Beginning
யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்
28 ஆகாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை. 2 இஸ்ரவேல் ராஜாக்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான். 3 ஆகாஸ் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் நறுமணப் பொருட்களை எரித்தான். தன் சொந்த குமாரர்களை நெருப்பில் எரித்துப் பலிக்கொடுத்தான். அந்நாடுகளில் வாழ்ந்தோர் செய்த பயங்கரமான பாவங்களையே அவனும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டுக்குள் நுழைந்தபோது ஏற்கெனவே அங்கிருந்த பாவமிக்க ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியிருந்தார். 4 மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.
5-6 ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் ராஜா ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் ராஜாவும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம் ராஜா, சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் ராஜாவாகிய பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும். 7 எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் ராஜாவின் குமாரனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா ராஜாவுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.
8 இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள். 9 ஆனால் அங்கே கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவனது பெயர் ஒதேத். சமாரியாவிற்கு வந்த இஸ்ரவேல் படையை ஒதேத் சந்தித்தான். ஒதேத் இஸ்ரவேல் படையினரிடம், “உங்கள் முற்பிதாக்கள் பணிந்த தேவனாகிய கர்த்தர், நீங்கள் யூதாவின் ஜனங்களைத் தோற்கடிக்கவிட்டார். ஏனென்றால் அவர்கள் மீது அவர் கோபமாயிருந்தார். மிக மோசமான முறையில் நீங்கள் யூதாவின் ஜனங்களைக் கொன்று தண்டித்தீர்கள். இப்போது தேவன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். 10 நீங்கள் யூதாவின் ஜனங்களையும், எருசலேமையும் அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்களும் பாவம் செய்திருக்கிறீர்கள். 11 இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று சொன்னான்.
12 பிறகு எப்பிராயீம் தலைவர்கள், இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதைப் பார்த்தனர். அந்தத் தலைவர்கள் இஸ்ரவேல் வீரர்களைச் சந்தித்து எச்சரிக்கைச் செய்தனர். யோகனானின் குமாரன் அசரியா, மெஷிலேமோத்தின் குமாரனான பெரகியா, சல்லூமின் குமாரனான எகிஸ்கியா, அத்லாயின் குமாரனான அமாசா ஆகியோர் அந்தத் தலைவர்களாகும். 13 அவர்கள் இஸ்ரவேல் வீரர்களிடம், “யூதாவிலிருந்து கைதிகளை இங்கே கொண்டுவராதீர்கள். அவ்வாறு செய்தால் அது கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்வது போல் ஆகும். நமது பாவங்களையும் குற்ற உணர்வையும் அது மோசமாக்கும். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபம் கொள்வார்” என்றார்கள்.
14 எனவே, வீராகள் கைதிகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் தலைவர்களிடமும், ஜனங்களிடமும் கொடுத்தனர். 15 உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.
16-17 அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் ராஜா அசீரியா ராஜாவிடம் உதவுமாறு வேண்டினான். 18 பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள், பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். 19 யூதா ஜனங்களுக்கு கர்த்தர் கடுமையான துன்பங்களைத் தந்தார். ஏனென்றால் ஆகாஸ் ராஜா யூதா ஜனங்கள் பாவம் செய்யும்படி தூண்டினான். அவன் கர்த்தருக்கு உண்மை இல்லாதவனாக நடந்துக் கொண்டான். 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார். 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயம், அரண்மனை, இளவரசர்களின் அரண்மனை ஆகியவற்றில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவந்தான். அவற்றை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். எனினும் அது ஆகாசுக்கு உதவவில்லை.
22 இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவிலும் ஆகாஸ் மேலும் மோசமான பாவங்களையே தொடர்ந்து செய்தான். இதனால் கர்த்தருக்கு மிகவும் உண்மையற்றவனாக இருந்தான். 23 தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்து பொருட்களை எடுத்து உடைத்துப் போட்டான் பிறகு அவன் கர்த்தருடைய ஆலய கதவுகளை மூடினான். அவன் பலிபீடங்களைச் செய்து எருசலேமின் ஒவ்வொரு தெரு முனையிலும் வைத்தான். 25 ஆகாஸ் யூதாவின் ஒவ்வொரு நகரங்களிலும் மேடைகள் அமைத்து நறுமணப் பொருட்களை எரித்து அந்நிய தெய்வங்களை தொழுதுகொண்டான். ஆகாஸ் தன் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவனாகிய கர்த்தரை மேலும் கோபமூட்டினான்.
