Beginning
9 இஸ்ரவேலர்களின் பெயர்கள் எல்லாம் குடும்ப வரலாற்றில் சேர்க்கப்பட்டது. அந்த குடும்பங்களின் வரலாறு இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
எருசலேம் ஜனங்கள்
யூதாஜனங்கள் கைதிகளாக்கப்பட்டு பாபிலோனுக்குப் பலவந்தமாகக் கொண்டுப் போகப்பட்டார்கள். அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாதபடியால் அந்த இடத்துக்குக் கொண்டுப் போகப்பட்டார்கள். 2 சில இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயத்தில் பணியாற்றும் வேலையாட்களும் முதலில் அங்கு திரும்பி வந்து தங்கள் சொந்த நிலங்களிலும் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
3 எருசலேமில் வாழ்ந்த யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய கோத்திரங்களைச் சார்ந்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:
4 ஊத்தாய் அம்மியூதியின் குமாரன். அம்மியூதி உம்ரியின் குமாரன். உம்ரி இம்ரியின் குமாரன். இம்ரி பானியின் குமாரன். பானி பேரேசின் சந்ததியைச் சேர்ந்தவன். பேரேஸ் யூதாவின் குமாரன்.
5 எருசலேமில் வாழ்ந்த சேலாவின் ஜனங்கள்: அசாயா மூத்த குமாரன். இவனுக்கும் குமாரர்கள் இருந்தனர்.
6 எருசலேமில் வாழ்ந்த சேராவின் ஜனங்கள், அவர்கள் யெகுவேலும், அவர்களின் உறவினர்களும். அவர்கள் மொத்தம் 690 பேர்.
7 எருசலேமில் வாழ்ந்த பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள்: சல்லு மெசுல்லாவின் குமாரன். மெசுல்லா ஓதாவியாவின் குமாரன், ஓதாவியா அசெனூவாவின் குமாரன். 8 இப்னெயா எரோகாமின் குமாரன். ஏலா ஊசியின் குமாரன். ஊசி மிக்கிரியின் குமாரன். மெசுல்லாம் செபதியாவின் குமாரன். செபதியா ரேகுவேலின் குமாரன். ரேகுவேல் இப்னியாவின் குமாரன். 9 பென்யமீன் குடும்ப வரலாறானது, அவர்கள் 956 பேர் எருசலேமில் வாழ்ந்ததாகக் கூறுகின்றது. அவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள்.
10 எருசலேமில் வாழ்ந்த ஆசாரியர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின், 11 அசரியா. அசரியா இல்க்கியாவின் குமாரன். இல்க்கியா மெசுல்லாவின் குமாரன். மெசுல்லா சாதோக்கின் குமாரன். சாதோக் மெராயோதின் குமாரன். மெராயோது அகிதூபின் குமாரன். இவன் தேவனுடைய ஆலயத்தில் மிக முக்கியமான அதிகாரியாக இருந்தான். 12 அதோடு எரோகாமின் குமாரனான அதாயாவும் அங்கே வாழ்ந்தான். எரோகாம் பஸ்கூவின் குமாரன். பஸ்கூ மல்கியாவின் குமாரன். ஆதியேலின் குமாரனான மாசாயும் அங்கிருந்தான். ஆதியேல் யாசெராவின் குமாரன். யாசெரா மெசுல்லாமின் குமாரன். மெசுல்லாம் மெசிலேமித்தின் குமாரன். மெசிலேமித் இம்மெரின் குமாரன்.
13 அங்கே 1,760 ஆசாரியர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிசெய்யும் பொறுப் பாளர்களாகவும் இருந்தனர்.
