Beginning
திராட்சைத் தோட்ட உவமை(A)
12 மக்களுக்குப் போதிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். “ஒருவன் தன் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டான். அவன் வயலைச் சுற்றி மதில்சுவர் எழுப்பினான். திராட்சை இரசம் உருவாக்க ஒரு குழியைத் தோண்டினான். பிறகு அவன் ஒரு கோபுரத்தையும் கட்டினான். அவன் அத்தோட்டத்தைச் சில விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டான். பிறகு அவன் வேறு தேசத்திற்குப் போய்விட்டான்.
2 “பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான். 3 ஆனால் விவசாயிகள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வெறுங்கையோடு அனுப்பினர். 4 பின்பு வேறொரு வேலையாளைத் தோட்டக்காரன் அனுப்பினான். அந்த விவசாயிகள் அவனைத் தலையில் அடித்தனர். அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர். 5 அதனால் தோட்டக்காரன் மேலும் ஒரு வேலைக்காரனை அனுப்பிவைத்தான். அந்த விவசாயிகள் அவனைக் கொன்று போட்டார்கள். அந்தத் தோட்டக்காரன் மேலும் பல வேலைக்காரர்களை விவசாயிகளிடம் அனுப்பி வைத்தான். விவசாயிகளோ அவர்களில் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டார்கள்.
6 “அந்தத் தோட்டக்காரனிடம் மேலும் ஒரே ஒரு ஆளே இருந்தான். அவன்தான் அவனது மகன். அவன் தன் மகனைப் பெரிதும் நேசித்தான். எனினும் அவன் மகனை விவசாயிகளிடம் அனுப்ப முடிவு செய்தான். கடைசி ஆளாகத் தன் மகனை மட்டுமே அனுப்ப முடியும் என்று எண்ணினான். ‘என் மகனையாவது விவாசாயிகள் மதிப்பார்கள்’ என்று நம்பினான்.
7 “ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் மகன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 8 ஆகையால் அந்த விவசாயிகள் அவனது மகனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர்.
9 “ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன் வேறு என்ன செய்வான்? அவன் தோட்டத்துக்குப் போய் அந்த விவசாயிகளை எல்லாம் கொல்வான். பிறகு அத்தோட்டத்தை வேறு விவசாயிகளுக்குக் கொடுப்பான். 10 உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள்.
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று.
11 கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர். இது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது’” (B)
12 இயேசு சொன்ன இந்த உவமையை யூதத் தலைவர்களும் கேட்டனர். இந்த உவமை தங்களைப் பற்றியது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் இயேசுவைக் கைது செய்ய ஒரு காரணத்தைத் தேடினர். எனினும் அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம் இருந்தது. எனவே, அவர்கள் இயேசுவை விட்டுப் போய்விட்டார்கள்.
யூதத் தலைவர்களின் தந்திரம்(C)
13 பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். 14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரே மாதிரிதான். தேவனின் வழியைப் பற்றிய உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.
15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார். அவர், “எதை எதையோ சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசைக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள். அவர்களிடம் இயேசு, 16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.
17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். அந்த மக்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.
சதுசேயர்களின் தந்திரம்(D)
18 பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். 19 “போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார். 20 ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்துகொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. 21 ஆகவே, இரண்டாவது சகோதரன் அவளை மணந்துகொண்டான். அவனுக்கும் குழந்தைகள் இல்லை. அவனும் இறந்துவிட்டான். இது போலவே மூன்றாவது சகோதரனுக்கும் ஏற்பட்டது. 22 இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். 23 ஆனால் ஏழு சகோதரர்களும் அவளை மணந்திருக்கின்றனர். ஆகவே, மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே அந்தப் பெண் யாருடைய மனைவியாகக் கருதப்படுவாள்?” என்று கேட்டனர்.
24 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. 25 மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள். 26 மக்கள் மரணத்தில் இருந்து எழுவது பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம் வாசித்திருக்கிறீர்கள். மோசே தனது நூலில் முட்செடி எரிந்ததைப்பற்றிச் சொல்லும்போது தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார். ‘நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் தேவனுமாயிருக்கிறேன்’ [a] இவர்கள் உண்மையிலேயே மரித்தவர்கள் அல்லர். 27 அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார்.
மிக முக்கியமான கட்டளை எது?(E)
28 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.
29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ [b] இது முதல் கட்டளை. 31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ [c] என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.
32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. 33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.
34 அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை.
கிறிஸ்து தாவீதின் குமாரனா?(F)
35 பின்னர், இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். “கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர்கள் ஏன் சொல்கிறார்கள்? 36 பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்:
“‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள்.
நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’ (G)
37 தாவீது தானாக அவரை ‘ஆண்டவர்’ என்று அழைக்கிறார். அப்படி இருக்கக் கிறிஸ்து எவ்வாறு தாவீதின் மகனாக இருக்க முடியும்?” என்று இயேசு கேட்டார். ஏராளமான மக்கள் இயேசு சொல்வதைக் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.
இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(H)
38 தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். 39 ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். 40 விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.
கொடுப்பதின் மேன்மை(I)
41 மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். 42 பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள்.
43 இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள். 44 அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்” என்றார்.
ஆலயத்தின் எதிர்கால அழிவு(J)
13 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.
2 இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார்.
3 பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், 4 “இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர்.
5 இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். 6 பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். 7 போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். 8 நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டுக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவில்லை என்று சொல்லும் காலம் வரும். பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். இவை ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனைபோல உருவாகும்.
9 “நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். 10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். 11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார்.
12 “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.
14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள். [d] (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். 15 மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. 16 எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக.
17 “அந்தக் காலம் கருவுற்ற பெண்களுக்கும், கைக் குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக் கொடுமையானதாக இருக்கும். 18 மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள். 19 ஏன்?அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. 20 அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.
21 “அக்காலத்தில் சிலர் ‘அதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர்தான் கிறிஸ்து’ என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். 22 கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் வந்து அநேக அற்புதங்களையும், அரிய செயல்களையும் செய்வார்கள். அவர்கள் இவற்றை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள். அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். 23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு,
“‘சூரியன் இருளாகும்.
சந்திரன் ஒளி தராது.
25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.
வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’ (K)
26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.
28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 29 இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.
32 “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார். 33 கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது.
34 “இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். 35 எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம். 36 வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். 37 நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center