Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 21-24

21 யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய ராஜா ஆனான். யோராம் யோசபாத்தின் குமாரன். அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் குமாரர்கள். யோசபாத் யூதாவின் ராஜா ஆவான். யோசபாத் தன் குமாரர்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த குமாரன்.

யூதா ராஜாவாகிய யோராம்

யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் குமாரத்தியை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார்.

யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாவையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். 10 அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. 11 யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.

12 எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது:

“தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் ராஜாவாகிய ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. 13 நீயோ இஸ்ரவேலின் ராஜாக்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். 14 எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். 15 நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.”

16 கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். 17 அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். ராஜாவின் வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய குமாரன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ்.

18 இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. 19 பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. 20 யோராம் ராஜாவாகியபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.

யூதாவின் ராஜாவாகிய அகசியா

22 யோராமின் இடத்திற்கு எருசலேம் ஜனங்கள் அகசியாவைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். அகசியா யோராமின் இளைய குமாரன் ஆவான். யோராமின் முகாமை அரபியர்களுடன் சேர்ந்துகொண்டு வந்தவர்கள் தாக்கியபோது, யோராமின் மூத்த குமாரர்களைக் கொன்றுவிட்டனர். எனவே அகசியா மட்டுமே மீதியாகயிருந்ததால் யூதாவின் ராஜாவானான். அகசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அகசியா எருசலேமில் ஓராண்டு ஆட்சி செய்தான். அவனது தாயின் பெயர் அத்தாலியாள். அவள் ஒம்ரியின் குமாரத்தி. அகசியாவும் ஆகாபின் குடும்பத்தினரைப்போலவே வாழ்ந்தான். இவன் இவ்வாறு வாழ்வதற்கு இவனது தாயே காரணமாக இருந்தாள். இவன் தவறு செய்ய அவள் தூண்டினாள். கர்த்தருடைய பார்வையில் அகசியா தீமைச் செய்துவந்தான். இதைத்தான் ஆகாப் குடும்பத்தினரும் செய்துவந்தனர். அகசியாவின் தந்தை மரித்த பிறகு ஆகாபின் குடும்பத்தினர் இவனுக்கு தீய அறிவுரைகளைக் கூறிவந்தனர். அவை அவனுக்கு மரணத்துக்கு ஏதுவாயிற்று, ஆகாபின் குடும்பத்தினர் தந்த அறிவுரைகளை அகசியா பின்பற்றினான். இவன் யோராமோடு சேர்ந்துகொண்டு ஆராமின் ராஜாவாகிய ஆசகேலுக்கு எதிராகச் சண்டையிட ராமோத் கீலேயாத் நகரத்திற்குச் சென்றான். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். இவன் இஸ்ரவேலின் ராஜா. ஆனால் ஆராமியர்கள் போரில் யோராமைக் காயப்படுத்தினர். யோராம் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரெயேல் நகரத்திற்குத் திரும்பிப் போனான். இவன் ஆராம் ராஜாவாகிய ஆசகேலுக்கு எதிராக ராமோத்தில் சண்டையிட்டபோது இக்காயங்களை அடைந்தான். பிறகு யோராமைப் பார்க்க அகசியா யெஸ்ரெயேல் நகரத்திற்கு சென்றான். அகசியாவின் தந்தையின் பெயர் யோராம். இவன் யூதாவின் ராஜா. யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். யோராம் காயப்பட்டதால் யெஸ்ரெயேல் நகரத்தில் இருந்தான்.

யோராமைப் பார்க்க அகசியா சென்றபொழுது, தேவன் அகசியாவிற்கு மரணத்தை விளைவித்தார். அகசியா வந்ததும் யோராமோடு யெகூவைச் சந்திக்கப்போனான். யெகூவின் தந்தை நிம்சி. ஆகாபின் குடும்பத்தை அழிக்க கர்த்தர் யெகூவைத் தேர்ந்தெடுத்தார். யெகூ ஆகாபின் குடும்பத்தைத் தண்டித்துக் கொண்டிருந்தான். அதோடு அவன் அகசியாவிற்கு சேவை செய்த யூதாவின் தலைவர்களையும் அகசியாவின் உறவினர்களையும் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றான். பிறகு யெகூ, அகசியாவைத் தேடினான். அவன் சமாரியா நகரத்திலே ஒளிந்துகொள்ள முயன்றபோது யெகூவின் ஆட்கள் பிடித்துக்கொண்டனர். அவனை அவர்கள் யெகூவிடம் கொண்டுவந்தனர். அவர்கள் அவனைக் கொன்று அடக்கம் செய்தனர். அவர்கள், “அகசியா யோசபாத்தின் சந்ததியான். யோசபாத் தன் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்றினான்” என்று கூறினர். அகசியாவின் குடும்பத்தினருக்கு யூதா முழுவதையும் ஆள்வதற்குரிய பெலன் இல்லாமல்போனது.