26 ஆகாஸ் தொடக்ககாலம் முதல் இறுதிவரை செய்த மற்ற செயல் எல்லாமும் யூதா மற்றம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 27 ஆகாஸ் மரித்ததும் அவனை அவனது முற்பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்தனர். ஜனங்கள் அவனை எருசலேம் நகரிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் அவனை இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்துக்கருகில் அடக்கம் செய்யவில்லை. ஆகாசின் இடத்தில் புதிய ராஜாவாக எசேக்கியா வந்தான். எசேக்கியா ஆகாசின் குமாரன்.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
29 எசேக்கியா அவனது 25 வது வயதில் ராஜா ஆனான். அவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் அபியாள். இவள் சகரியாவின் குமாரத்தி. 2 அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.
3 எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குக் கதவுகளைப் பொருத்தினான். அதனைப் பலமுள்ளதாக ஆக்கினான். எசேக்கியா மீண்டும் ஆலயத்தைத் திறந்தான். அவன் ராஜாவாகிய முதல் ஆண்டின் முதல் மாதத்திலேயே இதனைச் செய்தான். 4-5 எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒரே மன்றத்தில் கூட்டினான். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி பிரகாரத்தில் அவர்களோடு கூட்டம் போட்டான். எசேக்கியா அவர்களிடம்,
“லேவியர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். பரிசுத்தமான சேவைக்கு உங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தையும் பரிசுத்த சேவைக்குரிய இடமாக ஆக்குங்கள். உங்கள் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவன் அவர். ஆலயத்திற்குச் சொந்தமில்லாத பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள். அப்பொருட்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தமாட்டாது. 6 நமது முற்பிதாக்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். தங்கள் முகங்களை கர்த்தருடைய ஆலயத்திலிருந்து திருப்பிக் கொண்டனர். 7 அவர்கள் ஆலயக் கதவுகளை மூடிவிட்டனர். விளக்குகளை அணைத்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அவரது பரிசுத்தமான இடத்தில் நறுமணப் பொருட்கள் எரிப்பதையும் தகனபலியிடுவதையும் விட்டனர். 8 எனவே, யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீது கர்த்தர் பெரும் கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். மற்றவர்கள் இதனைப் பார்த்து பயந்தனர். யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்குக் கர்த்தர் செய்தவற்றைப் பார்த்து திகைத்துவிட்டனர். அவர்கள் எருசலேம் ஜனங்களுக்காக வெறுப்புடனும் வெட்கத்துடனும் தலையை அசைத்தார்கள். இவையனைத்தும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். இவற்றை உங்களது கண்களாலேயே நீங்கள் பார்க்கலாம். 9 அதனால்தான் நமது முற்பிதாக்கள் போரில் கொல்லப்பட்டனர். நமது குமாரர்களும், குமாரத்திகளும், மனைவியரும் சிறைபிடிக்கப்பட்டனர். 10 எனவே, இப்பொழுது நான், எசேக்கியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன். பிறகு அவர் நம்மோடு மேற்கொண்டு கோபங்கொள்ளமாட்டார். 11 எனவே என் குமாரர்களே, சோம்பேறிகளாக இராதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். கர்த்தர் தனக்கு சேவைசெய்ய உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர், ஆலயத்தில் சேவைசெய்யவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என்று சொன்னான்.
