Chronological
அதோனியா இராஜாவாக விரும்புகிறான்
1 தாவீது அரசன் வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது. 2 எனவே அவனது வேலைக்காரர்கள் அவனிடம், “உங்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறு பெண்ணைத் தேடுவோம். அவள் உங்கள் அருகே நெருக்கமாகப் படுத்து உங்களுக்கு சூட்டினை உண்டாக்குவாள்” என்றனர். 3 எனவே அரசனின் உடலில் சூடேற்றும் பொருட்டு அரசனின் வேலைக்காரர்கள் ஒரு அழகான சிறு பெண்ணை இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடினார்கள். அவர்கள் அபிஷாக் என்ற பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவள் சூனேம் நகரத்தவள். அவளை அவர்கள் அரசனிடம் அழைத்து வந்தனர். 4 அந்தப் பெண் மிகவும் அழகானவள். அவள் அரசனை மிகவும் கவனித்து சேவை செய்தாள். ஆனால் அரசனான தாவீது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளவில்லை.
5 தாவீதிற்கும் அவனது மனைவி ஆகீத்திற்கும் அதோனியா எனும் மகன் இருந்தான். அவன் பெருமிதம் கொண்டவனாகி அவனே புதிய அரசனாக ஆவான் என்று முடிவு செய்தான். அவனுக்கு அரசனாவதில் மிகுந்த விருப்பமும் இருந்தது. எனவே அவன் ஒரு இரதத்தையும், குதிரைகளையும், முன்னால் ஓட்டிப்போக 50 ஆட்களையும் ஏற்பாடு செய்துக் கொண்டான். 6 அவன் அழகான தோற்றம் உடையவன். அப்சலோமுக்குப்பிறகு பிறந்தவன். ஆனால் தாவீதோ அவனைத் திருத்தவில்லை, “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்றும் கேட்கவில்லை.
7 செருயாவின் மகனான யோவாபோடும் ஆசாரியனாகிய அபியத்தாரோடும் அதோனியா பேசினான். அவன் புதிய அரசனாக அவர்கள் உதவ முடிவு செய்தனர். 8 ஆனால் பலர் அதோனியாவின் செயலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தாவீதிற்கு உண்மையானவர்களாக இருந்தனர். ஆசாரியனான சாதோக்கு, யோய்தாவின் மகனான பெனாயா, தீர்க்கதரிசியாகிய நாத்தான், சீமேயி, ரேயி, தாவீதோடு இருந்த பலசாலிகள் போன்றோர் அதோனியாவுக்குச் சாதகமாக இல்லை.
9 ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற மகன்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான். 10 ஆனால் அவன் தந்தையின் சிறப்பான மெய்க்காவலாளியையும், தன் சகோதரனான சாலொமோனையும், தீர்க்கதரிசிகளாகிய நாத்தான், பெனாயா ஆகியோரையும் அழைக்கவில்லை.
நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனுக்காக பேசுதல்
11 ஆனால் நாத்தான், இதைப்பற்றி அறிந்து சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் சென்றான். அவளிடம் அவன், “ஆகீத்தின் மகனான அதோனியா என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவீர்களா? அவன் தன்னையே அரசனாக்கிக்கொண்டான். நமது ஆண்டவனும் அரசனுமான தாவீது இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். 12 உங்கள் வாழ்வும், உங்கள் மகன் சாலொமோனின் வாழ்வும் ஆபத்தில் உள்ளது. நான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிக் கூறுகிறேன். 13 அரசனிடம் செல்லுங்கள். அவனிடம், ‘என் அரசனும் ஆண்டவனுமானவரே! என் மகன் சாலொமோனே அடுத்த அரசனாக வருவான் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதோனியா எவ்வாறு அரசனாக வரமுடியும்?’ என்று சொல்லுங்கள். 14 நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் அரசனிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.
15 எனவே பத்சேபாள் அரசனை அவனது படுக்கை அறையில் போய் பார்த்தாள். அரசன் முதியவனாயிருந்தான். சூனேமிலுள்ள பெண்ணான அபிஷாக் அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். 16 அவள் அரசனின் முன்பு குனிந்து வணங்கினாள். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று அரசன் கேட்டான்.