அத்தாலியாள் இராணி

10 அத்தாலியாள் அகசியாவின் தாய் ஆவாள். இவள் தன் குமாரன் மரித்துப்போனதை அறிந்ததும், யூதாவில் உள்ள ராஜாக்களின் எல்லா பிள்ளைகளையும் கொன்றுபோட்டாள். 11 ஆனால் யோசேபியாத் அகசியாவின் குமாரனான யோவாசை எடுத்து மறைத்து வைத்தாள். அவள் யோவாசையும் அவனது தாதிகளையும் படுக்கையறைக்குள்ளே ஒளித்தாள். யோசேபியாத் யோராம் ராஜாவின் குமாரத்தி. அவள் யோய்தாவின் மனைவி. யோய்தா ஒரு ஆசாரியன். யோசேபியாத் அகசியாவின் சகோதரி. அத்தாலியாள் யோவாசைக் கொல்லவில்லை. காரணம் அவன் மறைக்கப்பட்டான். 12 யோவாஸ் ஆசாரியர்களோடு தேவனுடைய ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டான். அக்காலக்கட்டத்தில், அத்தாலியாள் அந்நாட்டை இராணியைப்போல ஆண்டு வந்தாள்.

யோய்தா ஆசாரியனும் யோவாஸ் ராஜாவும்

23 ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் குமாரன் அசரியா, யோகனானின் குமாரன் இஸ்மவேல், ஓபேதின் குமாரன் அசரியா, ஆதாயாவின் குமாரன் மாசெயா, சிக்ரியின் குமாரன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள். அவர்கள் யூதா முழுவதும் சுற்றி யூதாவின் நகரங்களில் இருந்த லேவியர்களைக் கூட்டினார்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களையும் கூட்டினார்கள். பிறகு அவர்கள் எருசலேமிற்குச் சென்றனர். அனைத்து ஜனங்களும் கூடி, தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.

யோய்தா அவர்களிடம், “ராஜாவின் குமாரன் ஆட்சி செய்வான். இதுதான் தாவீதின் சந்ததியினரைக் குறித்துக் கர்த்தர் வாக்களித்தது. இப்போது, நீங்களும் செய்ய வேண்டியது இதுதான். ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு நாளில் கடமையாற்றச் செல்லும்பொழுது கதவுகளைக் காவல் காக்க வேண்டும். அடுத்த மூன்றில் ஒரு பங்கினர் ராஜாவின் இருப்பிடத்தைக் காவல் காக்கவேண்டும். மேலும் மூன்றில் ஒரு பங்கினர் அஸ்திபார வாசலைக் காவல் காக்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களில் இருக்கவேண்டும். ஒருவரையும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவைச்செய்பவர்கள். அதோடு பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்களாக. லேவியர்கள் ராஜாவுக்கு அருகில் தங்கயிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாளைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும். மற்றவர்கள் எவராவது ஆலயத்திற்குள் நுழைய முயன்றால் அவர்களைக் கொல்லவேண்டும். ராஜா எங்கே சென்றாலும் அவனோடு நீங்கள் செல்ல வேண்டும்” என்றான்.

லேவியர்களும் யூதா ஜனங்களனைவரும் யோய்தா ஆசாரியன் சொன்னவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்தனர். யோய்தா ஆசாரியக் குழுவிலுள்ள எவரையும் விட்டுவைக்கவில்லை. எனவே ஒவ்வொரு தளபதிகளும் தங்கள் ஆட்களோடு முறைப்படி ஓய்வு நாளில் வந்து முறைப்படி ஓய்வு நாளில் போய்க்கொண்டு இருந்தனர். தாவீது ராஜாவுக்குரிய ஈட்டிகளையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் யோய்தா ஆசாரியன் அதிகாரிகளுக்குக் கொடுத்தான். இந்த ஆயுதங்கள் எல்லாம் தேவனுடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 10 பிறகு யோய்தா ஆட்களிடம் எங்கெங்கே நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தனர். ஆலயத்தின் வலது பக்கத்தில் இருந்து ஆலயத்தின் இடது பக்கம் வரை வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பலிபீடத்தின் அருகிலும் ஆலயத்திலும், ராஜா அருகிலும் நின்றனர். 11 அவர்கள் ராஜாவின் குமாரனை வெளியே அழைத்து வந்து அவனுக்கு முடிச்சூட்டினார்கள். அவனுக்குச் சட்டப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தனர். பிறகு அவர்கள் யோவாசை ராஜாவாக்கினார்கள். யோய்தாவும் அவனது குமாரர்களும் அவனுக்கு அபிஷேகம் செய்தனர். அவர்கள், “ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.