12-14 வேலைசெய்ய ஆரம்பித்த லேவியர்களின் பட்டியல் இது:
கோரா குடும்பத்திலிருந்து அமாசாயின் குமாரனான மாகாத்து என்பவனும், அசரியாவின் குமாரன் யோவேல் என்பவனும்,
மெராரி குடும்பத்திலிருந்து அப்தியின் குமாரன் கீசும் என்பவனும் எகலேலின் குமாரன் அசரியா என்பவனும்,
கெர்சோனிய குடும்பத்திலிருந்து சிம்மாவின் குமாரன் யோவாகு என்பவனும் யோவாகின் குமாரன் ஏதேன் என்பவனும்,
எளச்சாப்பான் சந்ததியிலிருந்து சிம்ரி, ஏயெல் என்பவர்களும்,
ஆசாப்பின் சந்ததியிலிருந்து சகரியா, மத்தனியா என்பவர்களும்,
ஏமானின் சந்ததியிலிருந்து எகியேல், சிமியி என்பவர்களும்,
எதுத்தானின் சந்ததியிலிருந்து செமாயா, ஊசியேல் என்பவர்களும்,
அந்த பட்டியலில் அடங்கும்.
15 பிறகு இந்த லேவியர்கள் தம் சகோதரர்களையும் சேர்த்துக் கொண்டு தங்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் பரிசுத்த சேவைசெய்யத் தயார் செய்துக்கொண்டார்கள். கர்த்தரிடமிருந்து வந்த ராஜாவின் கட்டளைக்கு அவர்கள் பணிந்தனர். சுத்தம் செய்து பரிசுத்தப்படுத்துவதற்காக அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றார்கள். 16 ஆசாரியர்கள் சுத்தம் செய்யும் பொருட்டு ஆலயத்தின் உட்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் கண்ட, சுத்தமில்லாத பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்துப்போட்டனர். அவற்றை அவர்கள் கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் கொண்டுவந்து போட்டனர். பிறகு அவை அனைத்தையும் லேவியர்கள் கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுச்சென்றனர். 17 முதல் மாதத்தின் முதல் நாளில், லேவியர்கள் பரிசுத்தச் சேவைசெய்ய தம்மை தயார் செய்துக்கொண்டனர். அந்த மாதத்தின் எட்டாவது நாள் லேவியர்கள் கர்த்தருடைய ஆலய முற்றத்திற்கு வந்தார்கள். பரிசுத்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தயார் செய்வதற்காக அவர்கள் மேலும் 8 நாட்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்தம் செய்தார்கள். முதல் மாதத்தில் 16வது நாள் அதைச் செய்து முடித்தார்கள்.
18 பிறகு அவர்கள் எசேக்கியா ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “எசேக்கியா ராஜாவே! கர்த்தருடைய ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டோம். தகனபலி கொடுக்க பலிபீடத்தையும் மற்ற பொருட்களையும் தயார் செய்துவிட்டோம். சமூகத்தப்பங்களின் மேஜையையும் அதன் சகல பணிமூட்டுகளையும் சுத்தம் செய்துவிட்டோம். 19 ஆகாஸ் அரசாளும்போது அவன் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இல்லாமல் ஆலயத்தில் உள்ள பல பொருட்களை வெளியில் எறிந்தான். இப்போது நாங்கள் சுத்தப்படுத்தி பரிசுத்தமாகப் பயன்படுகிற அளவிற்கு ஆலயத்தின் உள்ளே வைத்துவிட்டோம். இப்போது அவை கர்த்தருடைய பலி பீடத்தின் எதிரில் உள்ளது” என்றனர்.
20 எசேக்கியா ராஜா நகர அதிகாரிகளைக் கூட்டினான். மறுநாள் காலையில் அவர்களுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்தான். 21 அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும், 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா ராஜா கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள். 22 எனவே, ஆசாரியர்கள் காளைகளைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்தனர். பிறகு அதனைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். பின்னர் செம்மறி ஆட்டுக்கடாக்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்தனர். 23-24 பின்னர் ஆசாரியர்கள் ஆண் ஆட்டுக் கடாக்களை ராஜாவுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஜனங்களும் கூடினார்கள். இவை பாவப்பரிகாரப் பலிக்குரியவை. எனவே ஆசாரியர்கள் தம் கைகளை அவற்றின் தலையில் வைத்துவிட்டு கொன்றனர். ஆசாரியர்கள் அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்து பாவப்பரிகாரம் செய்தனர். அவர்கள் இவ்வாறு செய்ததால் தேவன் இஸ்ரவேலர்களது பாவங்களை மன்னித்துவிட்டார். ராஜா அந்த தகன பலிகளும் பாவப்பரிகாரப் பலிகளும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும் என்றான்.