14 எருசலேமில் வாழ்ந்த லேவியர் கோத்திரத்தைச் சேர்ந்த ஜனங்களின் பட்டியல்: செமாயா அசூபின் குமாரன். அசூப் அஸ்ரீகாமுவின் குமாரன். அஸ்ரீகாமு அசபியாவின் குமாரன். அசபியா மெராரியின் சந்ததியைச் சேர்ந்தவன். 15 பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தானியா ஆகியோரும் எருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். மத்தானியா மிக்காவின் குமாரன். மிக்கா சிக்ரியின் குமாரன். சிக்ரி ஆசாப்பின் குமாரன். 16 ஒபதியா செமாயாவின் குமாரன். செமாயா காலாலின் குமாரன். காலால் எதுத்தூனின் குமாரன். எருசலேமில் ஆசாவின் குமாரனான பெர்கியா வாழ்ந்தான். ஆசா எல்க்கானாவின் குமாரன். எல்க்கானா நெத்தோபாத்தியரின் சிறு நகரங்களில் வாழ்ந்தான்.
17 எருசலேமில் வாழ்ந்த காவலாளர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் ஆகியோரும் அவர்களது உறவினருமே. அவர்களின் தலைவனாகச் சல்லூம் இருந்தான். 18 சிலர் கிழக்கே இருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்தனர். இவர்கள் லேவியரின் கோத்திரத்தின் வழிவந்த காவல்காரர்கள். 19 சல்லூம், கோரேயின் குமாரன். கோரே, எபியாசாவின் குமாரன். எபியாசா, கோராகின் குமாரன், சல்லூம் மற்றும் அவனது சகோதரர்கள் வாசலைக் காத்தனர். அவர்கள் கோராகின் வம்சத்தில் வந்தவர்கள். அவர்களுக்குப் பரிசுத்தக் கூடார வாசலைக் காவல் காப்பது வேலை ஆயிற்று. அதனை அவர்கள் அவர்களின் முற்பிதாக்கள் செய்தது போன்றே செய்து வந்தனர். 20 முன்பு பினேகாசு வாசலைக் காக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தான். பினேகாசு, எலியாசாரின் குமாரன். கர்த்தர் பினேகாசோடு இருந்தார். 21 மெசெலமியாவின் குமாரனான சகரியா பரிசுத்தக் கூடாரத்தின் வாயிலின் காவல்காரனாய் இருந்தான்.
22 பரிசுத்தக் கூடார வாசலைக் கண்காணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 212. அவர்களின் பெயர்கள் சிறு நகரங்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. நம்பிக்கைக்கு உரிய அவர்களை தாவீதும் சீயர் ஆகிய சாமுவேலும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். 23 இந்த வாயில் காவலர்களும் அவர்களது சந்ததியினரும் கர்த்தருடைய ஆலயமாகிய பரிசுத்தக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்று வந்தனர். 24 வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பக்கமும் 4 வாசல்கள் இருந்தன. 25 சில நேரங்களில் வாயில் காவலர்களின் உறவினர்கள் சிறு நகரங்களிலிருந்து வந்து அவர்களுக்குக் காவல் பணிக்கு உதவி செய்தனர். அவர்கள் வருகைதந்த ஒவ்வொரு முறையும் ஏழு நாட்கள் வாயில் காவலர்களுக்கு உதவினார்கள்.
26 நான்கு வாசல் காவலர்களுக்கும், நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய ஆலயத்தின் பண்டகச்சாலை மற்றும் கருவூலங்களைக் காக்கும் பொறுப்பு இருந்தது. 27 அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் இரவில் தங்கியிருந்து காத்தனர். ஒவ்வொரு நாள் காலையிலும் தேவாலயத்தைத் திறப்பதும் அவர்களின் வேலையாய் இருந்தது.
28 சில வாசல் காவலர்களுக்கு, ஆலய பணிக்குரிய பாத்திரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருந்தது. அவர்கள் அவற்றை எண்ணிப்பார்த்தே வெளியே எடுப்பதும் உள்ளே வைப்பதுமாய் இருந்தனர். 29 வேறு சில வாசல் காவலர்கள், மற்ற இருக்கை போன்றவற்றையும் பரிசுத்தமான பாத்திரங்களையும் கவனித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு மெல்லிய மா, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாளிகளாயினர். 30 வாசனைப் பொருட்களால் சிறப்பான தைலத்தைக் கலக்கும் வேலையைச் சில ஆசாரியர்கள் செய்து வந்தனர்.
