக்களில் அச்சாட்சிகளின் சடலங்கள் கிடக்கும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த நகரமும் இது தான். 9 ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். 10 அந்த இருவரும் இறந்துபோனதற்காக, பூமியில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் விருந்து நடத்தி தமக்குள் பரிசுகளை அளிப்பர். அச்சாட்சிகள் உலகில் உள்ள மக்களுக்கு மிகுதியாகத் துன்பம் அளித்ததால்தான் அம்மக்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள்.
11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர். 12 பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர்.
13 அதே நேரத்தில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நகரின் பத்தில் ஒரு பகுதி அழிந்துபோனது. அந்நில நடுக்கத்தால் ஏழாயிரம் மக்கள் இறந்து போயினர். இறந்து போகாத மற்றவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மகிமைப்படுத்தினர்.
14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.
ஏழாவது எக்காளம்
15 ஏழாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தங்கள் கேட்டன. அவை:
“உலகத்தின் இராஜ்யம் இப்போது கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமாயிற்று.
அவர் எல்லாக் காலங்களிலும் ஆள்வார்”
என்றன.
16 பிறகு தம் சிம்மாசனங்களில் தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும் தரையில்படும்படி தலைகுனிந்து தேவனை வழிபட்டனர். 17 அந்த மூப்பர்கள்,
“சகல வல்லமையும் வாய்ந்த கர்த்தராகிய தேவனே, நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
நீரே இருக்கிறவரும் இருந்தவரும் ஆவீர்.
உம் மிகப் பெரிய வல்லமையைப் பயன்படுத்தி
ஆளத் தொடங்கியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
18 உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர்.
ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம்.
இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம்.
உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம்.
சிறியோராயினும் பெரியோராயினும் சரி,
உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம்.
உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.
19 பிறகு தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. பின்னர் மின்னலும், இடி முழக்கங்களும், நிலநடுக்கங்களும், பெருங்கல்மழையும் உண்டாயிற்று.
2008 by World Bible Translation Center