17 பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் மகனான சாலொமோனே அடுத்த அரசன். சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள். 18 இப்போது, இதை அறியாமல் அதோனியா தன்னையே அரசனாக்கிக்கொண்டிருக்கிறான். 19 அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து மகன்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள மகனான சாலொமோனை அழைக்கவில்லை. 20 எனது அரசனும் ஆண்டவனுமானவரே, இப்போது உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உமக்குப் பிறகு அடுத்த அரசன் யார் என்பதை முடிவு செய்ய அவர்கள் உமக்காக காத்திருக்கிறார்கள். 21 நீங்கள் மரிப்பதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்களை அடக்கம் செய்த பிறகு, அவர்களால் நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
22 இவ்வாறு அவள் அரசனோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, தீர்க்கதரிசியான நாத்தான் வந்தான். 23 வேலைக்காரர்கள் அரசனிடம் போய், “தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்” என்றனர். எனவே நாத்தான் அரசனிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். 24 பிறகு அவன், “எனது ஆண்டவனும் அரசனுமானவரே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் அடுத்த அரசன் என்று நீங்கள் அறிவித்துள்ளீர்களா? இனி அதோனியாதான் ஜனங்களை ஆள்வான் என்று முடிவு செய்துவிட்டீர்களா? 25 ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து மகன்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா அரசன் நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர். 26 ஆனால் அவன் என்னையும், ஆசாரியனான சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், உங்கள் மகனான சாலொமோனையும் அழைக்கவில்லை. 27 எனது அரசனும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் அரசனாவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.
28 பிறகு அரசனாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
29 பின்னர் அரசன், ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது. 30 நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் மகனான சாலொமோனே அரசனாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.
31 பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து அரசனை வணங்கினாள். அவள், “தாவீது அரசன் நீண்டகாலம் வாழ்வாராக!” என்று வாழ்த்தினாள்.
சாலொமோன் புதிய அரசனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
32 பிறகு தாவீது அரசன், “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து அரசன் முன்பு நின்றனர். 33 அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் மகனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள். 34 அங்கே, ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்யட்டும். பின் எக்காளத்தை ஊதி, ‘புதிய அரசனாகிய சாலொமோன் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35 பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் அரசனாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.
36 யோய்தாவின் மகனான பெனாயா, “எனது அரசனும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார். 37 என் அரசனும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.
38 எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது அரசனுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை அரசனுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39 ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி அரசனாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “அரசன் சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 40 பிறகு அனைவரும் சாலொமோனைப் பின்தொடர்ந்து நகருக்கு வந்தனர். நாதசுரங்களை ஊதினர். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பூமி அதிரும்படி அவர்கள் சத்தத்தை எழுப்பினர்.
41 இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.
42 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் மகனான, யோனத்தான் வந்தான்.
அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.
43 ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது அரசன் சாலொமோனைப் புதிய அரசனாக நியமித்துவிட்டான். 44 அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் அரசனின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள். 45 பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை அரசனாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம், 46 சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான். 47 அனைத்து அதிகாரிகளும் அரசர் தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது அரசனே, நீ மிகப் பெரிய அரசன்! சாலொமோனையும் மிகப் பெரிய அரசனாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’” என்று வாழ்த்தினர்.
அங்கே தாவீது அரசனும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான். 48 அரசன் தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் மகனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.
49 அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். 50 அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். [a] 51 சிலர் சாலொமோனிடம் போய், “அதோனியா உங்களைக் கண்டு அஞ்சுகிறான். அவன் பரிசுத்த கூடாரத்தில் பலி பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவன், ‘என்னை கொல்லமாட்டேன் என சாலொமோனை வாக்குறுதி தரச்சொல்லுங்கள்’ என்கிறான்” என்றார்கள்.
52 எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான். 53 பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.
தாவீது ராஜாவின் மரணம்
2 தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது 2 “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு. 3 இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய். 4 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.
5 தாவீது மேலும், “செருயாவின் மகனான யோவாப் எனக்கு என்ன செய்தான் என்பதை நினைத்துப் பார். அவன் இஸ்ரவேலரின் படையிலுள்ள இரண்டு தளபதிகளைக் கொன்றான். அவன் நேரின் மகனான அப்னேரையும் ஏத்தேரின் மகனான அமாசாவையும் கொன்றான். அவன் இவர்களைச் சமாதானக் காலத்தின்போது கொன்றான் என்பதை நினைத்துப்பார். இம்மனிதர்களின் இரத்தமானது அவனது அரைக்கச்சையிலும் கால்களிலுள்ள பாதரட்சைகளிலும் படிந்தது. நான் அவனைத் தண்டித்திருக்க வேண்டும். 6 ஆனால் இப்போது நீ தான் அரசன். எனவே நீ விரும்புகிற வழியில் அவனைத் தண்டிப்பதுதான் மிகப் புத்திசாலித்தனமானது. ஆனால் அவன் கொல்லப்படவேண்டியவன் என்பதில் மட்டும் நீ உறுதியாக இருக்கவேண்டும். அவனைத் தன் முதுமையில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே!