31 ஒரு லேவியனின் பெயர் மத்தித்தியா. பலியிடுவதற்காக அப்பம் சுடுகிற வேலை அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சல்லூமின் மூத்த குமாரன் மத்தித்தியா. சல்லூம், கோரகியா குடும்பத்தில் வந்தவன். 32 சில வாசல் காப்பவர்கள் கோரகியா குடும்பத்தினர். அவர்களுக்கு ஓய்வு நாள்தோறும் அப்பங்களைத் தயாரித்து மேஜையின் மேல் அடுக்கும் பணி கொடுக்கப்பட்டது.
33 லேவியர்களில் பாடுபவர்களும் குடும்பத் தலைவர்களும் ஆலயத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தனர். அவர்கள் வேறு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இரவும் பகலும் ஆலயத்தில் வேலை இருந்தது.
34 இந்த லேவியர்கள் அனைவரும் அவரவர்கள் குடும்பங்களுக்கு தலைவர்களாக இருந்தனர். தம் குடும்ப வரலாற்றில் குடும்பத் தலைவர்களாக அவர்கள் விவரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
சவுல் ராஜாவின் குடும்ப வரலாறு
35 யெகியேல், கிபியோனின் தந்தை. யெகியேல், கிபியோன் நகரில் வாழ்ந்தான். யெகியேலின் மனைவியின் பெயர் மாக்காள். 36 யெகியேலின் மூத்த குமாரனின் பெயர் அப்தோன். மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் ஆகியோர். 38 மிக்லோத், சிமியாமின் தந்தை. யெகியேலின் குடும்பம், அவர்களது உறவினர்களோடு எருசலேமில் வாழ்ந்து வந்தது.
39 நேர் கீஸின் தந்தை. கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரைப் பெற்றான்.
40 யோனத்தானின் குமாரன் மெரிபால். மெரிபால் மீகாவின் தந்தை.
41 மீகாவிற்கு பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் எனும் குமாரர்கள் இருந்தனர். 42 ஆகாஸ் யாதாவின் தந்தை. யாதா யாராகின் தந்தை. யாராக் என்பவன் அலெமேத், அஸ்மவேத், சிம்ரி ஆகிய குமாரர்களைப் பெற்றான். சிம்ரி மோசாவின் தந்தை. 43 மோசா பினியாவின் தந்தை. பினியா ரப்பாயாவின் தந்தை. ரப்பாயா எலியாசாவின் தந்தை. எலியாசா ஆத்சேலின் தந்தை.
44 ஆத்சேலுக்கு ஆறு குமாரர்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகும். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
சவுல் ராஜாவின் மரணம்
10 பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தோற்று ஓடிப்போனார்கள். கில்போவா மலையில் அவர்கள் வெட்டுண்டு மரித்துப்போனார்கள். 2 சவுலையும், அவனது குமாரர்களையும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டு போனார்கள். அவர்கள், இவர்களைப் பிடித்து கொன்றார்கள். பெலிஸ்தர்கள் சவுலின் குமாரர்களான யோனத்தான், அபினதாப், மல்கிசூவா ஆகியோரைக் கொன்றனர். 3 சவுலைச் சுற்றி போர் பலமடைந்தது. வில் வீரர் அவனை அம்பால் எய்து காயப்படுத்தினார்கள்.
4 பிறகு சவுல் அவனது ஆயுதந்தாங்கியிடம், “உனது வாளை எடு. அதனால் என்னைக் கொல். அதனால் அந்த அந்நியர்கள் என்னைக் காயப்படுத்தமாட்டார்கள். அவர்கள் வரும்போது என்னைக் கேலிச் செய்யமாட்டார்கள்” என்றான்.
ஆனால், சவுலின் ஆயுதந்தாங்கி பயந்தான். அவன் சவுலைக் கொல்ல மறுத்தான். பிறகு சவுல், தனது சொந்த வாளையே தன்னைக் கொல்வதற்கு பயன்படுத்தினான். 5 சவுல் மரித்துப்போனதை ஆயுதந்தாங்கி பார்த்தான். பின் அவனும் தற்கொலை செய்துக்கொண்டான். அவனும் சவுலைப் போலவே தன் வாளின் நுனியிலே விழுந்து மரித்துப் போனான். 6 இவ்வாறு சவுலும், அவனது மூன்று குமாரர்களும் மரித்துப்போனார்கள். சவுலின் குடும்பம் முழுவதுமே மொத்தமாக மரித்துப்போனது.
