Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 89

எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.

89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
    என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
    உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
    என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.

கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
    வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
    பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
    “தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
    அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
    அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
    உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
    அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
    உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.

11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
    உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
    தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
    உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
    அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.

15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
    அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
    அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
    இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.

19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
    அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
    விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
    எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
    தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
    நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
    அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
    அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
    நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன்.
    அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
    அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
    அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.

30 “அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
    அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த ராஜாவின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
    என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
    நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
    நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
    நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
    சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
    வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
    அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.

38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த ராஜாவிடம் கோபங்கொண்டு,
    அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
    நீர் ராஜாவின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 ராஜாவின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
    அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
    அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் ராஜாவின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
    அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
    உமது ராஜா யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
    நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
    நீர் அவனை அவமானப்படுத்தினீர்.

46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
    எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
    என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
    குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
    ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.

49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
    நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
    கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
    நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.

52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
    ஆமென், ஆமென்!

ஓசியா 2:14-23

14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.

18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மணமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய். 21 அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“நான் வானங்களோடு பேசுவேன்
    அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
22 பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
    அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.
23 நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன்.
    நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன்,
நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன்.
    அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்.”

அப்போஸ்தலர் 20:17-38

எபேசு மூப்பர்களுடன் பவுல்

17 மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான்.

18 மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, “நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள். 19 யூதர்கள் அடிக்கடி எனக்கு எதிராகக் காரியங்களைத் திட்டமிட்டனர். இது எனக்குத் துன்பங்களைத் தந்தது. நான் அடிக்கடி அழுதேன். ஆனால் மிகப் பணிவாக எப்போதும் தேவனுக்கு சேவை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 20 உங்களுக்கு மிகவும் சிறந்ததையே நான் எப்போதும் செய்தேன். இயேசுவைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறினேன். வீடுகளிலும் உங்களுக்குக் கற்பித்தேன். 21 தங்கள் இருதயங்களை மாற்றி, தேவனுக்கு நேராகத் திரும்பும்படி, யூதரும் கிரேக்கருமாகிய எல்லா மக்களுக்கும் நான் கூறினேன். நமது கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைக்குமாறு அவர்கள் எல்லோருக்கும் சொன்னேன்.

22 “ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. 23 துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். 24 நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை.

25 “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். 26 எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். 27 நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. 28 உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. 29 நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். 30 மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். 31 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன்.

32 “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். 33 நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. 34 எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35 நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான்.

36 இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். 37-38 அங்கு அழுகின்ற பெரும் சத்தம் இருந்தது. பவுல் மீண்டும், அவர்கள் தன்னைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறியதால் அம்மனிதர்கள், மிகவும் வருத்தமுடனிருந்தார்கள். அவர்கள் பவுலைக் கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்தனர். அவனை வழியனுப்புவதற்காக அவனோடு கப்பல் வரைக்கும் சென்றனர்.

லூக்கா 5:1-11

பேதுரு, யாக்கோபு, யோவான்

(மத்தேயு 4:18-22; மாற்கு 1:16-20)

கெனெசரேத்து கடலின் அருகே இயேசு நின்றார். மக்கள் அவரைச் சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். தேவனுடைய போதனைகளைக் கேட்க அவர்கள் விரும்பினர். கடற்கரையில் இயேசு இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் தம் வலைகளைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். சீமோனுக்கு உரிய படகில் இயேசு ஏறிக்கொண்டார். படகைக் கரையிலிருந்து கடலுக்குள் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு இயேசு சீ மோனுக்குக் கூறினார். பிறகு மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

இயேசு போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார்.

சீமோன் பதிலாக, “ஐயா, மீன் பிடிப்பதற்காக இரவு முழுவதும் முயன்று பணி செய்தோம். ஆனால் மீன் எதுவும் அகப்படவில்லை. நான் நீருக்குள் வலை வீசவேண்டும் என்று நீர் கூறுகிறீர். நான் அவ்வாறே செய்வேன்” என்றான். மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின.

8-9 தாங்கள் பிடித்த மிகுதியான மீன்களைக் கண்டு மீன் பிடிக்கிறவர்கள் ஆச்சரியப்பட்டனர். சீமோன் பேதுரு இதைக் கண்டபோது இயேசுவின் முன் தலை குனிந்து வணங்கி, “ஆண்டவரே, என்னிடமிருந்து போகவேண்டும். நான் பாவியான மனிதன்” என்றான். 10 செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள். (யாக்கோபும் யோவானும் பேதுருவுடன் சேர்ந்து உழைத்தனர்) இயேசு சீமோனை நோக்கி, “பயப்படாதே! இப்போதிலிருந்து மனிதரை ஒன்று சேர்க்கும்படியாக நீ வேலை செய்வாய், மீனைப்பிடிக்க அல்ல!” என்றார்.

11 அம்மனிதர்கள் படகைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center