25 எசேக்கியா ராஜா லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் கைத்தாளங்கள், தம்புருக்கள், சுரமண்டலங்கள் ஆகியவற்றோடு தொண்டுசெய்ய நியமித்தான். இது தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் காட்டிய வழியாகும். இந்த ஆணைகள் கர்த்தரிடமிருந்து தீர்க்கதரிசிகள் மூலம் வந்தன. 26 எனவே லேவியர்கள் தாவீதின் இசைக்கருவிகளோடு தயாராக நின்றனர். ஆசாரியர்கள் தம் பேரிகைகளோடு தயாராக நின்றார்கள். 27 பிறகு எசேக்கியா, பலிபீடத்தின் மேல் தகனபலிகளும், காணிக்கைகளும் கொடுக்குமாறு கட்டளையிட்டான். தகனபலி தொடங்கியதும் கர்த்தருக்காகப் பாடுவதும் தொடங்கியது. எக்காளங்கள் ஊதப்பட்டன. தாவீதின் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. 28 அங்கே கூடியிருந்தவர்கள் பணிந்து நின்றனர். இசைக் கலைஞர்கள் பாடினார்கள். எக்காளங்களை இசைப்பவர்கள் அவற்றை ஊதினார்கள். இது தகனபலி முடியும்வரை நிகழ்ந்தது.
29 பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா ராஜாவும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள். 30 எசேக்கியா ராஜாவும், அவனது அதிகாரிகளும் லேவியர்களை கர்த்தரைத் துதிக்கும்படி கட்டளையிட்டனர். அவர்கள், தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் எழுதிய பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் தேவனைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். அவர்கள் பணிந்து தேவனைத் தொழுதுகொண்டனர். 31 எசேக்கியா, “இப்போது யூதா ஜனங்களாகிய நீங்கள் உங்களையே கர்த்தருக்காகக் கொடுத்துவிட்டீர்கள். அவரண்டைக்கு வாருங்கள். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திரப் பலிகளையும், கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். பிறகு ஜனங்களும் அவ்வாறே தகனபலிகளையும் ஸ்தோத்திரப் பலிகளையும் கொண்டுவந்தனர். விடுப்பட்டவர்கள் எல்லாம் கொண்டுவந்தனர். 32 கூடியிருந்தவர்கள் கொண்டுவந்த தகனபலிகளின் விபரம்: 70 காளைகள், 100 ஆட்டுக்கடாக்கள், 200 ஆட்டுக்குட்டிகள், இவை அனைத்தும் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளாகக் கொடுக்கப்பட்டன. 33 600 காளைகளும் 3,000 செம்மறி ஆடுகளும் ஆட்டுக் கடாக்களும் பரிசுத்த பலிகளாகக் கொடுக்கப்பட்டன. 34 எனினும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்ததால் அவர்களால் தகன பலிகளின் மிருகங்களை வெட்டி தோல் உரிக்க முடியாமல் போனது. எனவே, அவர்களின் உறவினர்களான லேவியர்கள் அவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் வேலையை முடிக்கும்வரையிலும் மற்ற ஆசாரியர்கள் தம்மைப் பரிசுத்தம் செய்யும்வரையிலும் உதவினார்கள். ஆசாரியர்களைவிட லேவியர்கள் கர்த்தருக்கு சேவை செய்தவற்குத் தங்களைத் தயார் செய்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள். 35 தகனபலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், பானங்களின் காணிக்கைகளும் மிகுதியாயிற்று. இவ்வாறு மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை ஆரம்பமாயிற்று. 36 எசேக்கியாவும் ஜனங்களும் தேவன்தம் ஜனங்களுக்காக ஆலயத்தைத் தயார் செய்ததைப்பற்றி மகிழ்ந்தனர். இவ்வளவு விரைவாக கர்த்தர் செய்துமுடித்ததால் அவர்கள் மேலும் மகிழ்ந்தனர்.
எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்
30 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு எசேக்கியா ராஜா செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான். 2 எசேக்கியா ராஜா தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான். 3 அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும். 4 இந்த ஒப்பந்தம் எசேக்கியா ராஜாவையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது, 5 எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை. 6 எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் ராஜாவின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்:
இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா ராஜாக்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார். 7 உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம். 8 உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும். 9 நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார்.
10 தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர். 11 ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர். 12 மேலும், யூதாவில் ஜனங்கள் ராஜாவுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
13 எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது. 14 அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள். 15 பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர். 16 தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 17 அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
18-19 எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான். 20 எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார். 21 இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர். 22 எசேக்கியா ராஜா, எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள்.
23 அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். 24 எசேக்கியா ராஜா 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர். 25 யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர். 26 எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் குமாரனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை. 27 ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது.
எசேக்கியா ராஜா செய்த முன்னேற்றங்கள்
31 பஸ்கா பண்டிகை முடிவடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலிருந்து பஸ்கா முடிந்ததும் யூதாவின் ஊர்களுக்கு வெளியேறினார்கள். அந்த நகரங்களில் இருந்த பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களை நொறுக்கினார்கள். அவை பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதற்கான இடங்களாயிருந்தன. அவர்கள் விக்கிரகத் தோப்புகளை அழித்தனர். அதோடு மேடைகளையும் பலிபீடங்களையும் அழித்தனர். யூதா மற்றும் பென்யமீன் நாட்டில் தொழுகை இடங்களையும் பலி பீடங்களையும் அழித்தனர். ஜனங்கள் இல்லத்திலேயே எப்பிராயீம் மற்றும் மனாசே நாடுகளிலும் பொய்யான தெய்வங்களை தொழுதுகொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழிக்கும்வரைக்கும் ஜனங்கள் இவற்றைச் செய்தார்கள். பின்னர் எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் ஊர்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
2 ஆசாரியர்களும், லேவியர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பான பணி இருந்தது. எனவே எசேக்கியா ராஜா இக்குழுவினர்களிடம் தம் வேலைகளை மீண்டும் செய்யுமாறு கூறினான். எனவே லேவியர்களும், ஆசாரியர்களும் தகனபலிகள் மற்றும் சமாதானப் பலிகள் கொடுக்கும் வேலையைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தின் வாசலில் தேவனைத் துதித்துப் பாடுவது என்றும் ஆலயத்தில் சேவைசெய்வது என்றும் நியமித்தான் ராஜா. 3 எசேக்கியா தனது சொந்த மிருகங்களையும் தகனபலி இடுவதற்காகத் தந்தான். இம்மிருகங்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் செலுத்தப்படும் தகன பலிகளுக்குப் பயன்பட்டன. இம்மிருகங்கள் ஓய்வு நாட்களிலும் பிறைச் சந்திரநாள் பண்டிகைகளிலும் மற்ற சிறப்புக் கூட்டங்களிலும் சர்வாங்க தகன பலிகள் செலுத்த பயன்பட்டன. இவை கர்த்தருடைய சட்டத்தில் எழுதப்பட்டபடியே நடந்தேறின.
4 ஜனங்கள் தம் அறுவடையிலும் மற்ற பொருட்களிலும் ஒரு பகுதியை ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. எனவே எசேக்கியா ராஜா எருசலேம் நகர ஜனங்களிடம் தம் பங்கை அளிக்குமாறு கட்டளையிட்டான். இவ்வாறு ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சட்ட நெறிகளின்படி விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவு செய்தனர். 5 நாடு முழுவதிலும் உள்ள ஜனங்கள் இந்த கட்டளையைக் கேள்விப்பட்டார்கள். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் முதல் பஸ்காவுக்காக தமது அறுவடை, திராட்சை, எண்ணெய், தேன், வயலில் விளைந்த மற்றபொருட்கள் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தனர். 6 யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.
7 இக்குவியல்களை அவர்கள் மூன்றாம் மாதத்தில் (மே/ஜுன்) தொடங்கி ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) முடித்தனர். 8 எசேக்கியாவும் தலைவர்களும் வந்த போது தொகுக்கப்பட்ட குவியல்களைக் கண்டனர். அவர்கள் கர்த்தரையும் அவரது ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களையும் போற்றினார்கள்.