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டு. அவர்களை உனது நண்பர்களாக்கி உனது மேஜையிலேயே உணவு உண்ணச் செய். நான் உன் சகோதரனாகிய அப்சலோமிடமிருந்து ஓடிப்போகும்போது அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
8 “கேராவின் மகனான சீமேயி இன்னும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொள். அவன் பகூரிமின் ஊரைச் சார்ந்த பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன். நான் மக்னாயீமுக்குப் போகும்போது அவன் என்னை மோசமாக சபித்தான். ஆனாலும் நான் யோர்தானுக்குப் போனதும் அவன் என்னை வரவேற்றதால் நான் உன்னை வாளால் கொல்வதில்லை என்று கர்த்தர் மேல் வாக்குறுதிக் கொடுத்துவிட்டேன். 9 எனினும், அவனை குற்றமற்றவன் என்று எண்ணி நீ தண்டிக்காமல் விட்டுவிடாதே. அவனை என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியும். அவனையும் முதியவயதில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே” என்றான்.
10 பின்னர் தாவீது மரித்தான். அவன் தாவீது நகரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டான். 11 இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.
Solomon and Adonijah சாலொமோன் தன் இராஜ்யத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்
12 இப்போது சாலொமோன் அரசன் தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
13 ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், “நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.
அவனோ, “ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும். 14 நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.
15 அதோனியா, “ஒரு காலத்தில் அரசாங்கம் எனக்குரியதாயிருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் அடுத்த அரசன் நான்தான் என்று எண்ணினார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இப்போது எனது சகோதரன் அரசனாகிவிட்டான். கர்த்தர் அவனை அரசனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். 16 இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றான். பத்சேபாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
17 அதோனியா, “அரசனாகிய சாலொமோனிடம் நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பது எனக்குத் தெரியும். அவன், நான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணக்கும்படி செய்யவேண்டும்” என்று கேட்டான்.
18 பிறகு பத்சேபாள், “நல்லது இதுபற்றி உனக்காக அரசனிடம் பேசுவேன்” என்றாள்.
19 எனவே பத்சேபாள் அரசன் சாலொமோனிடம் பேசுவதற்காகப் போனாள். சாலொமோன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றான். அவன் குனிந்து வணங்கி பிறகு உட்கார்ந்தான். அவளுக்கு இன்னொரு சிங்காசனம் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் கூறினான். அவனது வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
20 பத்சேபாள் அவனிடம், “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே” என்றாள்.
அதற்கு அரசன், “அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.
21 எனவே பத்சேபாள், “உனது சகோதரனான அதோனியா சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்” என்றாள்.
22 அதற்கு அவன் தன் தாயிடம், “அபிஷாகை அதோனியாவிற்குக் கொடுக்கும்படி நீ ஏன் வேண்டுகிறாய். அவனையே அரசனாக்கிவிடு என்று நீ ஏன் கேட்கவில்லை. இத்தனைக்கும் அவன் எனக்கு மூத்தசகோதரன் தானே! ஆசாரியனான அபியத்தாரும் யோவாபும் அவனுக்கு பக்கபலமாக இருப்பார்கள்!” என்றான்.
23 பிறகு சாலொமோன் கர்த்தரிடம் ஒரு வாக்குறுதி செய்துகொடுத்தான். “நான் இதற்குரிய விலையை அதோனியாவை செலுத்தச் செய்வேன்! அது அவனது உயிராகவும் இருக்கும்! 24 கர்த்தர் என்னை இஸ்ரவேலின் அரசனாக்கினார். என் தந்தை தாவீதிற்கு உரிய சிங்காசனத்தை நான் பெறுமாறு செய்தார். கர்த்தர் தன் வாக்குறுதியைக்காத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆட்சியை அளித்தார். நான் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று அதோனியா கொல்லப்படுவான்” என்றான்.
25 அரசனான சாலொமோன் அதை பெனாயாவிற்கு கட்டளையிட்டான். அவன் சென்று அதோனியாவைக் கொன்று விட்டான்.
