Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 24

தாவீது தன் படையை கணக்கெடுக்க முடிவெடுக்கிறான்

24 இஸ்ரவேல் மீது மீண்டும் கர்த்தர் கோபம் அடைந்தார். இஸ்ரவேலருக்கு எதிராகக் திரும்பும்படி கர்த்தர் தாவீதை மாற்றினார். தாவீது, “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள்” என்றான்.

தாவீது அரசன் படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, “தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்” என்றான்.

ஆனால் யோவாப் அரசனிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான்.

தாவீது அரசன் உறுதியாக யோவாபுக்கும் படைத் தலைவர்களுக்கும் ஜனங்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார். எனவே யோவாபும் படைத் தலைவர்களும் இஸ்ரவேலின் ஜனங்கள் தொகையைக் கணக்கெடுக்க அரசனிடமிருந்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் ஆரோவேரில் முகாமிட்டுத் தங்கினார்கள். நகரின் வலது புறத்தில் அவர்கள் முகாம் இருந்தது.

(காத் பள்ளத்தாக்கின் நடுவில் நகரம் இருந்தது. யாசேருக்குப் போகும் வழியில் அந்த நகரம் இருந்தது.)

பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஓத்சிக்கும் போனார்கள். அங்கேயிருந்து தாண்யானுக்கும் சீதோனைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார்கள். அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள். ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர்.

யோவாப் அரசனுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர்.

கர்த்தர் தாவீதைத் தண்டிக்கிறார்

10 ஜனங்கள் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது வெட்கமடைந்தான். தாவீது கர்த்தரை நோக்கி, “நான் செய்த இக்காரியத்தில் பெரும் பாவம் செய்தேன்! கர்த்தாவே! என் பாவத்தை மன்னிக்கும்படி நான் கெஞ்சுகிறேன். நான் மிகவும் மூடனாகிவிட்டேன்” என்றான்.

11 காலையில் தாவீது எழுந்தபோது, கர்த்தருடைய வார்த்தை தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்திற்கு வந்தது. 12 கர்த்தர் காத்தை நோக்கி, “போய் தாவீதிடம் கூறு, ‘இதுவே கர்த்தர் கூறுவது: நான் மூன்று காரியங்களை முன் வைக்கிறேன். நான் உனக்குச் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிந்துக்கொள் என்கிறார்’ என்று சொல்” என்றார்.

13 காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான்.

14 தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான்.

15 எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர். 16 தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனை கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான்.

அர்வனாவின் போரடிக்கிற களத்தைத் தாவீது வாங்குகிறான்

17 ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான்.

18 அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான். 19 காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான். 20 அரசனான தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார். 21 பின் அர்வனா, “எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான்.

தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான்.

22 அர்வனா, தாவீதிடம், “எனது அரசனாகிய ஆண்டவன் தாங்கள் பலிகொடுக்க எதையும் என்னிடமிருந்து எடுக்கலாம். இந்தப் பசுக்களைத் தகனபலிக்காகவும், போரடிக்கிற உருளைகளையும், நுகத்தடிகளையும் விறகுக்காகவும் பயன்படுத்துங்கள். 23 அரசனே! நான் எல்லாவற்றையும் உங்களுக்கு தருவேன்!” என்றான் அர்வனா மீண்டும் அரசனுக்கு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் இதைக் கண்டு மகிழட்டும்” என்றான்.

24 ஆனால் அரசன் அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான்.

ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான். 25 பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.

1 நாளாகமம் 21-22

இஸ்ரவேலரை எண்ணுவதினால் தாவீது பாவம் செய்கிறான்

21 இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான். எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான்.

ஆனால் யோவாப், “இப்போது இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது அரசனும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.

ஆனால், தாவீது அரசனோ உறுதியாக இருந்தான். அரசன் சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான். அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது அரசனின் கட்டளையை விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார்.

தேவன் இஸ்ரவேலரைத் தண்டிக்கிறார்

பிறகு தாவீது தேவனிடம், “நான் முட்டாள்தனமான செயலைச் செய்துவிட்டேன். இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி ஒரு தீய பாவத்தைச் செய்துவிட்டேன். இப்போது உங்கள் தொண்டனாகிய எனது பாவத்தை என்னிடமிருந்து நீக்குமாறு கெஞ்சுகிறேன்” என்றான்.

9-10 காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.

