Add parallel Print Page Options

யூத அதிகாரிகளின் தந்திரம்

(மத்தேயு 22:15-22; மாற்கு 12:13-17)

20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.

23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”

என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.

25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.

26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.

Read full chapter