12 ஜனங்கள் ஆலயத்தை நோக்கி ஓடுவதையும் அங்கே அவர்கள் ராஜாவை வாழ்த்துவதையும் அத்தாலியாள் கேட்டாள். அவளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடையே வந்தாள். 13 அவள் ராஜாவைக் கண்டாள், முன்வாயிலுக்கு முன்னால் உள்ள தூணுக்கருகில் ராஜா நின்றுகொண்டிருந்தான். அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனுக்கருகில் நின்றுகொண்டிருந்தனர். அந்த நாட்டு ஜனங்கள் மகிழ்ச்சியோடு எக்காளம் ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளை இயக்கினார்கள். அவர்கள் ஜனங்களையும் துதித்துப் பாடும்படிச் செய்தனர். அத்தாலியாள் இதனைப் பார்த்து தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “துரோகம், துரோகம்” என்று கத்தினாள்.

14 யோய்தா ஆசாரியன் படைத்தளபதிகளை அழைத்தான். அவன் அவர்களிடம், “அத்தாலியாளை பிடித்து வெளியே கொண்டுபோங்கள். அவளை யாராவது பின்பற்றினால், அவர்களைக் கொல்ல உங்கள் வாள்களைப் பயன்படுத்துங்கள்” என்றான். அதோடு ஆசாரியர் வீரர்களிடம், “அத்தாலியாளைக் கர்த்தருடைய ஆலயத்தில் கொன்றுவிடாதீர்கள்” என்று எச்சரித்தான். 15 அத்தாலியாள் ராஜாவின் வீட்டுக் குதிரை வாயிலுக்குள் நுழைய முயன்றபோது வீரர்கள் அவளைப் பிடித்தார்கள். பிறகு அவளை அங்கேயே கொன்றனர்.

16 பிறகு யோய்தா ராஜாவோடும், அனைத்து ஜனங்களோடும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஜனங்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். 17 ஜனங்கள் அனைவரும் பாகால் ஆலயத்திற்குப்போய் அதை இடித்தனர். அவர்கள் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் நொறுக்கினார்கள். பாகாலின் பூசாரியான மாத்தானைப் பலிபீடத்துக்கு முன்பாகவே கொன்றுபோட்டனர்.

18 பிறகு கர்த்தருடைய ஆலயப் பொறுப்புக்கான ஆசாரியர்களை யோய்தா தேர்ந்தெடுத்தான். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். தாவீதே அவர்களுக்கு கர்த்தருடைய ஆலயப் பொறுப்பினைக் கொடுத்துள்ளார். மோசேயின் சட்டத்தின்படியே அவர்கள் கர்த்தருக்குத் தகனபலிகளைத் தந்தனர். தாவீதின் கட்டளைபடியே அவர்கள் மகிழ்ச்சியோடு பாடியவண்ணம் காணிக்கைகளைத் தந்தனர். 19 யோய்தா கர்த்தருடைய ஆலயத்திலுள்ள அனைத்து வாசல்களிலும் காவலர்களை நியமித்தான். அதனால் சுத்தமில்லாதவர்களும் ஆலயத்திற்குள் நுழையாதபடி செய்தான்.

20 யோய்தா படைத்தளபதிகளையும், பெரியவர்களையும், ஆட்சியாளர்களையும், அந்த நாட்டில் வசித்த அனைவரையும் ஒன்றாய்த் திரட்டினான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திலிருந்து ராஜாவை வெளியே அழைத்து வந்து உயர்ந்த வாசல்வழியாக அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அங்கே அவனைச் சிங்காசனத்தின் மேல் அமரவைத்தனர். 21 யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். எருசலேம் நகரம் சமாதானமடைந்தது. ஏனென்றால் அத்தாலியாள் வாளால் கொல்லப்பட்டாள்.

யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான்

24 யோவாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள். யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தனர்.

பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான். யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.

எனவே, ராஜா தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் ராஜா, “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.

முற்காலத்தில் அத்தாலியாளின் குமாரர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண்.

ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் ராஜா கட்டளையிட்டான். பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும். 10 அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர். 11 பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை ராஜாவின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். ராஜாவின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள். 12 பிறகு யோவாஸ் ராஜாவும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திறமைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.

13 வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள். 14 எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை ராஜாவிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.

15 யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது. 16 யோய்தாவை தாவீதின் நகரத்திலே ராஜாக்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.

17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் ராஜா யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை ராஜா கவனித்தான். 18 ராஜாவும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். ராஜாவும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். 19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.

20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான்.

21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி ராஜா கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். 22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் ராஜா நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் குமாரனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.

23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு ராஜாவுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். 24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான். 25 ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் குமாரனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.

26 யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள். 27 யோவாசின் குமாரர்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் ராஜாக்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய ராஜாவானான். அமத்சியா யோவாசின் குமாரன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center