7 அப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தமது சொந்த படை ஓடுவதைக் கண்டனர். சவுலும், அவனது குமாரர்களும் மரித்துப் போனதைக் கண்டனர். எனவே, இவர்கள் தமது நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். இவர்கள் விட்டுப்போன இடங்களில், பெலிஸ்தர்கள் வந்து நுழைந்தனர். அவ்விடங்களிலே பெலிஸ்தர்கள் குடியேறினார்கள்.
8 மறுநாள், பெலிஸ்தர்கள் மரித்துப்போனவர்களின் உடலில் இருந்து விலைமதிப்புடைய பொருட்களை எடுக்கவந்தனர். அப்போது அவர்கள் சவுல் மற்றும் அவனது குமாரர்களின் உடல்களைக் கில்போவா மலையில் கண்டுபிடித்தனர். 9 பெலிஸ்தர்கள் சவுலின் உடம்பிலுள்ள சில பொருட்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் சவுலின் தலையையும் ஆயுதங்களையும் எடுத்தனர். அவர்கள் தூதுவர்களை அனுப்பி தங்கள் நாடுகளில் உள்ள ஜனங்களுக்கும், பொய்த் தெய்வங்களுக்கும் செய்தியை பரப்பினார்கள். 10 பெலிஸ்தர்கள், சவுலின் ஆயுதங்களைத் தமது பொய்த் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்தனர். சவுலின் தலையைத் தாகோன் ஆலயத்திலே தொங்கவிட்டனர்.
11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்தவற்றைப் பற்றி கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் கேள்விப்பட்டனர். 12 சவுல் மற்றும் அவனது குமாரர்களின் உடல்களைக் கைப்பற்ற தைரியமுள்ள கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் போனார்கள். அவற்றை எடுத்துவந்தனர். அவர்கள், சவுல் மற்றும் குமாரர்களின் எலும்புகளை யாபேசில் ஒரு பெரிய மரத்தடியில் அடக்கம்செய்தனர். பின் ஏழு நாட்கள் உபவாசமிருந்தார்கள்.
13 சவுல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லாதபடியால் அவன் கொல்லப்பட்டான். சவுல் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. 14 அவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கர்த்தரிடம் கேட்பதற்குப் பதிலாக குறி சொல்வோரை நாடினான். அதனால்தான் கர்த்தர் அவனைக் கொன்று ஆட்சியை ஈசாயின் குமாரனான தாவீதிடம் தந்தார்.
இஸ்ரவேலர்களுக்கு தாவீது ராஜா ஆகிறான்
11 இஸ்ரவேலர் அனைவரும் எப்ரோன் நகரத்தில் தாவீதிடம் வந்தனர். அவர்கள் தாவீதிடம், “நாங்கள் உம்முடைய சொந்த சதையும் இரத்தமுமாய் இருக்கிறோம்.” 2 முன்பு, போரில் வழிநடத்தினீர். சவுல் ராஜாவாக இருந்தபோதிலும் நீர் வழி நடத்தினீர். கர்த்தர் உம்மிடம், “தாவீது, நீதான் என் இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பனாக இருப்பாய், என் ஜனங்களின் தலைவன் ஆவாய் என்று சொன்னார்” என்றார்கள்.
3 இஸ்ரவேலரின் தலைவர்கள் அனைவரும் எப்ரோன் நகரில் தாவீதிடம் வந்தனர். தாவீது அவர்களிடம் கர்த்தருக்கு முன்பாக எப்ரோனில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். தலைவர்கள் தாவீதுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் அவன் இஸ்ரவேலருக்கு ராஜா ஆனான். கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் அந்த வாக்குறுதியைக் கூற சாமுவேலைப் பயன்படுத்தினார்.