26 பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம் அரசனான சாலொமோன், “நான் உன்னைக் கொல்ல வேண்டும். ஆனால் உன்னை உனது வீடு இருக்கிற ஆனதோத்திற்குப் போக அனுமதிக்கிறேன். நான் இப்போது உன்னைக் கொல்லமாட்டேன். ஏனென்றால் என் தந்தையோடு பயணம்செய்யும்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றாய். என் தந்தையின் துன்பங்களிலும் பங்கு பெற்றிருக்கிறாய் என்று தெரியும்” என்றான். 27 சாலொமோன் ஆசாரியனாகிய அபியத்தாரிடம் மேலும் தொடர்ந்து அவன் கர்த்தருக்கு சேவை செய்யமுடியாது என்றும் சொன்னான். இது கர்த்தர் சொன்ன வழியிலேயே நிகழ்ந்தது. சீலோவில் தேவன் ஆசாரியனான ஏலி பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் இவ்வாறுதான் சொன்னார். அபியத்தாரும் ஏலியின் குடும்பத்தினன்தான்.
28 யோவாப், இதைப்பற்றி கேள்விப்பட்டதும் அஞ்சினான். அவன் அப்சலோமிற்கு உதவாவிட்டாலும் அதோனியாவிற்கு உதவியிருக்கிறான். அவன் கர்த்தருடைய கூடாரத்துக்கு ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். 29 யாரோ ஒருவன் சாலொமோனிடம் போய், யோவாப் கர்த்தருடைய கூடாரத்தில் பலிபீடத்தருகில் இருப்பதாய் சொன்னான். எனவே சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவிடம் அங்குபோய் அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
30 பெனாயா கர்த்தருடைய கூடாரத்திற்குப் போய் யோவாபிடம், “வெளியே வா! என அரசன் சொல்கிறான்” என்றான்.
ஆனால் யோவாபோ, “இல்லை, நான் இங்கேயே மரிக்கிறேன்” என்றான்.
எனவே பெனாயா அரசனிடம் திரும்பி வந்து யோவாப் சொன்னதைச் சொன்னான்.
31 பிறகு அரசன் பெனாயாவை நோக்கி, “அவன் சொல்வதுபோன்று செய்! அங்கேயே அவனைக் கொன்று புதைத்துவிடு. பின்னரே நானும் எனது குடும்பமும் பழியிலிருந்து விடுதலை பெறுவோம். அப்பாவி ஜனங்களை கொன்றதுதான் யோவாப் செய்த குற்றம். 32 யோவாப் அவனைவிட மிகச்சிறந்த இரண்டு பேரைக் கொன்றிருக்கிறான். அவர்கள் நேரின் மகனான அப்னேரும் ஏதேரின் மகனான அமாசாவும் ஆவார்கள். அப்னேர் இஸ்ரவேல் படையின் தளபதியாகவும் அமாசா யூதேயா படையின் தளபதியாகவும் இருந்தனர். அந்தக் காலத்தில் அவர்களை யோவாப்தான் கொன்றான் என்பது என் தந்தையான தாவீதிற்குத் தெரியாது. எனவே கர்த்தர் அவனைக் கொலையுறும்படி தண்டித்துள்ளார். 33 அவர்களின் மரணத்துக்கு அவனே காரணம், அவனது குடும்பத்திற்கும் இப்பழி எக்காலத்திற்கும் உரியதாகும். ஆனால் தேவன் தாவீதிற்கும், அவனது சந்ததியினருக்கும், குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும் எக்காலத்திலும் சமாதானத்தை உருவாக்குவார்” என்றான்.
34 எனவே, யோய்தாவின் மகனான பெனாயா யோவாபைக் கொன்றான். அப்பாலைவனத்திலேயே, அவனது வீட்டிற்கு அருகிலேயே யோவாப் அடக்கம் செய்யப்பட்டான். 35 பிறகு யோவாபின் இடத்தில் யோய்தாவின் மகனான பெனாயாவைத் தனது படைத்தளபதியாக அரசன் நியமித்தான். அபியத்தாரின் இடத்தில் சாதோக்கை சாலொமோன் தலைமை ஆசாரியனாக நியமித்தான். 36 பிறகு சீமேயியை வரவழைத்தான். அரசன் அவனிடம், “எருசலேமிலே உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டி அதிலே வாழ்ந்து கொள். நகரத்தை விட்டு வெளியே போகாதே. 37 நீ நகரத்தை விட்டு கீதரோன் ஆற்றை தாண்டிச் சென்றால் கொல்லப்படுவாய். அது உனது சொந்த தவறாக இருக்கும்” என்றான்.