9 பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான். 10 சாதோக்கின் குடும்பத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனாகிய அசரியா என்பவன் எசேக்கியா ராஜாவிடம், “ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் காணிக்கை பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கு உணவு ஏராளமாய் உள்ளது. நாங்கள் எவ்வளவுதான் அதிகமாக தின்றாலும் ஏராளமாக மிகுதியாக உள்ளது. கர்த்தர் உண்மையாகவே தம் ஜனங்களை ஆசீர்வதித்துள்ளார். அதனால் தான் இவ்வளவு மீதியாக உள்ளது.” என்று பதில் சொன்னான்.
11 பின்னர் எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்காக பண்டகச்சாலைகளை அமைக்க கட்டளையிட்டான். அவ்வாறே ஆயிற்று. 12 பிறகு ஆசாரியர்கள் காணிக்கைகளையும், பத்தில் ஒரு பாகத்தையும் கர்த்தருக்கு மட்டுமே கொடுப்பதற்கென்று இருந்த மற்றப் பொருட்களையும் எடுத்து வைத்தார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்தும் ஆலயத்தின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டது. இவற்றிற்கு பொறுப்பாளனாக கொனனியா என்ற லேவியன் இருந்தான். அவனது தம்பியாகிய சிமேயு இரண்டாவது நிலை பொறுப்பாளனாக இருந்தான். 13 கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா ராஜாவும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
14 தேவனுக்கு ஜனங்கள் தாராளமாய்க் கொடுக்கப்பட்ட காணிக்கைகளுக்குக் கோரே பொறுப்பாளியாக இருந்தான். கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட காணிக்கைகளைத் திருப்பி விநியோகிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. கோரே கிழக்கு வாசலுக்குக் காவல்காரனாக இருந்தான். லேவியனாகிய இம்னா என்பவன் அவனது தந்தை ஆவான். 15 ஏதோன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் கோரேவுக்கு உதவியாக இருந்தனர். ஆசாரியர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நகரங்களில் இவர்கள் உண்மையுடன் சேவைசெய்தனர். இவர்கள் வசூலித்த பொருட்களைத் தம் உறவினர்களுக்கும், ஒவ்வொரு ஆசாரியர் குழுவுக்கும் கொடுத்தார்கள். அதே அளவு பொருட்களை அவன் முக்கியம் உள்ளவர்களுக்கும், முக்கியம் இல்லாதவர்களுக்கும் கொடுத்தான்.
16 இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன. 17 வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது. 18 லேவியர்களின் குழந்தைகள், மனைவியர், குமாரர்கள், குமாரத்திகள் ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெற்றனர். இது அனைத்து லேவியர்களுக்கும் அவர் தம் குடும்ப வரலாற்று பட்டியலின்படியே கொடுக்கப்பட்டது. ஏனென்றால் லேவியர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எப்பொழுதும் தம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்பவர்களாகவும் சேவைக்குத் தயாரானவர்களாகவும் இருந்தனர்.
19 ஆசாரியர்களாகிய ஆரோனின் சந்ததியினர்களில் சிலர் லேவியர்கள் குடியிருக்கிற நகரங்களின் அருகில் வயல்களை வைத்திருந்தனர். நகரங்களில் ஆரோனின் சந்ததியினர் மேலும் சிலர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆரோனின் சந்ததியினருக்கும் அவர்களுக்குரிய பங்குப் பொருள்கள் கொடுக்கப்பட்டது. லேவியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் அட்டவணையில் எழுதப்பட்டவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.
20 யூதா முழுவதிலும் இத்தகைய நல்லச் செயல்களை எசேக்கியா ராஜா செய்தான். அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு முன் எது நல்லதோ, எது சரியானதோ, எது உண்மையுள்ளதோ அவற்றைச் செய்தான். 21 அவன் தொடங்கிய அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். தேவனுடைய ஆலய சேவையிலும் சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிற செயலிலும் தேவனைப் பின்பற்றும் முறையிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். எசேக்கியா இவற்றையெல்லாம் தன் முழு இருதயத்தோடு செய்தான்.
2008 by World Bible Translation Center