தாவீது எருசலேமை கைப்பற்றுகிறான்
4 தாவீதும், இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் நகரத்திற்குச் சென்றனர். அப்போது அந்நகரம் எபூசு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த ஜனங்கள் எபூசியர் என அழைக்கப்பட்டனர். நகரத்தில் வாழ்ந்த ஜனங்கள் 5 தாவீதிடம், “எங்கள் நகருக்குள் நீ நுழைய முடியாது” என்றனர். ஆனால் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினான். அது தாவீதின் நகரமாயிற்று.
6 தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் குமாரன். யோவாப் படைத் தளபதியானான்.
7 தாவீது கோட்டைக்குள் தனது வீட்டை அமைத்துக்கொண்டான். அதனால் அது தாவீதின் நகரம் என்ற பெயரைப்பெற்றது. 8 கோட்டையைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து சுற்றுச்சுவர்வரைக்கும் தாவீது நகரத்தை நிர்மாணித்தான். நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தான். 9 தாவீது தொடர்ந்து பெரியவன் ஆனான். சர்வவல்லமையுள்ள கர்த்தர் அவனோடு இருந்தார்.
மூன்று வீரர்கள்
10 தாவீதினுடைய படைவீரர்களின் சிறப்பான தலைவர்கள் பட்டியல் இது. தாவீதின் அரசாங்கத்தில் இவ்வீரர்கள் வல்லமை உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்கு முழுமையாக உதவி அவனை ராஜா ஆக்கினார்கள். இதுவும் தேவன் சொன்னபடியே ஆயிற்று.
11 இதுதான் தாவீதின் விசேஷ வீரர்களின் விபரம்: அக்மோனியின் குமாரன் யாஷோபியாம். யாஷோபியாம், இரதப் படைத் தலைவன். இவன் தனது ஈட்டியால் ஒரே நேரத்தில் 300 பேர்களைக் கொன்றுப்போட்டான்.
12 அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் குமாரன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன். 13 எலெயாசார் தாவீதோடு பாஸ்தம்மீமில் இருந்தான். அங்கு பெலிஸ்தர்கள் போரிடுவதற்காக வந்தனர். அங்கு ஒரு வயல் முழுவதும் பார்லி பயிரிடப்பட்டிருந்தது. இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்குத் தப்பி ஓடினார்கள். 14 ஆனால் மூன்று வீரர்கள் அங்கே வயலில் நின்று தோற்கடித்தனர். இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.
15 ஒருமுறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். அப்போது பெலிஸ்தியர் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டது. முப்பது வீரர்களில் மூன்று பேர் தரையில் ஊர்ந்துப்போய் குகையில் இருந்த தாவீதை அடைந்தார்கள்.
16 இன்னொருமுறை, தாவீது கோட்டையில் இருந்தான். அப்போது பெலிஸ்தர் படைக்குழு ஒன்று பெத்லெகேமில் இருந்தது. 17 அவனது சொந்த ஊரில் உள்ள தண்ணீர் மீது அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. எனவே, அவன் “பெத்லேகேம் வாசல் அருகேயுள்ள கிணற்று தண்ணீர் மீது எனக்குத் தாகமாய் உள்ளது. யாராவது ஒருவர் கொண்டுவந்து தரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான். அவன் உண்மையில் அந்த தண்ணீரின் மீது தாகம் கொள்ளவில்லை. எனினும் அவன் அவ்வாறு பேசிக்கொண்டான். 18 ஆனால் மூன்று பேரும் பெலிஸ்தரோடு வழியில் போரிட்ட பிறகே உள்ளே நுழைய முடிந்தது. அவர்கள் பெத்லேகேம் வாசல் அருகில் உள்ள கிணற்று தண்ணீரைக் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அதனைக் குடிக்க மறுத்துவிட்டான். அதனை கர்த்தருக்கு காணிக்கையாகத் தரையில் ஊற்றினான். 19 பிறகு தாவீது, “தேவனே! என்னால் இத்தண்ணீரைக் குடிக்கமுடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இத்தண்ணீரைக் கொண்டுவந்தனர். இதனைக் குடிப்பது இவர்களின் இரத்தத்தைக் குடிப்பது போன்றதாகும்” என்றான். இதற்காகத்தான் தாவீது அந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தான். இதுபோல பல்வேறு சாகசங்களை மூன்று வீரர்களும் செய்தனர்.
