Book of Common Prayer
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
புத்தகம் 4
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.
90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
2 தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
3 நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
4 ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
5 நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
6 காலையில் புல் வளரும்,
மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
7 தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
8 எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
9 உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.
136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
2 தேவாதி தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
4 ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
5 வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
6 தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
7 தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
8 தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
9 தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் ராஜாவாகிய ஓகைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
ஓசியாவின் மூலமாக தேவனாகிய கர்த்தருடைய செய்தி
1 பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு வந்த கர்த்தருடைய செய்தி இதுதான். இந்த வார்த்தை யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் இருந்தபோது வந்தது. இது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரனான யெரொபெயாம் என்பவனின் காலத்தில் நடந்தது.
2 இது கர்த்தருடைய முதல் செய்தியாக ஓசியாவிற்கு வந்தது. கர்த்தர், “நீ போய் தன் வேசித்தனத்தினால் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு வேசியை மணந்துகொள். ஏனென்றால் இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் எல்லோரும் வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்ளாக இருந்திருக்கிறார்கள்” என்றார்.
யெஸ்ரயேலின் பிறப்பு
3 எனவே ஓசியா திப்லாயிமின் குமாரத்தியான கோமேரைத் திருமணம் செய்தான். கோமேர் கர்ப்பமடைந்து ஓசியாவிற்கு ஒரு ஆண்மகனைப் பெற்றாள். 4 கர்த்தர் ஓசியாவிடம் “அவனுக்கு யெஸ்ரயேல். என்று பெயரிடு. ஏனென்றால் இன்னும் கொஞ்சக்காலததில் நான் ஏகூவின் வம்சத்தாரை அவன் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் சிந்திய இரத்தத்திற்காகத் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலின் இராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன். 5 அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்” என்றார்.
லோருகாமாவின் பிறப்பு
6 பின்னர் கோமேர் மீண்டும் கர்ப்பமடைந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம், “அவளுக்கு லோருகாமா என்று பெயரிடு. ஏனென்றால் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் காட்டமாட்டேன். நான் அவர்களை மன்னிக்கமாட்டேன். 7 ஆனால் நான் யூதா நாட்டின் மீது இரக்கம் காட்டுவேன். நான் யூதா நாட்டைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் காப்பாற்ற எனது வில்லையோ வாளையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களைக் காப்பாற்ற போர் குதிரைகளையோ, வீரர்களையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களை எனது சொந்த பலத்தால் காப்பாற்றுவேன்” என்றார்.
லோகம்மியின் பிறப்பு
8 கோமேர் லோருகாமாவை பால்மறக்க செய்த பிறகு அவள் மீண்டும் கர்ப்பம் அடைந்தாள். அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். 9 பிறகு கர்த்தர், “அவனுக்கு லோகம்மீ என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.
கர்த்தர் இஸ்ரவேல் தேசத்துடன் பேசுகிறார்
10 “எதிர்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கை கடற்கரையிலுள்ள மணலைப் போன்றிருக்கும். உங்களால் அம்மணலை அளக்கவோ, எண்ணவோ இயலாது. ‘நீங்கள் என் ஜனங்களல்ல’ என்று அவர்களுக்கு சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
11 “பிறகு யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒன்று கூட்டப்படுவார்கள், அவர்களுக்கு ஓர் ஆட்சியாளனை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களது இராஜ்யம் பூமியில் மிகப் பெரியதாக இருக்கும். யெஸ்ரயேலின் நாள் உண்மையில் மிகப் பெரியதாயிருக்கும்.”
2 “பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்’ என்பீர்கள்.”
மக்கதோனியா, கிரீஸில் பவுல்
20 தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி, பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான். 2 மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். 3 அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். 4 சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். 5 பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். 6 புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.
துரோவாவில் பவுல்
7 கர்த்தரின் திருவிருந்தை[a] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். 8 நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. 9 ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.
10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.
மிலேத்துவுக்குப் பயணம்
13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து[b] நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.
சீமோனின் மாமி குணமடைதல்
(மத்தேயு 8:14-17; மாற்கு 1:29-34)
38 இயேசு ஜெப ஆலயத்தில் இருந்து சென்றார். அவர் சீமோனின்[a] வீட்டிற்குச் சென்றார். சீமோனின் மாமியார் மிகவும் உடல் நலமின்றி இருந்தாள். அவளுக்கு கடும் காய்ச்சலாய் இருந்தது. அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு எதையேனும் செய்யும்படியாக மக்கள் இயேசுவை வேண்டினர். 39 இயேசு அவளருகே சென்று நின்று, அவள் நோயைக் குணமாகும்படியாய் கட்டளையிட்டார். நோய் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆரம்பித்தாள்.
பலரையும் குணமாக்குதல்
40 கதிரவன் மறையும் சமயத்தில் மக்கள் தம் நோயுற்ற நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு வகை நோய்களால் துன்புற்றனர். ஒவ்வொரு நோயுற்ற மனிதனையும் அவரது கைகளால் தொட்டு இயேசு குணமாக்கினார். 41 பிசாசின் அசுத்த ஆவிகள் பலரிடமிருந்து வெளியேறின. அவை “நீர் தேவனுடைய குமாரன்” எனக் கூக்குரலிட்டன. ஆனால் அவை பேசாமல் இருக்கும்படியாக அந்த ஆவிகளை இயேசு வன்மையாகக் கண்டித்தார். இயேசுவே கிறிஸ்து என்று அவை அறிந்திருந்தன.
பிற நகரங்களுக்கு இயேசு செல்லுதல்
(மாற்கு 1:35-39)
42 தான் தனித்திருக்கும் பொருட்டு மறு நாள் இயேசு ஓர் இடத்திற்குச் சென்றார். மக்கள் இயேசுவின் வருகைக்காகப் பார்த்திருந்தார்கள். கடைசியில் அவர் இருந்த இடத்தைக் கண்டார்கள். மக்கள் இயேசுவைக் கண்டபோது அவர் போகாமல் இருக்கும்படியாகத் தடுக்க முற்பட்டனர். 43 ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை நான் வேறு நகரங்களிலும் சொல்ல வேண்டும். அதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்.
44 பின்னர் யூதேயாவில் உள்ள ஜெப ஆலயங்களில் இயேசு போதித்தார்.
2008 by World Bible Translation Center