Chronological
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
108 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
2 சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
3 கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம்.
பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
4 கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
5 தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்!
உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும்.
6 தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும்.
எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.
7 தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி,
“நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்!
என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன்.
அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன்.
அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்
8 கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும்.
எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும்.
யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல்
9 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.”
10-11 யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்?
யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்?
தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும்.
ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர்.
நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை!
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்!
ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும்.
தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று
109 தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
2 தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள்.
உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
3 என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
4 நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள்.
எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன்.
5 நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன்.
ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள்.
நான் அவர்களை நேசித்தேன்.
ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.
6 அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும்.
அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.
7 என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும்.
என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.
8 என் பகைவன் உடனே மடியட்டும்.
அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.
9 என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும்.
10 அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.
11 என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும்.
அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
12 என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன்.
ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன்.
13 என் பகைவனை முற்றிலும் அழியும்.
அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும்.
14 என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன்.
ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.
16 ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை.
அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை.
அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.
17 பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான்.
எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும்.
அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை.
18 சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும்.
சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும்.
சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
19 சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும்.
சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.
20 என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன்.
என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன்.
21 கர்த்தாவே, நீரே என் ஆண்டவர்.
எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும்.
உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
22 நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன்.
நான் உண்மையிலேயே கவலையடைகிறேன்.
என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
23 என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன்.
சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
24 நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன.
நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
25 தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்!
உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
27 நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள்.
உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
28 அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும்.
அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும்.
அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
29 என் பகைவர்களை வெட்கப்படுத்தும்!
அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
30 நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன்.
பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
31 ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார்.
அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
2 உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
3 நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
4 கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
5 என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார்.
6 தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
7 வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார்.
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!
2008 by World Bible Translation Center