தாவீதின் மற்ற வீரர்கள்
20 மூன்று வீரர்களுக்கும் தலைவனாக அபிசாய் இருந்தான். இவன் யோவாப்பின் சகோதரன். அவன் 300 வீரர்களோடு சண்டையிட்டு தன் ஈட்டியால் அவர்களைக் கொன்றான். மூன்று வீரர்களைப் போன்றே அபிசாயும் பிரபலமாக இருந்தான். 21 இவன் அவர்களைவிட இரண்டு மடங்கு பிரபலமாக இருந்தான். இவன் அவர்களில் ஒருவனாக இல்லாவிட்டாலும் இவன் அவர்களின் தலைவன் ஆனான்.
22 பெனாயா, யோய்தானின் குமாரன், யோய்தா ஒரு வல்லமை மிக்கவன். இவன் கப்சேயேல் ஊரான். பெனாயாவும் வல்லமைகொண்டவன். இவன் மோவாபில் உள்ள இருபலம் பொருந்திய மனிதர்களைப் போரிட்டுக் கொன்றான். ஒருமுறை பனி பெய்துகொண்டிருக்கும் சமயத்தில், அவன் ஒரு குகைக்குள்ளே சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 23 மேலும் அவன் ஒரு எகிப்திய வீரனையும் கொன்றான். அவன் 7 1/2 அடி உயரம் உள்ளவன். எகிப்திய வீரனிடம் இருந்த ஈட்டி மிக நீளமாகவும் கனமுள்ளதாகவும் இருந்தது. அது நெய்கிறவனின் படை மரக்கனதிபோல் பெரிதாய் இருந்தது. பெனாயாவிடம் ஒரு தடிமட்டுமே இருந்தது. பெனாயா அவனிடமுள்ள ஈட்டியைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான். 24 யோய்தாவின் குமாரனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான். 25 இவன், முப்பது வீரர்களைவிடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.
முப்பது வீரர்கள்
26 முப்பது நாயகர்களானவர்கள்:
ஆசகேல், யோவாபின் சகோதரன்; பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் குமாரனான எல்க்கானான்.
27 ஆரோதியனான சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
28 தெக்கோவியனான இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
29 ஊசாத்தியனான சிபெக்காய், ஆகோகியனான ஈலாய்,
30 நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் குமாரன் ஏலேத்,
31 பென்யமீன் வம்சத்தானான இபேயா ஊரைச் சேர்ந்த ரிபாயின் குமாரனான இத்தாயி, பிரத்தோனியனான பெனாய,
32 காகாஸ் நீரோடை நாட்டானான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,
33 பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,
34 கீசோனியனான ஆசேமின் குமாரர்கள்,
35 ஆராரியனாகிய சாகியின் குமாரனான யோனத்தான், ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால்,
36 மெகராத்தியனான எப்பேர், பெலோனியனான அகியா,
37 கர்மேலியனான எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி,
38 நாத்தானின் சகோதரனான யோவேல், அகரியின் குமாரனான மிப்கார்,
39 அம்மோனியனான சேலேக், செருயாவின் குமாரனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,
40 இத்தரியனான ஈரா, இத்தாரியனான காரெப்,
41 ஏத்தியனான உரியா, அக்லாயின் குமாரன் சாபாத்,
42 ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் குமாரன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,
43 மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனான யோசபாத்,
44 அஸ்தரேத்தியனான உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரன் சமா, யேகியேல்,
45 சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனான அவன் சகோதரன் யோகா,
46 மாகாவியரின் குமாரன் எலியேல், எல்நாமின் குமாரன் எலிபாய், யொசவியா, மோவாபியனான இத்மா,
47 மெசோபாயா ஊராராகிய எலியேல், ஓபேது, யாசீயேல் ஆகியோர்.
2008 by World Bible Translation Center