Book of Common Prayer
இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.
66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
2 அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
3 அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
4 உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.
5 தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
6 தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
7 தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.
8 ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
9 தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர்.
கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர்.
நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர்.
ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
13-14 எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன்.
நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன்.
உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன்.
இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன்.
15 நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன்.
நான் ஆட்டுக்கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன்.
நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன்.
16 தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள்.
தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
17 நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
18 என் இருதயம் தூய்மையாயிருந்தது.
எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
19 தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார்.
தேவன் என் ஜெபத்தைக் கேட்டார்.
20 தேவனைத் துதியுங்கள்,
தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார்.
தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.
வெண்கலப் பாம்பு
4 ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக்கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். 5 அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக்கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர்.
6 எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். 7 ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான்.
8 கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார். 9 எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர்.
11 நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 12 நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. 13 பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.
14 “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.[a] 15 பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.
16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார்.
118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
5 நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும், மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
17 தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது.
18 ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம்
பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார்.
குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார்.
இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார்.
இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது.
ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில்
அவர் மீண்டும் எழுப்பப்பட்டார்.
19 சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். 20 நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள். 21 இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. 22 இப்போது இயேசு பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் தேவதூதர்களையும், அதிகாரங்களையும், ஆற்றல் வாய்ந்தோரையும் ஆளுகிறார்.
2008 by World Bible Translation Center