38 எனவே சீமேயி, “அரசனே! அது நல்லது. நான் உங்களுக்குக் கீழ்ப்படிவேன்” என்றான். அதனால் எருசலேமில் நீண்ட காலம் அவன் வாழ்ந்தான். 39 ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்ததும், அவனது இரண்டு அடிமைகள் அவனைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் காத் நகர அரசனான மாக்காவின் மகனான ஆகீஸிடம் ஓடிச் சென்றனர். சீமேயிக்கு தனது அடிமைகள் காத் நகரில் இருப்பது தெரியவந்தது. 40 எனவே சீமேயி தனது கழுதையின் மீது சேணத்தைப் போட்டு காத்திலுள்ள ஆகீஸ் அரசனிடம் சென்றான். அவன் தன் அடிமைகளைக் கண்டுபிடித்து வீட்டிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான்.
41 ஆனால் சிலர் சாலொமோனிடம் சீமேயி எருசலேமிலிருந்து காத்திற்குச்சென்று திரும்பியதைப் பற்றி சொன்னார்கள். 42 எனவே சாலொமோன் அவனை அழைத்துவரச் செய்தான். அரசன், “நீ எருசலேமை விட்டுச்சென்றால் கொல்லப்படுவாய் என்று நான் கர்த்தருடைய பேரால் ஆணைச் செய்து உன்னை எச்சரித்துள்ளேன். நீ எங்காவது சென்றால், உன் மரணத்துக்கு உன் தவறே காரணம் என்றும் எச்சரித்திருக்கிறேன். நான் சொன்னதற்கு நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிவதாகக் கூறினாய். 43 உனது சத்தியத்திலிருந்து ஏன் தவறினாய்? எனது கட்டளைக்கு ஏன் கீழ்ப்படியவில்லை 44 என் தந்தை தாவீதிற்கு எதிராகப் பல தவறுகளை நீ செய்துள்ளாய் என்பதை அறிவேன். இப்போது அத்தவறுகளுக்குக் கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். 45 ஆனால் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். அவர் தாவீதின் அரசாங்கத்தை என்றென்றும் பாதுகாப்பார்” என்றான்
46 பிறகு அரசன் பெனாயாவிடம் சீமேயியைக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவனும் அப்படியே செய்தான். இப்போது சாலொமோன் தன் அரசாங்கத்தை தன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
தாவீதின் பாடல்
37 தீயோரைக் கண்டு கலங்காதே,
தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
2 விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
தீயோர் காணப்படுகிறார்கள்.
3 கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
4 கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
5 கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
செய்யவேண்டியதை அவர் செய்வார்.
6 நண்பகல் சூரியனைப்போன்று
உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
7 கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
8 கோபமடையாதே!
மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
9 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
10 இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.
அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.
11 தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.
அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
12 தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள்.
நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
13 ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார்.
அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார்.
14 தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள்,
இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.
15 அவர்கள் வில் முறியும்.
அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.
16 ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும்
நல்லோர் சிலரே சிறந்தோராவர்.
17 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
18 தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும்.
19 தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை.
பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.
20 ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள்.
அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும்.
அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
21 தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை.
ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
22 நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள்.
ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
25 நான் இளைஞனாக இருந்தேன்.
இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
என்றென்றும் நீ வாழ்வாய்.
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.
35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.
37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.
71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
7 நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
தேவன் அவனைக் கைவிட்டார்.
அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.
94 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
நீர் வருகிறவரும் ஜனங்களுக்குத் தண்டனையைத் தருகிறவருமான தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
பெருமையுடைய ஜனங்களுக்கு, அவர்களுக்குரிய தண்டனையைக் கொடும்.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
உமது ஜனங்கள் துன்புறும்படி அவர்கள் செய்கிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதை கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்?
கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்!
நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
9 தேவன் நமது காதுகளை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் காதுகள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் கேட்கமுடியும்!
தேவன் நமது கண்களை உண்டாக்கினார்.
நிச்சயமாக அவருக்கும் கண்கள் உள்ளன.
அவரால் நிகழ்வதைக் காணமுடியும்!
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
தேவன் அவர்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கற்பிப்பார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.
12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
தீயோர் கல்லறைக்குள் வைக்கப்படும்வரை அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வார்கள்.
16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
நான் மரணத்தினால் மௌனமாக்கப்பட்டிருப்பேன்!
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
ஆனால் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவனுக்கு உதவுகிறார்.
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.
20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
களங்கமற்ற ஜனங்களைக் குற்றவாளிகள் எனக் கூறி, அவர்களைக் கொல்கிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை அழிப்பார்.
எங்கள் தேவனாகிய கர்த்தர் அத்தீய நீதிபதிகளை அழிப்பார்.
2008 by World Bible Translation Center