11-12 பிறகு காத் தாவீதிடம் சென்று, அவனிடம், “‘தாவீதே நீ விரும்புகிற தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்: மூன்று ஆண்டுகள் உணவில்லாமல் இருப்பது, அல்லது மூன்று மாதங்கள் உனது பகைவர்கள் தம் ஆயுதங்களால் துரத்த ஓடிக்கொண்டே இருப்பது, அல்லது மூன்று நாட்கள் கர்த்தர் தரும் தண்டனை. இதனால் பயங்கரமான நோய் நாடு முழுவதும் பரவும், கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் முழுவதுமுள்ள ஜனங்களை அழிப்பான்’ என்று கர்த்தர் சொல்கிறார். தேவன் என்னை அனுப்பினார். இப்போது, நான் அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீ முடிவு செய்” என்றான்.

13 தாவீது காத்திடம், “நான் இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன்! என்னை மனிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொள்ளவிடாதே. மனிதர்கள் என் தண்டனையை முடிவுசெய்வதை நான் விரும்பவில்லை. கர்த்தர் இரக்கம் உள்ளவர், எனவே அவரே என் தண்டனையை முடிவுசெய்யட்டும்” என்றான்.

14 எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர். 15 தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், “நிறுத்து! இதுபோதும்!” என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தருகில் நின்றான்.

16 கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர். 17 தாவீது தேவனிடம், “பாவம் செய்தவன் நான் ஒருவனே! ஜனங்களை எண்ணி கணக்கிடும்படி நானே கட்டளையிட்டேன்! நானே தவறு செய்தவன்! இஸ்ரவேல் ஜனங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை! தேவனாகிய கர்த்தாவே, என்னையும் என் குடும்பத்தையும் தண்டியும்! உமது ஜனங்களை அழிக்கும் கொடிய நோயை நிறுத்தும்!” என்றான்.

18 பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம், கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான். 19 காத் இவற்றை தாவீதிடம் கூற, தாவீது ஒர்னானின் களத்துக்குப் போனான்.

20 ஒர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஒர்னானின் நான்கு மகன்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். 21 தாவீது ஒர்னாவிடம் சென்றான், ஒர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான்.

22 தாவீது ஒர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான்.

23 ஒர்னா தாவீதிடம், “களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது அரசன், மற்றும் ஆண்டவன். உமது விருப்பப்படி செய்யும். நான் உங்களுக்கு தகனபலியிட மாடுகளும், விறகுகளும் தருவேன். தானியக் காணிக்கைக்காக, கோதுமையைத் தருவேன். நான் இவை அனைத்தையும் தருவேன்!” என்றான்.

24 ஆனால் தாவீது அரசன், “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஒர்னாவிடம் கூறினான்.

25 எனவே தாவீது ஒர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான். 26 தாவீது கர்த்தருக்கு அங்கே பலிபீடத்தைக் கட்டினான். தாவீது சர்வாங்க தகன பலியையும், சமாதானப் பலியையும் அளித்தான். தாவீது, கர்த்தரிடம் ஜெபம் செய்தான். வானிலிருந்து அக்கினியை வரவழைத்து, கர்த்தர் தாவீதிற்குப் பதில் சொன்னார். அந்த அக்கினி தகனபலிபீடத்தில் வந்து விழுந்தது. 27 பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார்.

28 ஒர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான். 29 தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான். 30 தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.

22 தாவீது, “தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்” என்றான்.

தாவீது ஆலயத்திற்கு திட்டமிடுகிறான்

தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான். எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர்.

தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் மகன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான்.

பிறகு தாவீது தன் மகன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, எனது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட நான் விரும்பினேன். ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது. ஆனால் உனக்கு ஒரு மகன் இருப்பான். அவன் சமாதான புருஷனாக இருப்பான். நான் உனது மகனுக்குச் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுப்பேன். அவனைச் சுற்றியுள்ள பகைவர்கள் அவனுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவனது பெயர் சாலொமோன். சாலொமோன் அரசனாக இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சமாதானமும் அமைதியும் தருவேன். 10 சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது மகனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான்.

11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய். 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் அரசனாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே.

14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.

17 பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது மகன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான். 18 தாவீது தலைவர்களிடம், “தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவர் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உதவினார். கர்த்தருக்கும், அவரது ஜனங்களுக்கும் இப்போது இந்த நிலம் கட்டுப்பட்டிருக்கிறது. 19 இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.

சங்கீதம் 30

தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.

30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
    எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
    எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    நீர் என்னைக் குணமாக்கினீர்.
கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
    என்னை வாழவிட்டீர்.
    குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.
    ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
    மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!

இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
    அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
    “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
    எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
    நான் மிகவும் பயந்தேன்.
தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
    எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
    மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
    என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
    என்னிடம் தயவாயிரும்!
    கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
    என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
    மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
    ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
    எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center